என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 6 ஜனவரி, 2015

திரைஇசையைப் புரட்டிப்போட்ட புயல் ஏ.ஆர்.ரகுமான்



இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் 48 வது பிறந்த நாள்.  ஆஸ்கார் வாங்கியபோதும் அலட்டிக் கொள்ளாத அமைதி நாயகன். இசையில்தான்  புயல்தானே தவிர் பேச்சிலும் நடத்தையிலும் ஆழ்கடல் அமைதி. அவரைப் பற்றிய கட்டுரை ஒன்று எழுத வேண்டும் நினைத்திருந்தேன்.எழுதியும் விட்டேன். இன்று வெளியிடலாம் என்று காத்திருந்தேன். இடையில் வல்லினம் இணைய இதழில் திரு அகிலன் என்பவர் எழுதிய ஏ.ஆர் ரகுமான் பற்றி எழுதிய பழைய  கட்டுரையைப் படித்தேன்.அதைப் படித்ததும் இசை அறிவு இல்லாதவன் நான் எழுதிய  கட்டுரை வெறும் வார்த்தைகளாகத் தெரிந்தது,  அந்த கட்டுரை வல்லினம் இணைய இதழின் அனுமதியுடன் இன்கு வெளியிடப் படுகிறது. இதழின் ஆசிரியர் நவீன் அவர்களுக்கு நன்றி 

மார்ச் 2010 இதழில் வெளியான அந்தக் கட்டுரையை எழுதியவர்  திரு :அகிலன் 
 ( வல்லினம் இதழின் இணைப்பு : http://www.vallinam.com.my/issue15/column4.html
                                      ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

     இன்றோடு சரியாக ஒரு மாதமாக, இரண்டு இசைத்தொகுப்புகள் என்னை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. மாறி மாறி ஒவ்வொரு நாளும் அவைகளைதான் கேட்கிறேன். ஒன்று இளையராஜாவின் ரமணா சரணம் சரணம் தொகுப்பின் பாடல்கள் மற்றது விண்ணைத் தாண்டி வருவாயா. விண்ணைத் தாண்டி வருவாயா, கொஞ்சம் ஸ்பெசல். காரணம் மறக்க முடியாத பழைய காதலை திரும்பவும் உயிர்தெழ செய்திருப்பதால். அந்தப் பாடல்களில் இருந்து மீள முடியாமலும் உள்ளேயே அடக்கிக் கொள்ள முடியாமலும், எனது மெல்லிய உணர்வுகளின் எல்லைவரை ஊடுருவி எனது இருப்பைக் கூட இல்லாமல் செய்ய முயற்சிக்கிறது. காதல் அறிந்தவர்களால் மட்டும்தான் அதை உணரமுடியும். அதிலும் வைரமுத்துவில்லாமல், செயற்கை வரிகள் இல்லாமல் முதல் முறையாக தமிழில் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் மேட்பூசில்லாத உணர்வுகளை அழகாகவும் ஆழமாகவும் சொல்ல முடிந்த இசைக் கவிதை. 
மொத்த இசைத்தொகுப்பும் காதலிக்குத் தெரியப்படுத்த விரும்பும் ஒரு செய்தி. ஒவ்வொரு பாடலும் வாழ்வின் ஒவ்வொரு தருணம். அவருடைய புகழின் இத்தனை நெருக்குதலுக்குப் பிறகும், நாம் சுவாசிக்க சுத்தமாக அவர் தந்த பிராணவாயு. பாடல்கள் எல்லாமே குளிர் தேசங்களில் கம்பளி ஆடையணிந்த அழகிய காதலி நம்மை அணைத்துக்கொள்ளும் சுகம். 

    ஏ ஆர் ரஹ்மானுக்குப் பிறகான இந்திய இசை, ஒலிவடிவமைப்பில் மிகப் பெரிய புரட்சியை இந்தியாவில் உண்டாக்கியிருக்கிறது. இல்லை யென்றால் இன்றுவரை மிக்ஸிங், மாஸ்திரிங் போன்றவை நமக்கு விளங்கியிருக்காது. அது மட்டுமல்லாமல் மிக்ஸிங், மாஸ்திரிங் கூட இசையமைப்பில் ஒரு அம்சம் என்பதை நிரூபித்து காட்டியது அவர்தான். அதாவது அது இறுதிக்கட்டவேலை என்பதையும் தாண்டி, அது ஒரு கட்டுமானமாக இசையமைப்பில் முக்கியத்துவம் பெற்றது. 

