கடந்த திங்கள்(05.01.2015) மாலையில் அலுவலகத்திலிருந்து புறப்படும்போது ஒரு தொலைபேசி. சாரு நிவேதிதாவின் நூல் வெளியீட்டு விழாவிற்கு செல்கிறேன் வருகிறீர்களா என்றார் கணேசன். உடன் பணியாற்றுபவர்; நூல்கள் இலக்கியம் வலைப்பதிவு என்று பேசும் ஒரே அலுவலக ந(ண்)பர். சென்னையில் எங்கு நடந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆர்வத்துடன் செல்பவர். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப நெடு நேரம் ஆகி விடுகிறது என்பதால் அவர் அழைக்கும் போதெல்லாம் தவிர்த்து விடுவேன். இம்முறை ஆர்வம் மேலோங்க இருவரும் காமராஜர் அரங்கத்தை அடைந்தோம் நிகழ்ச்சி தொடங்கப் படவில்லை.வெளியே சாருவின் பிரதான சீடர் அராத்து இங்கும் அங்கும் உலாத்திக் கொண்டிருந்தார். சாரு வெளியே நின்று கொண்டிருக்க டீயும் சமோசாக்களும் விநியோகிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சாரு ஒரு வி.ஐ. பிக்காக காத்திருக்க அந்த நபரும் வந்து சேர அவரை வரவேற்று உள்ளே அழைத்து செல்லப்பட்டார். அழைப்பிதழ் பார்க்காததால் அவர் யாரென்று சட்டென்று அறிய முடியவில்லை. ஆனால் பார்த்த முகமாக இருந்தது. நண்பர் சொன்னதும் தெரிந்தது.அட! தெகல்கா புகழ் தருண் தேஜ்பால்.
அவசரமாக டீ சமோசா சாப்பிட்டு விட்டு நாங்களும் அரங்கில் நுழைந்தோம். எஸ் ராமகிருஷ்ணன் மனுஷ்யபுத்திரன் (எழுத்தாளர் பாலகுமாரனும் வந்திருந்தார்) போன்ற பிரபலங்கள் முன் வரிசையில் அமர்ந்திருக்க அவர்களுக்கு ஒரு வணக்கம் போட்டு விட்டு இடம் பார்த்து அமர்ந்தோம். உரைக்கும் அளவுக்கு ஏ.சி இருந்தது. நிறைய கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அரங்கம் முழுதையும் ஒரு நோட்டம் விட்டேன். 500 பேர் இருக்கலாம். கொசுக்களுடன் சேர்ந்து 1500 ஐ தாண்டும். மேடையின் பின்னணியில் சாரு விதம் விதமான தோற்றங்களில் காட்சி அளித்துக் கொண்டிருந்தார். எல்.சி.டி ப்ரொஜக்டர் தயாராக இருந்தது. ஏதோ நூல் பற்றி ஏதோ காட்டப் போகிறார்கள் என்று நினைத்தேன்.
அராத்து தொகுப்பாளர்களாக மூவரை அழைத்தார். முதலில் வந்தவர் வெண்பா என்று நினைக்கிறேன். தொகுத்தளிக்க வந்த வெண்பா இதோ இந்த படத்தை பாருங்கள் இதுதான் சாருவின் வாழ்க்கைமுறை என்றார். நான் ஏதோ சாருவின் இளவயது வாழ்க்கையை பேசப்போகிறது அந்த வீடியோ என்று நினைத்தேன். ஆனால் இரண்டு சுஃபி பாடல் ஒளி பரப்பப்பட்டது . புரியாத மொழியில் பாடல் இருந்தாலும் இசையும் தாளமும் நன்றாகவே இருந்து , ஆனால் பாடலின் நீளம் அதிகமாக இருந்ததால் எப்போது முடியும் என்று காத்திருந்தேன். இதற்கும் சாருவுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் புரியவில்லை. இது இந்த நிகழ்ச்சிக்கு அவசியம்தானா என்று தோன்றியது இசையும் பயணமும் எனக்கு மிகவும் பிடித்தமானது என்று பின்னர் தனது பேச்சின்போது குறிப்பிடுவதற்காகவே இது காட்டப்பட்டது என்று இதன் தாத்பர்யத்தை உணர்ந்தேன்.
