குட்டிப் புலம்பல்
பிடுங்குவதற்காகவே ஏகப்பட்ட ஆணிகள் அடிக்கப்பட்டதால் வலைப்பக்கம் கடந்த இரண்டு மாதங்களாக சரியாக வர இயலவில்லை. இக்காலத்தில் தமிழ் வலையுலகம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்ததாக தகவல் கிடைக்க நெஞ்சு பொறுக்கமுடியாமல் மீண்டும் வந்து விட்டேன் .
எந்த நேரத்தில் நான் ரொம்ப நல்லவன் என்ற பதிவை எழுதினேனோ தெரியவில்லை. பணியில் சில மாற்றங்கள்.அருகில் இருந்தும் அரை அடி சுவற்றுக்கு அப்பால் எனக்கு அதிர்ச்சி அளிக்கப் போகும் செய்தி தயாராவதை அறியாதவனாக இருந்தேன்.யாருக்கோ நன்மை செய்ய பாதிப்பு எனக்கு. நல்லவனாய் எப்போதும் இருத்தல் நல்லதல்ல என்பதை இது உணர்த்தினாலும் வேறு வழியில்லை. கொஞ்சம் சீறி இருக்கவேண்டும். ஆனால் முடியவில்லை. மறுப்பு சொல்லாமல் எதையும் செய்வது நமக்கே எதிராக அமைந்து விடுகிறது. முகஸ்துதிகளும் சமாதானங்களும் என் வாயை அடைத்து வைத்திருந்ததது என்ன செய்வது?
எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நன்றாகவே நடந்தது.
சரி விட்டுத் தள்ளுவோம்!
******************************************************************************
சூப்பர் சிங்கர் ஜூனியர் 3
ஹீ மேன்! I am the master of the universe என்று கத்தியபடி கற்பனையில் மிதந்து கொண்டே கேட்டை திறப்பான் முகத்தில் குறும்பு கொப்பளிக்கும் அந்த சிறுவன். அவன் அம்மா தலையில் தட்டி அண்ணாச்சி கடைக்கு கால் கிலோ கருப்பு புளி மஞ்சத்தூள்வாங்கிட்டு வா என்று பை கொடுத்து அனுப்புவார். அவனும் போகும்போது
"கால் கிலோ கருப்பு புளி மன்சாத் தூளுடா! கால் கிலோ கருப்பு புளி மஞ்சாத் தூளுடா! என்று பாடிக் கொண்டே கடைக்காரரிடம் கேட்க என்ன டா வா என்பது போல் பார்க்க டாவுக்கு பதிலாக அண்ணா என்று சொல்லி விடு
" கால் கிலோ கருப்பு புளி மஞ்சாத் தூளுணா" என்று பாடுவான் பொருட்கள் வாங்கிக் கொண்டதும் மீண்டும் டா போட்டு பாட ஹேய் என்று விரட்டுவார். இப்படிப் பட்ட பசங்க உங்க வீட்டில இருந்தா இங்க அனுப்பி விடுங்க என்று சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 க்கு விஜய் டிவியில் ஒரு விளம்பரம் பார்த்திருப்பீர்கள். என்ன ஒரு ரசனையான விளம்பரம்.குழந்தைகள் மட்டுமல்ல நம்மையும் ஈர்த்து விடுகிறது விளம்பரம்.
விளம்பரத்தின் மூலம் மக்களைக் கவர்வது ஒரு கலை. நல்ல கற்பனை வளமும் படைப்பாற்றல் உள்ளவர்களே நல்ல விளம்பரங்களை உருவாக்குகிறார்கள். அவ்விளம்பரங்கள் நம்மையும அறியாமல் நம் மனதில் இடம் பிடித்து விடுகின்றன அந்த தந்திரத்தில்தான் நாம் ஏமாந்தும் விடுகிறோம்.