    அவருடைய இசை ஞானம், வாழ்க்கை வரலாறு, இசை தொழில் நுட்ப ஞானம் என்று எல்லோரும் எவ்வளவோ பேசியிருந்தாலும், நான் அவருடன் பழகிய நாட்களில் காலத்தால் அழியாத சில விஷயங்களை நான் கிரகித்து கொண்டிருக்கிறேன். அது இதுவரை பலரும் பேசாதது. காரணம் இது மற்றவர்கள் அறியாததாகக் கூட இருக்கலாம். அவரின் வெற்றி அவருடைய இசைஞானத்திற்கு கிடைத்த வெற்றியென்பதைக் காட்டிலும், வெற்றிக்கான சில அத்தியாவசியக் குணங்களும் கோட்பாடுகளுமாக நாம் என்றென்றும் பேணவேண்டியவைகளுக்கான வெற்றி என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொருவரின் வெற்றியும் ஒரு சேதி, இந்த உலகுக்கு, நிகழ்கால, எதிர்கால சமூகத்துக்கு. அதிலும் ஏ ஆர் ரஹ்மானின் வெற்றி, எல்லோருக்கும், முக்கியமாக இளைஞர்களுக்கு, வெற்றிக்கான நமது தேடலில், கனவுகளில், போராட்டங்களில் நமது வழிக்காட்டியாக சில அத்தியாவசிய விஷயங்களை சொல்லும் செய்தி. விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் இருக்கும் நமக்கு பல சமயங்களில் பிறரின் வெற்றி உண்மையான உழைப்புக்கான வெற்றியாகத் தோன்றாமல் போகலாம். 
     ஏ ஆர் ரஹ்மானின் விசயத்தில் அதுவல்ல நிஜம். அதை ஓரளவேணும் நெருக்கத்தில் பார்த்து உணர்ந்து கற்றிருக்கிறேன். என்னுடைய வழியில் அவைகளில் சிலவற்றை வழித்துணையாக ஏற்றுகொண்டிருக்கிறேன் என்பதால் அதை இங்கு பகிர்ந்துக்கொள்ள நினைக்கிறேன்.
     ஏ ஆர் ரஹ்மானின் மிகப் பெரிய சாதனையாகத் தமிழ் திரையிசையில் நான் பார்ப்பது, பாடல்களில் கவித்துவம் இவரால்தான் மீட்டுவரப்பட்டது. வரிகளால் மட்டும் தனித்து எந்தப் பாடலும் நிற்பதே கிடையாது. இசையால் மட்டும் தனித்து எந்தப் பாடலும் நின்றுவிட முடியும். நிகழ்கால நிஜம், இளையராஜா அவர்கள். ஆனால் இசையா வரியா என்று முடிவு செய்யவே முடியாத நிலையில் அந்தப் பாடல்கள் அடையும் உன்னதம், ஏ ஆரின் பாடல்களில் மட்டும்தான் பார்க்க முடியும். அந்த அளவு அவர் தாராளமாகவும், நிபுணத்துவமுடனும், பல்நோக்குப் படைப்பாளியாகவும் செயல்பட்டிருக்கிறார். அதுவரை இத்தகைய பல்நோக்குத் தளத்தில் யாரும் செயல் பட்டதே இல்லை.
மெட்டுக்களில் சில பகுதிகளை வரிகளுக்கேற்ப மாற்றவதும், வரிகள் சிதையா வண்ணம், மெட்டும் மாற்றப்பட முடியாத பட்சத்தில், பாடகர்களை மெனக்கெட வைத்து அந்த வரிகளை வெளிக்கொண்டுவருவதும், அவருடைய இசையை ரசித்தவர்களால் நிச்சயம் நினைவுக்கூற முடியும். அதிலும் அவருடன் பேசிய தருணங்களில் அவருடன் பணியாற்றிய சில பாடலாசிரியர்களின் போலித் தன்மைகளை முற்றிலும் வெறுத்திருக்கிறார். ஆனாலும் திரும்ப திரும்ப அவர்களுடன் பணிபுரிந்திருக்கிறார், பாடகர்களுடனும் கூட. பிற திறமைகளை எந்த மனத்தடையும் இல்லாமல் அங்கீகரித்திருப்பது, ஒரு வெற்றிக்கு தேவையானவற்றை உணர்ந்து அதை எந்த நிபந்தனைகளுமில்லாமல் ஏற்றுக்கொள்வது அவருடைய அடிப்படை இயல்பாய் இருந்திருக்கிறது. அவரிடமிருந்து அவருடைய பட்டறையில் இருந்து வெளியான இசையமைப்பாளர்கள் பலர், அதே சமயம் அவருடன் மீண்டும் வேலை செய்ய அந்த இசையமைப்பாளர்களுக்கு எந்த தயக்கமும் இன்றி வாய்ப்பளித்திருக்கிறார். 

ஏ ஆர் ரஹ்மானை நான் முதன் முதலில் பார்த்தது 2001இல். வார்னரின் சார்பாக இந்தியாவில் நான் சந்தித்த இசையமைப்பாளர்களில் முதல் முதலில் நான் சந்தித்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். ஐந்து வருடங்கள் கழித்து அவர் தொடங்கிய அவருடைய முதல் இசை நிறுவனமான கே எம் மியூஸிகின் (KM MUSIQ) முதல் வெளியீடான வரலாறு (காட்பாதர்) திரையிசையை வெளியிடும் வாய்ப்பு எனது அகி மியூஸிக் நிறுவனத்திற்கு கிடைத்தது. அவரே அழைத்து கொடுத்த வாய்ப்பு. 2001-ஆம் ஆண்டு சந்திப்பிற்குப் பிறகு அவரை நான் நேரில் பார்த்ததே இல்லை. மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. எந்த மின்னஞ்சலாக இருந்தாலும் நிச்சயமாக பதில் எதிர்பார்க்கலாம். சில சமயம் ஒரே வரியில் அல்லது வார்த்தையில் இருக்கும். ஆனால் நிச்சயம் பதில் வரும். 