தருண் தேஜ்பால், சன் டிவி விவாத மேடைநடத்தும் நெல்சன்,அமிர்தம் சூர்யா , ஆர். ராமகிருஷ்ணன்(எஸ்.ராமகிருஷ்ணன் அல்ல) மற்றும் சாரு மட்டுமே மேடைக்கு அழைக்கப்பட்டனர். மனுஷ்ய புத்திரன் எஸ்.ராமகிருஷ்ணன் மேடையில் அமரவில்லை என்பதால் இவர்கள் புதிய எக்சைல் பற்றிப் பேசப் போவதில்லை என்பது உறுதியானது .
நூல் வெளியிடுமுன் அராத்து "சாரு! தருண் தேஜ்பாலை இந்த நிகழ்ச்சிக்கு எப்படி அழைத்தீர்கள்? உங்களுக்கும் அவருக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது" என்று கேட்க, "தருண் ஒரு பத்திரிகையாளர் மட்டுமல்ல சிறந்த நாவல் ஆசிரியர் என்றும் குறிப்பிட்டார் சாரு தனது zero டிகிரி நாவலை ஏதோ விருதுக்கு தேஜ்பால் பரிந்துரைத்ததாகக் சொன்னார். தேஜ்பாலின் The Alchemy of desire ( இந்த நாவலைப் பற்றிய சுவாரசியமான குறிப்பு பதிவின் இறுதியில் உள்ள கொசுறுவில் காண்க) நாவலை படித்துவிட்டு அதன் தாக்கத்தில் தன்னுடைய பாணியில் எக்சைல் நாவலை விரிவாக எழுதியதாக குறிப்பிட்டார்
வெளிநாட்டிலிருந்து வந்த வாசகர் ஒருவருக்கு புதிய எக்சைல் நூலை வழங்கி வெளியிட்டார் தருண் தேஜ்பால். இன்னும் சிலருக்கு இந்த நூலை வழங்க விரும்புவதாக சாரு தெரிவிக்க அவர்கள் மேடைக்கு அழைக்கப் பட்டனர்.
ஒவ்வொருவராக சிறு குறிப்புடன் பேச அழைத்தார் ஸ்ட்ரைட்னிங் செய்யப்பட தலை முடி முன்னால் பின்னால் தொங்கம் சிகை அலங்காரத்துடன் தொகுப்பாளினி "அழகான ராட்சசி". பெயரில் பாதி உண்மையாகத்தான் தெரிந்தது.. கொஞ்சம் நகைச்சுவையுடன் நன்றாகவே தொகுத்தார் அம்மணி. தருண் தேஜ்பாலுடன் மிதமான கட்டிப்பிடி வைத்தியமும் செய்து கொண்டார்.
சன் டிவி விவாத மேடை நிகழ்ச்சியை நடத்தும் நெல்சன் சேவியர் புதிய எக்சலைப் பற்றி பேச வந்தார். எப்போதும் புன்னகையுடன் காணப்படும் நெல்சனைப் பார்த்தால் நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இளைஞிகளின் மனம் கவர்ந்தவராகவும் இருக்கிறார் என்பது வெண்பாவின் கூற்றின் மூலம் தெரிய வந்தது. பொது மேடைகளில் இவர் பேசிக் கேட்டதில்லை. மனிதர் கலக்கி விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். எக்சைலை ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பதை அவரது பேச்சு உணர்த்தியது. தெளிவான தடுமாற்றமில்லாத விறுவிறுப்பான பேச்சு அனைவரையும் கட்டிப் போட்டது. நூலின் பல்வேறு பாத்திரங்களை சுட்டிக்காட்டி ஒரு ஆய்வே நடத்தி விட்டார். தான் ஏற்றுக் கொள்ளாத சிலவற்றையும் குறிப்பிட்டார். நாவலில் விரவிக் கிடக்கும் செக்சை தவிர்த்துப் பார்த்தால் எக்சைல் ஒரு அற்புதமான நாவல் என்றார் .தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்யக் கூடிய நாவல் ஒன்றை எழுத வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்
அடுத்து வந்தார் அமிர்தம் சூர்யா. கவிதை திறனாய்வு செய்வதில் வல்லவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஏதோ வேற்று மொழிக் கவிதை ஒன்றை சொல்லி தொடங்கினார். பேச்சு சுமார் அரைமணிநேரம் பெய்த அடைமழையாய் நீடித்தது . சாருவின் எழுத்துகளுக்கு அவர் செய்த ஒப்பீடு அசத்தல். எஸ்.ரா, பாலகுமாரன், மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் எழுத்து காரில் பயணம் செய்வது போல.சாருவின் எழுத்து அரசுப் பேருந்துப் பயணம் போல . இங்கு எல்லாம் இருக்கும் நல்லவை அல்லாதவை அனைத்தும் உண்டு என்பதற்கு உதாரணம் கூறி விளக்கியதும் கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. ஆனால் வீட்டில் மனைவி குழந்தைகள் எதிரிலும் படிக்கும் அளவிற்கு ஒரு நாவலை எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்
