கடந்த ஞாயிறு அன்று நீயா நானா? பார்த்திருப்பீர்கள். சமையல் செய்வதில் மனைவிக்கு உதவுவேன் என்று பெருமையுடன் சொல்பவர்கள் ஒருபுறம். உதவ மாட்டேன் என்று அகங்காரத்துடன் சொல்பவர்கள் இன்னொரு புறம்.
தர்க்க ரீதியாக மனைவிக்கு உதவமாட்டேன் என்று சொல்பவர்கள் நிச்சயம் வெற்றி பெற முடியாது. கோபிநாத் மனைவிக்கு உதவுபவர்கள் பக்கம்தான் பேசுவார் என்பது தெரிந்ததே. கோபிநாத் மட்டுமல்ல யாராக இருந்தாலும் அதைத் தான் செய்திருப்பார்கள்.மனைவிக்கு உதவத் தேவை இல்லை என்று சொல்லி பெண்களுக்கு எதிரானவன் நான் என்று காட்டிக் கொள்ள யார்தான் விரும்புவார்கள்?. அப்படி வாதிட வந்தவர்களும் தன் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நிகழ்ச்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். டிவியில் தலைகாட்டலாமே என்றுதான் தோற்கும் அணியில் இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்திருப்பார்கள். நியாயமான காரணங்கள் அவர்கள் பக்கம் இல்லை என்று தெரிந்தும், அவர்களை அழைத்து விட்டு கண்டிக்கிறேன்! அனுமதிக்க மாட்டேன் என்று சொல்வதை தவிர்த்திருக்கலாம்.
இரு தரப்பிலும் பெண்களையும் அழைத்து பேச வைத்திருந்தால் அவர்கள் கருத்தையும் அறிந்திருக்க முடியும். அல்லது உதவுபவர்கள் தரப்பினரை மட்டும் அழைத்து மனைவிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்தி இருக்கலாம்.
தலைப்பு வேறு மாதிரியும் வைத்திருக்கலாம். பெண்களுக்கு சமையலில் உதவுபர்கள் என்று மனைவியோடு தாய், சகோதரி இவர்களையும் இணைத்திருக்க வேண்டும். மனைவிக்கு சமையலில் உதவி செய்யும் கணவர்கள் உண்டு. தாயைப் புகழ்ந்து தள்ளும் ஆண்கள் சமையலுக்கு தாய்க்கு நிச்சயமாக உதவி இருக்க மாட்டார்கள். நமது குடும்பச் சூழ்நிலைகளில் தாய் ஒரு போதும் தன் மகனை சமையல் கட்டுக்கு அழைப்பதில்லை. விதி விலக்குகள் ஏதேனும் இருக்கலாம்.
இதில் மனைவிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.மனைவிக்கு சமையலில் உதவி செய்வதில் நான் பெருமை அடைகிறேன் என்று சொல்பவர்கள். என்றேனும் அவர்கள் தாய்க்கோ சகோதரிக்கோ சமையலில் உதவி செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
எந்தக் குடும்பத்திலும் தாய் தன் மகனுக்கு சமையல் செய்ய கற்றுக் கொள்ள வற்புறுத்துவது இல்லை. தாய் தன் ஆண் பிள்ளைகளுக்கு சமையலில் பெண்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருந்தால் பிற்காலத்தில் அவர்கள் மனைவிக்கு உதவ எந்த தயக்கமும் இன்றி சமையல் அறையில் நுழைவார்கள்.
ஆண் பெண் சமத்துவம் உள்ள மேலை நாடுகளில் கூட ஆண்கள் சமைக்க உதவுவார்களே
தவிர முழு சமையலும் வீட்டில் செய்யும் ஆண்கள் இருப்பார்களா? தெரியவில்லை.
சமையல் தொழிலையே பிரதானமாகக் கொண்டவர்கள் கூட வீட்டில் மனைவி/தாய்க்கு உதவுவார்கள் என்று சொல்ல முடியாது.
திருமணத்திற்கு முன்பாக அம்மாவுக்கு காய்கறி வாங்கிக் கொடுக்கவாவது சென்றிருப்போமா? (அதுக்கு அப்பா போவார்?) திருமணத்திற்குப் பின் முதலில் மளிகைக் கடைக்கு காய்கறிக் கடைக்கு சேர்ந்து செல்வோம் பின் தனியாகவும் செல்வோம். இது நடுத்தரக் குடும்பங்களில் வழக்கமாக நடை பெறுவதுதான்..வேலைக்கு செல்லும் பெண்களின் கணவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அங்கும் செய்யாமல் இருந்தால் அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
அதுவும் மனைவி ஆரம்பத்திலேயே இதை வற்புறுத்தினால்தான் ஆண்கள் செய்வார்கள். பின்னர் அது பழக்கமாகிவிடும்,மனைவி உதவி கோரவில்லை என்றால் கணவன் கண்டு கொள்ள மாட்டான். ஆனால் கணவன் செய்யும் சிறு உதவிகள்கூட மனைவியை நிச்சயமாக மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை. அதுவும் அவர்கள் உடல் நலமின்றி இருக்கும்போது செய்யும் உதவிகள் நிச்சயம் நெருக்கத்தை இன்னும் மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. டீ போட்டுக் கொடுத்தால் கூட அவர்கள் முகம் மலரும்.
சமயலறை பெண்களுக்கானது என்பது நமது சமூகத்தின்
சமயலறை பெண்களுக்கானது என்பது நமது சமூகத்தின்
நெடுங்கால நடைமுறை. ஆண்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இதில் வரும் மாற்றம் தவிர்க்க இயலாதது.
நம் சமுதாயம் ஆணாதிக்க சமுதாயம். இதில் ஆணுக்கொரு நீதி பென்னுகொரு நீதி என்றுதான் இருக்கிறது. பெண்ணையும் சமமாக மதிக்க வேண்டும் என்று அறிவு சொல்லும். ஆனால் மனம் அதை எளிதில் ஏற்காது. இப்போது மாற்றம் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் முழுமையான மாற்றம் நடை பெற இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும்.
***************************************************************************************
***************************************************************************************