இதோ அந்த விளம்பரம்
*********************************************************************************
நடிகையர் திலகம் சாவித்திரி
சிலருடைய முகங்களில் எப்போதும் ஒரு மென்சோகம் இழையோடிக் கொண்டிருக்கும். இதை நாம் அன்றாடம் சந்திக்கும் சிலரிடத்தும் காணமுடியும். தொலைக் காட்சியில் நடிகையர் திலகம் சாவித்ரியைப் பார்க்கும் போதேல்லாம் மகிழ்ச்சியாக (ஆடிப் பாடும் காட்சி என்றாலும்) அவர் முகத்தில் மோனோலிசா ஓவியத்தில் தெரிவது போல மெல்லிய சோகம் படர்ந்திருப்பதுபோல் எனக்கு தோன்றும். ( நடிகை சோனியா அகர்வாலின் முகமும் அப்படியே)
சமீபத்தில் காட்சிப்பிழை திரை என்ற இணைய இதழில் சாவித்திரி பற்றிய கட்டுரை ஒன்று படித்தேன். ராஜநாயகம் என்பவர் எழுதிய இக்கட்டுரை சாவித்ரியின் திரையுலக வாழ்க்கையை சுருக்கமாக உருக்கமாக எடுத்துரைக்கிறது.
சாவித்திரி தன் 16 வயதில் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார்.ஜெமினி தன்32 வயதில் மூன்றாவது மனைவியாக சாவித்ரியை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் ரகசிய வாழ்க்கையே வாழ வேண்டி இருந்தாதாம். முதல் மனைவியான பாப்ஜி கண்டுகொள்ளாமல் இருந்தாலும் இன்னொரு மனைவி புஷ்பவல்லி (இவரைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை) கடும் குரோதம் கொண்டதாக தெரிகிறது. சாவித்திரி மீது காரேற்றும் அளவுக்கு சென்றதாக சொல்லப் படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மையோ?
ஜெமினி சாவித்திரி திருமணம் 4 ஆண்டுகள் வரை ரகசியமாகே இருந்ததாம். இந்த நெருக்கடியான காலக் கட்டத்திலும் நடிப்புத் திறன் இம்மியளவும் குறையவில்லை; பிரமிக்கிற வைக்கிற நேர்த்தியான நடிப்பு என்று ஸ்லாகித்துக் கொண்டு போகும் இந்த கட்டுரையைப் படிக்கும்போது இரக்கமும் பரிதாபமும் கலந்த உணர்வு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை .புகழ் பெற்ற நடிகைகள் பலரின் வாழ்க்கை இப்படி பரிதாபமாக இருப்பது இன்று வரை தொடர்வது வேதனைதான். சாவித்ரியின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவரும் ஒரு காரணம் என்ற போதிலும் ஏனோ ஜெமினி கணேசன் மீது எரிச்சலும் கோபமும் ஏற்பட்டது.
தொடர்ந்து முழுமையாகப் படிக்க விரும்புவர்கள் இந்த இணைப்பிற்கு செல்லலாம்
நடிகையர் திலகம் சாவித்திரி
நன்றி: காட்சிப்பிழை
*********************************************************************************
வெட்டி வேலை
என் பேரில் எத்தனை பேர் இணையத்தில இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக கூகுள் பண்ணிப் பார்த்ததில் ஏகப்பட்ட முரளிதரன்கள் கணினித் திரையில் காட்சி தந்து என் தலையில் குட்டிவிட்டு சென்றார்கள் . அவர்களில் ட்விட்டரில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு முரளிதரன் இந்த முரளிதரனை கவர்ந்துவிட்டார். தன்னை இளையராஜாவின் இசை வெறியன் என்று சொல்லிக் கொள்ளும் அந்த முரளிதரனுடைய டுவீட் பக்கத்தில் 9000 மேற்பட்ட டிவீட்டுகள் கொட்டிக் கிடக்கிறது. இன்னமும் பேச்சிலர் சந்தோஷப் பட்டுக் கொள்ளும் (நியாயம்தானே?) இவரது டுவீட்டுகள் என்னை ஈர்த்தன. நாமும் டுவீட்டலாமோ என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டன. சுவாரசியமாக கீச்சுவது ஒரு கலை. முரளிதரனின் சில டுவீட்டுகளை பார்க்கலாம்
- ஜென்ட்ஸ் டாய்லெட்ல அணித்தா ஐ லவ் யூ ன்னு கிறுக்கி வைக்காறானுங்க. அனிதா ஏண்டா அங்க வரப் போறா?