பின்னர் பேசவந்தார் தருண். அவர் பேச்சை மொழி பெயர்க்க கருந்தேள் ராஜேஷை அழைத்தார் அராத்து. ஆங்கிலத்தில் பேசியதை புரிந்து கொள்ளமுடியாத யாரும் அங்கு வந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. அப்படி இருக்கும்போது அதன் அவசியம்தான் என்னவோ? என்று நினைத்துக் கொண்டிருக்குபோது, ராஜேஷ் ஒவ்வொரு வாக்கியத்தையும் மொழிபெயர்க்க பார்வையாளர்களில் இருந்து மொழி பெயர்ப்பு தவறு என்று சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார் ஒருவர்.( பெயர் சரியாக நினைவில் இல்லை) டென்ஷன் ஆன அராத்து குறுக்கிட்டவரையே மொழி பெயர்க்க அழைத்தார். அவரது மொழி பெயர்ப்பும் சொதப்பாலாகவே முடிந்தது , பின்னர் மொழி பெயர்ப்பு இன்றி தொடர்ந்து பேசினார் தேஜ்பால். எளிய ஆங்கிலத்தில் அவர் பேசியது அனைவருக்கும் தெளிவாகவே புரிந்தது. சாருவின் சீரோ டிகிரியை படித்து தான் வியந்ததாகக் குறிப்பிட்டார். நூல் வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு கூட்டம் கூடி இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட்டார். டெல்லியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தினால் மிகவும் குறைவானவர்களே வருவார்கள்; அதுவும் அங்கு வழங்கப்படும் ஸ்காட்சுக்காக. இங்கு ஏதேனும் அவ்வாறு வழங்கப்படுமா என்று கேட்டு அப்ளாஸ் அள்ளிக் கொண்டார். பின்னர் அவருடைய பேச்சு பொதுவான விஷயங்களுக்கு தாவியது. பண்டைக் காலத்தில் இருந்த இந்தியாவின் நிலை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் நிலை இவற்றை ஒப்பிட்டு ஏதோ GDP சதவீதம் எல்லாம் கூறினார்.
ஒரு வழியாக அவர் முடிக்க பேசவந்தார் சாரு.
ஆங்கில எழுத்தாளர்களின் நூல்கள் பல்லாயிரம் பிரதிகள் விற்பனை ஆகின்றன. தேஜ்பாலின் நாவல் 5 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகிறது. தமிழில் 2000 ஆனால் அதிகம் . எஸ் ரா, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் நோபல் பரிசே வாங்கி இருப்பார்கள் என்றார். சரியான மொழிபெயர்ப்பாளர் அமைவதில்லை என்ற தனது வழக்கமான புலம்பலை இங்கும் வெளிப்படுத்தினார். அதற்கு உதாரணம் இங்கு நடந்த மொழிபெயர்ப்பையே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நடுவே சில எழுத்தாளர்களை தாக்கினார் . தனது எழுத்தில் ஆழம் இல்லை என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு அவர் சொன்ன பதில் முகம் சுளிக்க வைத்தது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் கூட எளிதாக வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். ஆனால் 80 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிய எனக்கு வெளிநாடு செல்ல விசா கிடைப்பதில்லை. வங்கி சேமிப்பில் போதுமான பணம் இல்லை என்பதால் என்றார். அவரது பேச்சில் ஆதங்ககத்தைவிட பொறாமைதான் அதிகம் தெரிந்தது. எழுத்தாளர்கள் குறிப்பாக இலக்கியவாதிகள் தாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.