உதாரணத்திற்கு, ‘எனக்கு மகன் பிறந்திருக்கிறான்' என்று, ஆகஸ்ட் 2004 இல் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். மறுநாள் முபாரக் (வாழ்த்துக்கள்) என்று பதில் வந்தது. இதற்கெல்லாம் அவர் மெனக்கெடமாட்டார், ஒரு வேளை யாராவது அவருடைய வேலையாட்கள் அனுப்பலாம் என்று சந்தேகம் அவ்வப்போது வரும். நவம்பர் 2005இல் அவரை கனடாவில் சந்தித்தப் போது, முதன் முதலில் என்னைப் பார்த்ததும், ‘ஹ்ம்.. வெயிட் போட்டுடீங்க, மகன் எப்படியிருக்கான்’ என்று கேட்டார். நான் கொஞ்சம் அதிர்ச்சியில் பார்த்தபோது அவருக்கு சந்தேகம் வந்து, ‘உங்களுக்கு தானே இடையில் குழந்தை பிறந்துள்ளதாக இ மெயில் அனுப்புனீங்க’ என்றார். அதுவரை அவர்தான் அவருடைய மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புகிறாரா என்ற சந்தேகம் தீர்ந்தது மட்டுமல்ல அன்று அந்த வாழ்த்து அவரிடம் இருந்து போலி பிம்பங்களுடன் வரவில்லையென்பதும் விளங்கியது. 

அது மட்டுமன்றி, அகி மியூசிக் தொடங்கி நான் வெளியிட்ட இளையராஜாவின் குரு ரமண கீதம், மியூசிக் ஜெர்னி, திருவாசகம் என்று எல்லா குறுந்தட்டுக்களையும் அவருக்கு அனுப்பியிருக்கிறேன். எனது முதல் சந்திப்பின் போது எல்லாவற்றையும் நினைவில் வைத்திருந்து அவைகளின் வரவேற்பையும், விற்பனையும் கேட்டு கேட்டு தெரிந்து கொண்டார். எந்த உள் நோக்கமும் இன்றி, போலியாக பழகத் தெரியாதவர் ஏ ஆர் ரஹ்மான் என்பது எனக்கு விளங்கியது. ஆனால் அதையெல்லாவற்றையும் விட இந்தியில் கொடி நாட்டியப் பிறகும் வெற்றிக்கான வேட்கையும் எல்லையற்ற கனவுகளுடனும் இன்னமும் முதல் தேர்வு மாணவன் போல் ஆர்வமும் பதைபதைப்பும் உள்ள ஒரு உழைப்பாளி. பேச்சியின் இடையே கனடா தொலைக்காட்சியில் பதின்ம வயதில் உள்ளவர்களை அவர்களுக்கு பிடித்த இசையைப் பற்றிக் கேட்டபோது, திடீரென்று என் பக்கம் திரும்பி, ‘இவர்களைதான் (பதின்ம வயதினர்), நமது இசை சென்றடையனும். இவர்கள்தான் இசையின் விற்பனையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பவர்கள், அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லக் கூடியவர்கள்', என்று சொல்லி தீவிர யோசனையில் கொஞ்ச நேரம் மூழ்கிப் போனார். 

நான் அவரை கனடாவில் சந்தித்த போது, ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் ரங் டீ பசந்தி (Rang De Basanti) மிக்ஸிங் வேலை, இன்னொரு ஒலிப்பதிவு கூடத்தில் மங்கல் பண்டேயின் (Mangal Pandey) இசைப் பதிவு, மற்றொரு ஒலிப் பதிவு கூடத்தில் வாஜி வாஜி சிவாஜி படப் பாடல். இத்தனையும் ஒரே சமயத்தில் அங்கு நடந்ததன் காரணம், லோர்ட் அப் தி ரிங் (Lord Of The Ring) மேடை நிகழ்ச்சியின் இசையமைப்பு வேலை அங்கு நடந்து வந்தது. இவ்வளவையும் நிபுணர்கள் கொண்டு செய்தாலும் அவர் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கூடமாக மாறி மாறி கவனம் செலுத்தினார். இத்தனைக்கும் நடுவில் காபி வேண்டும் என்றால் அவரே வெளியில் வந்து, காபி இயந்திரத்தில் காபி கலக்கி குடித்தார். இந்தியாவில் இருந்து வந்த அவரது சவுண்ட் இஞ்சினியர் ஆதி, வேலையை தொடர முடியாமல் களைப்பில் உறங்கிவிட்டார். விடியக்காலை நான்கு மணியிருக்கும். அவரை பார்த்து எந்த சலனமும் இல்லாமல் திரும்பவும் ஒலிப்பதிவு கூடம் நுழைந்து வேலையை தொடங்கினார். காலை 6 மணிக்கு அவர் தங்கும் இடத்திற்கு சென்றோம், நட்சத்திர ஹோட்டல் அல்ல, சாதாரண அறை. சாப்பிட்டது ரொம்பவும் சாதாரண இடம். ஹலாலா (Halal) என்று மட்டுமே பார்த்தார்.

