மழை காரணமாக பள்ளிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது அனைவரும் அறிந்ததே. இவ்வளவு விடுமுறை தேவையா? மாணவர் படிப்பு பாழாகிறதே. அரையாண்டு தேர்வுகள் தள்ளிப் போகிறதே . இழந்த பாடத்தை ஈடுகட்டுவது எப்படி என்று கவலைப் படத் தொடங்கி விட்டனர் சிலர் இத்தனை நாட்கள் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறதே என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர் பலர் விடுமுறை என்றால் மாணவர்களுக்கு மகிழ்ச்சிதானே (சில ஆசிரியர்களுக்கும்தான்) குறிப்பாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிறையில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற்றது போன்ற உணர்வை காண முடிந்தது.
அது கிடக்கட்டும்! விடுமுறையால் படிப்பு பாதிப்பா? இதோ இந்த மாணவன் சொல்வதைக் கேட்போம்
ஒரு மாணவனின் குரல்
மாணவர்கள் படிப்பு பாதிப்பாம்!
புலம்பிக் கொண்டிருக்காதீர்கள் பெருசுகளே!
மழை கற்றுக் கொடுக்காததையா
ஆசிரியர் கற்றுக் கொடுத்து விடப் போகிறார்?
.
ஆர்க்கிமெடிஸ் தத்துவத்தையும்
மிதத்தல் விதிகளையும்
அறிவியல் ஆசிரியரை விட
நன்றாகவே சொல்லித் தந்தது மழை!
.
ஆற்றங்கரை,
நாகரீகங்களை வளர்த்த
வரலாற்றை பாடத்தில் படித்தோம்.
நாகரீகம்
ஆற்றங்கரைகளை அழித்த வரலாறு
மழை தானே சொல்லியது
கொள்ளளவும், செ.மீ, .டிஎம் சி கணிதப் பாடத்தை
கச்சிதமாக கற்பித்துக் காட்டியது மழைதானே!
ஒண்டிக்கொள்ள இடமின்றி தவித்தபோது
நிவாரணம் செய்ய வந்தோரால்
அரசியலும் கொஞ்சம் அறிய முடிந்ததே!
வெள்ளம் பெருக்கெடுத்துப் பரவிய போது
புவியியல் பாடமும் புரிந்து போனது
எந்த பள்ளிப்பாடத்தினாலும்
அறிய முடியாத
நல்லமனம் படைத்தோரை
மழைதான் அடையாளம் காட்டியது! .
இத்தனை பாடங்கள் போதாதா?
இன்னொரு முறை சொல்லாதீர்!
மழை விடுமுறையால்
படிப்பு பாழாய்ப் போனதென்று!
*************************
ஒரு பாமரனின் மழை நாட்கள்
(மைதிலி கஸ்தூரி ரங்கனின் ஒரு பதிவுக்கு நான் இட்ட கருத்தின் சிறு நீட்சி) மழை
முதல் நாள் மகிழ்ச்சி
இரண்டாம் நாள் இனிமை
மூன்றாம் நாள் முணுமுணுப்பு.
நான்காம் நாள் நடுக்கம்
ஐந்தாம் நாள் அச்சம்
ஆறாம் நாள் ( மழை நின்றாலும்) அவதி
ஏழாம் நாள் (நிவாரணத்திற்காக) ஏக்கம்
எட்டாம் நாள் எதிர்பார்ப்பு
ஒன்பதாம் நாள் ஓய்வு
பத்தாம் நாள் .....
போங்கப்பா பொலம்பிகிட்டே
இருக்க முடியுமா?
பொழைப்பை பாக்க வேணாமா?