5000 ரூபாய் தந்தால்தான் நூலில் கையெழுத்திட்டுக் கொடுப்பேன்,அது பணத்தாசையால் அல்ல எனது மருத்துவ செலவிற்கு என்றார்.
(தற்போது தனது வலைப் பக்கத்தில் அந்த நிபந்தனையை கைவிட்டதாக தெரிவித்துள்ளார். )
நேரம் 9 மணியை கடந்து விட்டதால் நண்பரும் நானும் புறப்பட்டு விட்டோம்.
புதிய எக்சைல் நூல், அரங்கத்தில் சலுகை விலையில் வழங்கப்பட்டது . ஆனால் சலுகை விலையே மயக்கம் தரும் அளவிற்கு இருந்தது. விடுமுறை நாட்களில் வைத்திருந்தால் இன்னும் நிறையப் பேர் வந்திருக்கக் கூடும்.
சாரு! சாரு! என்று என்று உரிமையுடன் அழைக்கும் வாசகர் வட்டத்தைப் பெற்றிருப்பது சாருவின் பலம். அவர்களின் உதவியுடன் நூல் வெளியீடு சிறப்பாகவே நடந்தது என்று கூறலாம் .
***************************************************************************
கொசுறு:
- The Alchemy of Desire எழுதியதற்காக BAD SEX IN FICTION அவார்டுக்காக தேஜ்பால் பெயர், கடைசி 11 பேர் கொண்ட பட்டியலில் இருந்ததாம். இன்னொரு எழுத்தாளர் பரபரப்புக்கு பெயர் போன சல்மான் ருஷ்டி
- Bad Sex in Fiction அவார்டு 2003 இல் வாங்கிய இந்தியர் இன்னொருவர் இருக்கிறார். அவர் ஒரு பெண் எழுத்தாளர் .அனிருத்தா பஹாய் .
- இந்த அனிருதா பஹாய் யார் தெரியுமா ? தருண் தேஜ்பாலுடன் சேர்ந்து டெஹல்கா இணைய தளத்தை துவக்கியவராம்
- இந்நிகழ்ச்சியில் அமிர்தம் சூர்யா பேசியதை கல்கி இணை ஆசிரியர் ராமகிருஷ்ணன் பேசினார் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது தினமலர்
- புதிய எக்சைல் - இதில் புதிய என்பது மட்டும் எதற்கு? அதையும் நியூ என்றே போட்டிருக்கலாமே. எக்சைல் என்பதன் அர்த்தம் புரிந்தால் நியூ வின் அர்த்தம் புரியாமலா போய் விடப் போகிறது?
நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கும்போது இந்நிகழ்ச்சியை கடைசி வரை இருந்து பார்த்த உங்கள் பொறுமையைப் பாராட்டியே ஆகவேண்டும்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
நல்ல நிகழ்வை பார்க்க சென்றமைக்கு வாழ்த்துக்கள்..அத்தோடு பொறுமை காத்தமைக்கு மிக மிக நன்றி.. நிகழ்வை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இங்கே உங்கள் பதிவில் படிக்கக் கிடைக்கும் விஷயங்களுக்கும் சாரு நிவேதிதா மற்றும் அவருடைய விமர்சன வட்டத்திலும் படிக்கக் கிடைக்கும் விஷயங்களுக்கும் கொஞ்சம் வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக அந்தக் கூட்டம்..... விமர்சன வட்டத்தின் புகைப்படங்களைப் பார்க்கும்போது கூட்டம் அதிகமில்லை என்று தெரிகிறது. பத்ரி 400 பேர் இருக்கலாம் என்கிறார். நீங்கள் 500 இருக்கலாம் என்கிறீர்கள். சாரு நான் என்ன தலைகளையா எண்ணிக்கொண்டிருக்க முடியும்? என்கிறார். குழப்பம்தான்.