சென்னையில் அவரை சந்தித்தபோது, ஏ எம் ஒலிப்பதிவுக் கூடத்தில் வரலாறு இசை வேலைகளில் இருந்தார், அப்போது வாலி அவருக்காக பஞ்சதன் ஒலிப்பதிவுக்கூடத்தில் காத்துக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், தனது அவன்சா காரை தானே எடுத்துக்கொண்டு அவசரமாக வந்து, சில்லென்று ஒரு காதல் படத்தின் பாடலில் தீவிரமானார். இசை வேலையைத் தவிர வேறெதுவும் பெரிதாக எதிர்பார்க்காத எளிமையான மனிதர். எளிமைதான் ஒரு மனிதனை உயர்வுக்கு கொண்டு செல்கிறது என்று எப்பொழுதும் படித்திருக்கிறோம், ஆனால் எது எளிமை என்பதை எனக்கு உணர்த்தியது நவீன யுகத்தின் இளைஞரான அவரை நான் பார்த்த நாட்கள்தான். இன்றைய இளைஞர்களுக்கு எளிமை என்பது இயலாதவனின் அல்லது இல்லாதவனின் வாழ்க்கை முறை என்ற எண்ணங்கள் உண்டு.

அதையெல்லாம்விட ஒரே மாதத்தில் ஐந்து படங்களுக்கு இடைவெளியில்லா உழைப்பு என்னை ஆச்சரியப்பட வைத்தது. இருந்தும் அவர் படங்கள் தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டுக்கு காரணம் அவருடைய வேலையில் அவர் எதிர்பார்க்கும் Perfection (தமிழில் சொல்லத் தெரியவில்லை - இறுதித் தரம்). நம்முடைய ஆட்டோகிரப் என்பது நமது வேலையில் இருக்கும் தரம்தான், அதுதான் நமது உண்மையான அடையாளம் என்பதை நான் கற்றுக்கொண்டது அங்குதான். வரலாறு படப் பாடலின் இறுதி மாஸ்தரிங் வேலைக்கு மட்டும் அவர் எடுத்துக்கொண்ட நேரம் நாம் பொறுமை இழந்துவிடும் அளவு நீளமானது. போதும் என்ற நிலையில் அந்தப் பாடலின் தரம் இருந்த பொழுதுக்கூட அவர் பொறுமையாக காட்டிய கவனம் எல்லையற்றது. யாரை கேட்டாலும் நமது உயர்வுக்கு உழைப்புதான் அடிப்படைக் காரணம் என்று சொல்வார்கள், நாம் அனுபவிக்காதவரையில் அந்த உண்மையான உழைப்புக்கு அர்த்தம் தெரியப்போவதில்லை. 

இந்தப் perfection பற்றி சொல்லும்போது ஒரு விஷயத்தை கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். அவர் லண்டனில் CBS Orchestraவுடன் இணைந்து அவருடைய பாடல்களை ஆர்கெஸ்டராவில் பதிவு செய்ததை வெளியிட கேட்டபோது, எந்த தயக்கமும் வெட்கமும் இன்றி அதில் எண்ட் கிரேடிட் மற்றும் சில அரேஞ்மெண்ட் சரியா இல்லை, அகிலன். அதை வெளியீடு செய்தால் தரமிருக்காது என்று நிராகரித்தார். அதாவது அவருடைய வெளியீடு எதையும் ரசிகர்கள் வாங்கும் நிலையில் இருக்கும் போது, தரத்திற்காக அதை நிறுத்தியதோடு அல்லாமல் அதை பத்திரிக்கைகளிலும் பகிரங்கமாக சொன்னார், ‘மேற்கத்திய செவ்வியல் இசையில் நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. அதில் நான் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். அதனால் அதை வெளியிடவில்லை’ என்று. இங்கு அவர் தரத்தை பற்றி மட்டும் அக்கறைபடவில்லை, கரையில்லா (இசைப்) புகழை எதிர்பார்த்தது மட்டுமல்ல. எந்த நிலையிலும் அடக்கமும், மேலும் கற்றுக்கொள்ளும் மனப்போக்கும் கொண்டிருந்தார். 

இதையொட்டி வேறொரு சம்பவத்தை நினைவுக்கூர வேண்டும். அவருடைய கஜினி இந்தி இசை வெளியானப் பிறகு, அதன் ஒலிப்பதிவில் குறிப்பாக மாஸ்டிரிங் நிலையில் ஒரு குறைப்பாடு என்னை தொந்தரவு செய்துக்கொண்டேயிருந்தது. என்னால் பாடலின் உள் செல்ல முடியவில்லை. அதை குறை என்று கூறும் தைரியமும், அதை நிரூபிக்கும் ஞானமும் திறனும் எனக்கில்லை என்று தெரியும். ஆனால் ஒரு தேர்ந்த இசை ரசிகனாக (ஆணவமாக சொல்லவில்லை, எனக்கிருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்) இதில் நிச்சயம் குறையிருக்கிறது, அதுவே இந்தப் பாடலை நெருங்க மிகப்பெரிய மனத்தடையையும் (இல்லை செவித்தடையை என்று சொல்லலாமா?) எனக்கு ஏற்படுத்துகிறது என்பதும் எனக்குத் தெரியும். அதிலும் அது மாஸ்டிரிங் நிலையில்தான் நடந்திருக்கிறது என்றும் உணர முடிந்தது. அவரிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் இதுநாள் வரை பழகிய காரணத்தால் சொல்ல வேண்டும் என்று ஓர் உந்துதல். அப்படி நான் சொல்லி அது என்னுடைய இசை ரசனையில் உள்ள குறை என்றால், அல்லது அவருடைய ஈகோவை நான் சீண்டிப்பார்ப்பது போல் இருந்தால்...? அது நட்பை முறிக்கலாம். 