- காதல் வாய்த்தவன் அதிர்ஷ்டசாலி.சாப்பிட்டதுக்கு பில்லு கட்டும் காதலி வாய்த்தவன் பாக்கியசாலி
- தயவுசெஞ்சு புகையிலை பொருட்கள் உபயோகப் படுத்தறதை நிறுத்தி தொலைங்கடா இந்த முகேஷ் தம்பி தொல்லை தாங்க முடியல
- கொலைசெஞ்ச பாடிய மறைச்சு வைக்க சரியான இடம் கூகுள் சர்ச் ரிசல்ட்ல ரெண்டாவது பக்கம்தான் யாரும் எட்டி பாக்க மாட்டாங்க
- உசுரைவிட மசுருதான் பெருசுன்னு நினைக்கறவந்தான் ஹெல்மட் போடாம போறான்
- அமெரிக்கா கூட போட்டி போடறதை வலது பக்கம் வண்டி ஒட்டித்தான் நம்மாளுங்க நிருபிக்கறாங்க
- பேச்சிலர் அவஸ்தைகள்: துவைக்க தேவைப்படாத துணி எங்க கிடைக்கும்?
- மனிதனால சையனைட் விஷத்தைக் கூட சாப்பிட முடியும் ஆனா ஒரு தடவைதான்.
- தூங்குவதற்கு முன்னாடி தூங்கப் போறேன்னு சொல்லலாம். எழுந்திருக்கிறதுக்கு முன்னாடி முழிக்கப் போறேன்னு சொல்ல முடியுமா?
- கூட்டினாலும் பெருக்கினாலும் ஒண்ணேதான் வருது-குப்பை
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
நன்றி: முரளிதரன் இணைப்பு :https://twitter.com/thoppi_az
***************************************************
பொருட் பிழையா?
மேலே உள்ள படத்தில் தினமணியில் வெளியான செய்தித் தலைப்பை படித்துப் பாருங்கள். உண்மையில் அந்த வாக்கியம் சரிதானா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது.
மனைவியோடு சேர்ந்து நண்பர்களையும் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் என்று பொருள்படுவது போன்றும் எனக்கு தோன்றுகிறது. "நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன்" என்று இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழாசிரியர்களும், புலமை உள்ளவர்களும் இன்னமும் தெளிவாக சொல்லமுடியும் தினமலர் பத்திரிகையிலும் இது போன்ற சொற்றொடர் பிழைகளை பார்த்திருக்கிறேன். இவற்றை சரிபார்க்க தமிழ் படித்தவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் என்ன?
உங்கள் கருத்து என்ன?
மனதை தொட்ட கவிதை
அறியா மந்திரம்
புயலைப் போல
மேல் மூச்சு வாங்கி
புகை நுகர்ந்து செவி கிழிக்கும்
பம்பை சத்தம் சூழ
கற்பூர சுவாலையை நாவுக்குள் அடக்கி
பரிதாப மொழியால் சப்தித்து
ஆக்ரோஷமாய் காட்சி அளித்து
சுத்துபட்ட எட்டு கிராம சனங்களும்
கன்னம் தொட்டு சேவித்து நிற்க
ஊருக்கெல்லாம் குறி சொல்லும்
கோடி வீட்டு சாமிக்கு
ஏனோ தெரியவில்லை
போலியோவால் முடங்கிய
தன் மகளின் கால்களை
சரி பண்ணும் வித்தை மட்டும்
*****************************
கொசுறு : 1. இதை எழுதியவர் லட்சுமணன் என்பவர்
2. இக்கவிதை வீடு திரும்பல் என்ற கவிதைத்
தொகுப்பில் இடம் பெற்றுள்ளது
3. இப்போது இவர் உயிருடன் இல்லை
4. ஹீமோ பீலியாவால் 25 வயதிலேயே மரணமுற்ற
லட்சுமனன் பிரபல பதிவர் மோகன் குமாரின் நெருங்கிய
நண்பர்
5. லட்சுமணனின் நினைவாகவே தனது வலைப்பூவிற்கு
வீடு திரும்பல் என்று பெயர் வைத்ததோடு
ஒவ்வோராண்டும் நற்பணிகளை செய்து வருகிறார்
6. இக் கவிதை சுஜதாவின் பாராட்டையும் பெற்றிருக்கிறது
********************************************************************************