பதிலளிநீக்குபத்ரி சொன்னதும் நான் சொன்னதும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கிறது. இடையில் சென்றவர்களும் இருக்கக் கூடும் என்பதை வைத்து தோராயமாக சொன்னேன். சாரு சொன்னது 1500 இருக்கும் என்று .விடுமுறை நாளாக இருந்தால் நிச்சயம் கூட்டம் இன்னும் அதிகம் இருந்திருக்கும்
நீக்குவிடுமுறை நாளாக இருந்தால் நிச்சயம் கூட்டம் இன்னும் அதிகம் இருந்திருக்கும் என்று சொல்வது லிங்கா படம் 10 வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் வெற்றி பெற்று இருக்கும் என்று சொல்வது போலிருக்கிறது
நீக்குநல்ல விமர்சனப் பார்வையுடன் நிகழ்ச்சியை ரசித்திருக்கிறீர்கள். உங்களின் இந்தப் பதிவு அதற்கு சாட்சியாக உள்ளது.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி முரளி.
//சேர்ந்து 1500 ஐ தாண்டும்// ஹா ஹா ஹா நல்ல பகடி...
பதிலளிநீக்குமீண்டும் ஒருமுறை அரங்கினுள் நுழைந்து வந்தது போல் இருக்கிறது... நீங்க வாறது தெரியாது.. இல்லைனா சந்திச்சு இருக்கலாம்...
விடுமுறை நாளில் வைத்து இருந்தால் கூட்டம் இன்னும் அதிகமாக வந்திருக்கும் என்று சொல்லுபவர்களிடம் ஒரு கேள்வி சாருவை யாரும் விடுமுறை நாட்களில் வைக்க கூடாது என்று மிரட்டினார்களா என்ன?
பதிலளிநீக்குசரி அப்படியே விடுமுறை நாளில் கூட்டம் வைத்து இருந்து அதற்கும் இதே மாதிரி கூட்டம் வந்திருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள் இவர்கள்? அப்போது இவர்கள் சொல்லுவது வேலை நாட்களில் வைத்து இருந்தால் வேலை முடிந்த கையோட வந்திருப்பார்கள் ஆனால் விடுமுறை என்பதால் பலரும் குடும்பதோட தங்கள் நேரத்தை செலவிட விரும்புவதால் அவர்கள் வரவில்லை இல்லையென்றால் கூட்டம் குவிந்திருக்கும் என்று சொல்லி அலைவார்கள்
நிகழ்வை அருமையாக விமர்சித்து இருக்கிறீர்கள் மூங்கில் காற்று.
பதிலளிநீக்குஆமாம்..... நீங்கள் புத்தகம் வாங்கவில்லையா....?
விலையைக் கேட்டதும் மயக்கம் வந்தது விட்டதே அப்புறம் எப்படி வாங்குவது?
நீக்குவாங்கவில்லை என்பதையும் சேர்த்து விடுகிறேன்.
சலுகை விலைக்கே மயக்கமா
பதிலளிநீக்குதம 4
பதிலளிநீக்குசலுகை விலையே மயக்கமா...?
பதிலளிநீக்குநம்ம Excel கற்றுக் கொள்வோம்... கற்றுக் கொடுப்போம்...! ஹா... ஹா...
ஆமாம். நமக்கு எக்சல் போதும்
நீக்குஇலக்கிய நிகழ்வுக்கு எங்களை தங்களுடைய பதிவின் மூலமாக அழைத்துச் சென்றமைக்கு நன்றி.
பதிலளிநீக்குபதிவின் மூலம் நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொண்டேன். இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க நிறைய பொறுமை வேண்டும்! :)
பதிலளிநீக்குநடந்ததை படம் பிடித்துக் காட்டி விட்டீர்! நன்று!
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவையுடன் விழாவை பகிர்ந்துள்ளீர்கள்! அருமை! விலையே மயக்கம் போட வைக்கிறது என்றால் புத்தகம் என்ன செய்யுமோ?
பதிலளிநீக்குநிகழ்வைச் சிறப்பாக,தொடர்புடைய தகவல்களுடன் அளித்திருக்கிறீர்கள் முரளி,
பதிலளிநீக்குநகைச்சுவை இழையோட அருமையான தொகுப்பு நண்பரே!
பதிலளிநீக்குநகைச்சுவை கலந்த நல்ல தொகுப்பு ஐயா...
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
அந்த வரலாற்று நிகழ்வில் நீங்களும் கலந்துகிட்டீங்களா... அழகான ராட்சசி பயங்கர சொதப்பல் என்று சொன்னார்களே...
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்,.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇன்று தான் படித்தேன். அருகேஇருந்து பார்த்தது போல இருந்தது.
பதிலளிநீக்கு