பலவாறு யோசனைக்கு பிறகு அதை அவருக்கு தெரியப்படுத்தினேன், மின்னஞ்சல் வாயிலாக. தயங்கியபடியே நான் உணர்ந்த குறைகளை சுட்டிக் காண்பித்தேன். மறுநாளே அவரிடமிருந்து பதில். “வெறுமனே பாடல்கள் நன்றாக இருக்கிறது என்ற புகழ்ச்சிகளைத் தவிர இதுபோன்ற எதிர்வினைகள் தான் எனக்கு வேண்டும். நான் மிகவும் வரவேற்கிறேன் உங்கள் கருத்தை. இப்படியான தவறுகளை எழுத தயங்க வேண்டாம்’, என்று எழுதியதோடு ‘நான், நீங்கள் குறிப்பிட்டிருப்பதை கவனிக்கிறேன்’ என்றும் உற்சாகம் ஊட்டினார். கஜினி படம் வரை வெற்றி அடைந்தவரின் பதில் அல்ல இது. புதிதாக இசைத்துறையில் கால் வைத்திருக்கும் ஒரு பிரபலமில்லாத நபரின் வார்த்தைகள் போல் இருந்தது. அந்த மின்னஞ்சல் என்னால் மறக்க முடியாத தடங்களை விட்டு சென்றது. எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், தவறு இயல்பு என்ற ஆணவமின்மையும், தவறை திருத்திக்கொள்ள முன்வருவதும் சாதாரண விஷயமல்ல. அதிலும் பெரிய விஷயம் என்னைப் போன்று பிரபலமில்லாத, நிபுணத்துவம் அற்ற ஒருவனுக்கு செவி சாய்ப்பது சாதாரண ஒரு குணமல்ல. யாரையும் வயது வரம்பின்றி மதிக்கும் குணம் எல்லோரிடமும் பார்த்துவிட முடியாது. இதே போன்றதொரு அனுபவம் எனக்கு இளையராஜாவிடமும் ஏற்பட்டிருக்கிறது. காலத்தால் அழியாத புகழ் பெறும் எந்த ஒரு மனிதனும் நவீன உலகம் பல சமயங்களில் நமக்கு சொல்லித்தருவது போல் நற்குணங்களுக்கு எதிர்மறையாக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன். போலியானவர்கள் யாராலும் இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் போல் காலத்தால் அழியா புகழை அடைந்திடவே முடியாது. 

இந்த தன்னியல்புகள் மட்டுமல்லாது, நிர்வாகத்திறன் நிரம்பக் கொண்டவர், ஏ ஆர் ரஹ்மான். அவரின் இன்றைய உயரத்திற்கு, அவரது உழைப்பு மட்டுமல்லாது, அவரது நிர்வாகத்திறன் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம். உழைப்பும் திறமையும் மட்டுமே வெற்றியின் வாசல்களை நெருங்க உதவாது என்பதற்கு அவர் ஒரு சான்று. அவருடைய அலுவகத்திலும், ஒலிப்பதிவு கூடத்திலும் ஒவ்வொரு டிபார்ட்மெண்டும் ஒவ்வொருவர் மேற்பார்வையில் விடப்பட்டிருக்கும். ஒலிப்பதிவு சார்ந்த டிபார்ட்மெண்டுக்கு ஒருவர், இசை கலைஞர்கள் சார்ந்த டிபார்ட்மெண்டுக்கு ஒருவர், பத்திரிக்கை மற்றும் வெளிநபர்கள் தொடர்புக்கு ஒருவர் என்று எல்லாவற்றுக்கும் ஒவ்வொருத்தர் இருப்பார்கள். இசை வெளியீடுகள் பற்றிப் பேச வேண்டும் என்றால் ஒருவர், சட்டம் பேச ஒருவர் என்று அது மிகப்பெரிய நிறுவனம்போல் இருக்கும். அவர்கள் எல்லோருமே அற்புதமான மனிதர்கள். அதிலும் அவரது ஆஸ்தான சவுண்ட் இஞ்சினியர் சிவக்குமார் அற்புதமான நண்பர். அவரது வெளிநாட்டு தொடர்புகளை கவனித்த கணேஷங்கர் இன்னொரு அற்புதமான மனிதர். ஆதி, கார்த்திக், நியோல் இப்படி எல்லோரையும் நான் நினைவு வைத்து குறிப்பிடும் அளவுக்கு அந்த நிர்வாகம் இளைஞர்களால் குஷியாக ஒரு குடும்பம் போல் மேற்பார்வை செய்யப்படுவதுதான். இந்திய சினிமாவில் இசையை ஒரு தனி நிறுவனமாக அவர் சாதித்துக் காட்டியிருப்பது, யாரும் இதுவரை இந்தியாவில் கற்பனை செய்ய முடியாதது. 

சொந்த இணையத் தளம் வைத்திருக்கிறார், facebook இல் அவரே பதில் எழுதுகிறார், நன்றி சொல்கிறார், பேசுகிறார். தன்னை இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் எப்படி ப்ரோமோட் செய்துக்கொள்வது என்று தெரிந்த ஒரு தேர்ந்த நிர்வாகி என்று சொல்லலாம். அதுமட்டுமன்றி, இதன் வாயிலாக இடையில்லா தொடர்பை தன் ரசிகர்களுடன் உருவாக்கியிருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் ஒரு சக நண்பனுடன் உரையாடிக்கொள்வதுப்போல அதை முன்னெடுத்திருக்கிறார். பிரபலத்தில் இருந்து கொண்டு, தன் ரசிகர்களை நெருக்கத்தில் பார்க்கும் போது, நமது குறைகள், நிறைகள் நம்மால் உணரமுடிவது மட்டுமல்லாது, நமக்கான ஒரு தனித்துவமிக்க சந்தையை இன்னும் விரிவுப்படுத்தி அதை உறுதியுடன் பேணுவது உலகத் தரம். இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் அது மிக எளிதில் சாத்தியமாகக்கூடியது என்றாலும் அதை பலரும் பொருட்படுத்துவது இல்லை. 

எனது ரசிகர்கள் தயவு செய்து கள்ளப் பதிப்புகளை வாங்காதீர்கள் என்று பொது மேடையில் (விருது நிகழ்ச்சியில்) இளையராஜாவுக்கு பிறகு பகீரங்கமாக பேசிய ஒரே இசையமைப்பாளர் இவர் என்று நிச்சயமாக சொல்லலாம் (இளையராஜா அதற்கு முன்னமே ராஜாங்கம் என்ற அவருடைய இணையத்தளத்தின் வாயிலாக அதை செய்திருக்கிறார்). வேறு இசையமைப்பாளர்கள் எவரும் இப்படி பகிரங்க அறிவிப்பை கள்ளப்பதிப்புக்கு எதிராகக் கொடுத்ததில்லை. கள்ளப்பதிப்புக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒரு கலை நிகழ்ச்சியை இலவசமாக மலேசியாவில் நடத்த நான் திட்டமிட்ட போது, இலவசமாக கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார், ஏ ஆர் ரஹ்மான். (ஆனால் அதை என்னால் செய்ய முடியாமல் போனது வேறு விஷயம்). தன்னை மட்டும் பிரதானப் படுத்தாமல் தான் சார்ந்திருக்கும் துறைக்கும் அந்தத் துறையில் உள்ளவர்களுக்காகவும் எந்தப் எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்ல விஷயத்திற்கு உதவ முன்வருவது அவருக்கு பழகிய ஒன்று. இது ஒருவகையில் வியாபார எதிக் (ethic). தன் தொழிலின் மீது, தான் விரும்பும் ஒரு துறையின் மீதுள்ள அன்பின், மக்களின் மீது அல்லது பயனீட்டாளர்கள் மீதான அக்கறையின் காரணமாக, எந்த நிலையிலும் தன்னையும் தான் சார்ந்துள்ள தொழிலையும் அல்லது துறையும் தவறான வழிக்குக் கொண்டு சென்றுவிடக்கூடாது என்று நினைப்பவர்களால் மட்டுமே பேணப்படும் துறை சார்ந்த ஒழுக்க நெறி. அது எல்லா துறையிலும் உண்டு. இசைத்துறைக்கும் உண்டு என்று அவரிடம் நான் தெரிந்துக்கொண்டேன்.

எவ்வளவு உழைப்பும், நிர்வாகத்திறனும் இருந்தாலும், நம்மை பிரகடனப் படுத்துவது மிகவும் அத்தியாவசியமானது என்பது நான் ரொம்பவும் தாமதமாக உணர்ந்தது. அது நம்மை பிரபலப்படுத்தும் முயற்சியோ அல்லது தற்பெருமை தேடிக்கொள்வதோ இல்லை. மாறாக நம்மை துடிப்புடன் செயல்படவும் அடுத்த அடுத்த கட்டத்திற்கு நம்மை தயார் செய்து கொள்ளவும் உதவும் ஒரு மாபெரும் கருவி. அது பல சமயங்களில் நம்மை பற்றி மட்டுமல்லாது நமது நம்பிக்கையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு செய்தி (MESSAGE). இந்தப் பிரகடனப் படுத்துவது என்பதே பல பக்கங்கள் எழுதக்கூடிய ஒரு விஷயம், அதாவது இசைத்துறையில். அதை வேறொரு சமயம் நான் எழுதுகிறேன்.

இதையெல்லாம் விடவும் என்னுடைய இந்த பயணத்தில் எனக்கு முக்கியமாக இருக்கும் விஷயங்களில் மூன்று அவருடைய அனுபவத்தில் இருந்து அவர் என்னிடம் இறக்கி வைத்தது. அது யாருகெல்லாம் போய் சேர்ந்ததோ தெரியாது, ஆனால் எனக்கு பல மந்திரங்களில் இவைகளும் முக்கியமானதாகிப் போனது. 

முதலாவது...

அவரிடமிருந்து வரலாறு (காட்பாதர்) இசை ஆல்பத்தை வாங்கிய போது, நான் இதில் வெற்றி பெற என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்றேன். அதோடு, “நான் இசைத்துறைக்கு வந்த போது, இன்றைக்கு இசை துறையென்பது மடிந்துபோன ஒன்று, நான் முட்டாள்தனமாக இதில் இறங்கியிருக்கிறேன் என்று பார்க்கிறவர்கள் பழகியவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள், எனக்கே சில சமயம் சந்தேகம் வரும்படி செய்துவிடுகிறார்கள்’ என்றேன். 

கொஞ்சம் சீரியஸானவர், ‘நான் விளம்பரங்களுக்கு இசையமைத்துகொண்டிருந்தபோது என்னையும் இப்படிதான் சொன்னார்கள். இப்படியே காணாமல் போய்விடுவேன்' என்று சிரித்திருக்கிறார்கள். நீயெல்லாம் எங்கே முன்னுக்கு வரமுடியும் என்று பேசியிருக்கிறார்கள். இன்றைக்கு நான் எங்கிருக்கிறேன்? உண்மை, உழைப்பு, நேர்மை. இதுதான், அகிலன். இந்த மூன்றும் இருந்தால் யாருடைய வாழ்த்தும் தேவையில்லை. நாம் முன்னுக்கு வந்திடலாம். எந்த சூழ்நிலையிலும் இந்த மூன்றை மட்டும் கைவிட்டுடாதீங்க. இந்த உண்மை, உழைப்பு, நேர்மையை பல சமயங்களில் படித்தும், கேட்டும், சினிமாவில் பார்த்தும் இருப்பதுதான். ஆனால் தன்னுடைய வாழ்வின் கசப்பான அனுபவங்களின் ஊடாக இன்று அவர் அடைந்திருக்கும் வெற்றிக்கு கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று அவரால் இதை மட்டும்தான் சொல்ல முடிகிறதென்றால், எவ்வளவு ஆழமாகவும் உறுதியாகவும் இதை அவர் நம்ப வேண்டும் என்று அன்று நான் உணர்ந்தேன். ஆழமான, உறுதியான நம்பிக்கையின் வாயிலாக வரும் எந்த வார்த்தையும் உண்மையானதாகவும் சக்தியுள்ளதாகவும் இருக்கும்.

இரண்டாவது...

ஆஸ்காருக்கு முன்பு, 20/1/2009.

‘நான் வாழ்க்கையை போஸிட்டீவாக எடுத்துக்கொள்கிறேன். எவ்வளவு பெரிய மன உளைச்சலுக்கு நாம் ஆளானாலும் அதன் பிறகு சர்வ நிச்சயமாய் ஒரு பெரிய நன்மை நடந்தே தீரும் என்று நம்புகிறேன்.’ மிகப்பெரிய மன உளைச்சலில் நான் இருந்த தருணம் மலேசியாவின் ஸ்டார் ஆங்கில பத்திரிக்கையில் வெளியானது இந்த பேட்டி. அவருடைய இசை ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப் பட்டதற்காக அவர் சொன்னது. 

மூன்றாவது...

ஆஸ்காருக்கு பின்பு 23/2/2009 

'என் வாழ்க்கை முழுவதும் அன்பையும் வெறுப்பையும் நான் எதிர்கொண்டிருக்கிறேன். நான் அன்பை தேர்ந்தெடுத்தேன்... இங்கு இருக்கிறேன்'. ஆஸ்கார் மேடையில் சொன்னது.

இது திட்டமிட்ட வார்த்தைகள் அல்ல, ஒத்திகைப் பார்த்து வந்ததல்ல என்பது, அவருடன் பழகியவர்களால் மட்டுமே உணர முடியும். இவைகள் அனைத்துமே உண்மையான வெற்றியின், புகழின் திறவுகோல்கள். நம் வாழ்க்கைப் பயணத்தின் வழிகாட்டிகள்.

நன்றி : வல்லினம் http://www.vallinam.com.my/issue15/column4.html

***********************************************************************
தொடர்புடைய பதிவுகள்



************************************************************************************
இக்கட்டுரையை எழுதிய அகிலன் அவர்களை இதுவரை நான் அறிந்ததில்லை.இசைத் தொடர்புடையவர் என்பது மட்டும் கட்டுரையில் இருந்து அறிய முடிந்தது.தேடிப் பார்த்ததில் அவரது வலைப் பக்கம் கிடைத்தது. இளையராஜா பற்றியும் பதிவுகள் எழுதி இருக்கிறார் . 

இணைப்பு:http://meedpu.blogspot.in/




18 கருத்துகள்:

  1. நல்ல கட்டுரை... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான். பல இளையராஜா பாடல்களை கேட்கும் போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும், மியூசிக் இல்லையென்றால் இதெல்லாம் ஒரு பாட்டா என என்னை சிந்திக்க வைத்த பாடல்கள் உண்டு.
    ரஹ்மானின் பாடல்களில் வரும் படிமங்கள் அந்த பாட்டின் சுழலுக்குள் நம்மை இழுத்துசென்றுவிடுகின்றன. கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், மின்சாரகனவு முதல், நீதானே எந்தன் பொன்வசந்தம் வரை கவிநயம் சொட்டும் பாடல்கள்!! BELATED wishes to ரஹ்மான்:)

    பதிலளிநீக்கு
  3. பல செய்திகளை அறிந்தேன். வாழும்போதே வரலாறு என்று கூறுவார்கள். அவ்வாறு உள்ளவர்கள் சிலரே. அவர்களில் இவரும் ஒருவர். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் முரளி
    மலேசியாவில் அகி மியுசிக் எனும் பெயரில் ஒரு நிறுவனம் நடத்தும் இந்த அகிலனுடன் தான் இளையராஜாவிற்கு வழக்கு நடக்கிறது சென்னையில் .இளையராஜாவின் பாடல்களின் உரிமை சம்பந்தமாக.
    இயக்குனர் சங்கர் தனது ஒரு படத்தில் ராஜாவின் இசையை பயன்படுத்த மேற்படி
    நிறுவனத் தில் அனுமதி பெற்று பயன்படுத்த ராஜா இப்பொது சங்கருக்கு வக்கீல்
    நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார் .இப்போது ராஜா பற்றி ஆகி என்ன சொல்வாரோ ???

    பதிலளிநீக்கு
  5. ரஹ்மான் பற்றிய கருத்துக்கள் தாங்கிய கட்டுரை நன்று. ஆனால் எனக்குத் தோன்றுவதைச் சொல்லட்டுமா. முரளி. ஒரு சாதாரண இசை ரசிகன் என்ற முறையில் நீங்கள் நினைத்ததை எழுதி இருக்க வேண்டும் . அது ஒரு வெகுஜன அபிப்பிராயமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. எளிமையானவர்கள் எப்போதும் உயர்ந்து நிற்கிறார்கள்! நல்ல கட்டுரை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. அகிலன் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. ரஹ்மான்தான் நமது தமிழிசையில் நீண்ட காலங்கள் காணாமல் போயிருந்த தரமான கவிதைகளை மீட்டெடுத்தார். அவருடைய வருகைக்குப் பிறகே தமிழ்ப் பாடல்களில் நல்ல தமிழ் கவிதையை சுவாசிக்க முடிந்தது.

    தோழி மைதிலி சொல்வதுபோல பல இளையராஜா பாடல்கள் எப்படி வெற்றி பெற்றன என்பது நம்மை ஆச்சர்யப்படுத்தும் நிஜம். இசையின்றி (அதுவும் பல சமயங்களில் படு திராபையாக இருக்கும்) அவரது பல பாடல்கள் கேட்க சகிக்காது. முத்துமணி மாலை என்றொரு பாடல். மிக அருமையான மெட்டு. இசை தாலாட்டும். ஆனால் பாடல் வரிகளோ குமட்டிக்கொண்டு வரும். சரிதான். இப்படித்தான் காலம் கழியும் என்று நினைத்திருந்த போது உள்ளே அதிரடியாக நுழைந்து சரிந்த நமது தமிழிசையின் தரத்தை மீண்டும் உயர்த்தினார் ரஹ்மான்.

    நல்ல கட்டுரைப் பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. நண்பரே,

    சொல்ல மறந்துவிட்டேன். அகிலன் எழுதியதை வெளியிட்டது இருக்கட்டும். திரு ஜி எம் பாலசுப்ரமனியன் சொன்னதைப் போன்று உங்களின் கருத்தையும் வெளியிட்டிருக்க வேண்டும். எழுதியதை வீணாக்காமல் பதிவேற்றம் செய்யுங்கள். ஒவ்வொரு எழுத்தும் ஒரு விதம். சில சமயங்களில் எளிமைதான் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  9. அருமையான கட்டுரை. வைரமுத்துவை மீண்டும் களமிறக்கியவர் என்கிற விதத்தில் ரகுமானை நிறையவே பிடிக்கும். ஏ.ஆர்.ரகுமான் பற்றிய சொக்கன் அவர்கள் எழுதிய புத்தகம் pdf வடிவில் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது . நிறைய தகவல்கள் இருக்கிறது. அதைப் படித்து விட்டீர்களா ..

    பதிலளிநீக்கு
  10. திரு கரிகாலன் சொல்லியிருப்பதுபோல், அகிலன் தற்சமயம் இளையராஜா பற்றி என்ன சொல்லுவார் என்பது பார்க்கப்படவேண்டும்.
    பாலசுப்ரமணியமும் காரிகனும் சொல்லியிருப்பதுபோல உங்கள் கருத்தையும் வெளியிடுங்கள்..

    பதிலளிநீக்கு
  11. நல்ல கட்டுரைப் பகிர்வு! அதுவும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் பற்றிய கட்டுரை. இசைப்புயல் மனிதர் படு அமைதி. அந்த அடக்கம், அமைதி, தலைகனம் இல்லாத குணம் எல்லாம்தன் அவரை வெற்றிப்பாதையில் வைத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. யாரையும் தரக்குறைவாகப் பேசாதவர். இசைக்கு முன் நல்ல மனிதர்!

    பதிலளிநீக்கு
  12. மிகச் சிறந்த கட்டுரை. மிக நிதானத்துடன் படித்தேன். அமுதவன் என்ன எழுதியிருப்பார் என்று எதிர்பார்தேன். நழுவிவிட்டார். இளையராஜா இன்னமும் பல படிகள் ஏறியிருக்க வேண்டியவர். அவரின் தனிப்பட்ட குணாதிசியங்களே இவரை பல படிகள் பின்னுக்கு இழுத்து போட்டு விட்டது.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895