என்னை கவனிப்பவர்கள்

சனி, 12 டிசம்பர், 2015

மழை விடுமுறையால் மாணவர் படிப்பு பாழாய்ப் போனதா?


மழை காரணமாக பள்ளிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது அனைவரும் அறிந்ததே. இவ்வளவு விடுமுறை தேவையா? மாணவர் படிப்பு பாழாகிறதே. அரையாண்டு தேர்வுகள் தள்ளிப் போகிறதே . இழந்த பாடத்தை ஈடுகட்டுவது எப்படி என்று கவலைப் படத் தொடங்கி விட்டனர் சிலர்  இத்தனை நாட்கள் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறதே என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர் பலர் விடுமுறை என்றால் மாணவர்களுக்கு  மகிழ்ச்சிதானே (சில ஆசிரியர்களுக்கும்தான்)   குறிப்பாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிறையில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற்றது போன்ற உணர்வை காண முடிந்தது. 
அது கிடக்கட்டும்! விடுமுறையால்  படிப்பு பாதிப்பா? இதோ  இந்த மாணவன் சொல்வதைக் கேட்போம் 

ஒரு மாணவனின் குரல்

                                                     மழை விடுமுறை
                                                     மாணவர்கள் படிப்பு பாதிப்பாம்!
                                                     புலம்பிக் கொண்டிருக்காதீர்கள் பெருசுகளே!
                                                     மழை கற்றுக் கொடுக்காததையா
                                                     ஆசிரியர் கற்றுக் கொடுத்து விடப் போகிறார்?
.
                                                     ஆர்க்கிமெடிஸ் தத்துவத்தையும்
                                                     மிதத்தல் விதிகளையும்
                                                     அறிவியல் ஆசிரியரை விட
                                                     நன்றாகவே  சொல்லித் தந்தது மழை!
.
                                                     ஆற்றங்கரை, 
                                                     நாகரீகங்களை வளர்த்த
                                                     வரலாற்றை பாடத்தில் படித்தோம்.
                                                     நாகரீகம் 
                                                     ஆற்றங்கரைகளை   அழித்த வரலாறு
                                                     மழை தானே சொல்லியது

                                                     கொள்ளளவும்,  செ.மீ, .டிஎம் சி கணிதப் பாடத்தை
                                                     கச்சிதமாக கற்பித்துக் காட்டியது மழைதானே!

                                                     ஒண்டிக்கொள்ள இடமின்றி தவித்தபோது
                                                     நிவாரணம் செய்ய வந்தோரால் 
                                                     அரசியலும் கொஞ்சம் அறிய முடிந்ததே!

                                                     வெள்ளம் பெருக்கெடுத்துப் பரவிய போது 
                                                     புவியியல் பாடமும் புரிந்து போனது

                                                     எந்த பள்ளிப்பாடத்தினாலும் 
                                                     அறிய முடியாத 
                                                     நல்லமனம் படைத்தோரை 
                                                     மழைதான் அடையாளம் காட்டியது! .

                                                     இத்தனை பாடங்கள் போதாதா?
                                                     இன்னொரு முறை சொல்லாதீர்!  
                                                     மழை விடுமுறையால் 
                                                     படிப்பு பாழாய்ப் போனதென்று!

                                                          *************************


                                           ஒரு பாமரனின் மழை நாட்கள்
(மைதிலி கஸ்தூரி ரங்கனின் ஒரு பதிவுக்கு நான் இட்ட கருத்தின் சிறு நீட்சி)                                                                                                       மழை
                                                           முதல் நாள் மகிழ்ச்சி
                                                           இரண்டாம் நாள் இனிமை
                                                           மூன்றாம் நாள் முணுமுணுப்பு.
                                                           நான்காம் நாள் நடுக்கம்
                                                           ஐந்தாம் நாள் அச்சம்
                                                           ஆறாம் நாள் ( மழை நின்றாலும்)   அவதி
                                                           ஏழாம் நாள் (நிவாரணத்திற்காக) ஏக்கம்
                                                           எட்டாம் நாள் எதிர்பார்ப்பு
                                                           ஒன்பதாம் நாள் ஓய்வு
                                                           பத்தாம் நாள் .....
                                                           போங்கப்பா பொலம்பிகிட்டே  
                                                            இருக்க   முடியுமா?
                                                           பொழைப்பை பாக்க வேணாமா?

                                                ======================================

23 கருத்துகள்:

  1. பாமரனின் மழை நாட்கள்... உண்மை தான். எப்படியும் பிழைப்பை பார்த்தாக வேண்டுமே.....

    பதிலளிநீக்கு
  2. //இத்தனை பாடங்கள் போதாதா?
    இன்னொரு முறை சொல்லாதீர்!
    மழை விடுமுறையால்
    படிப்பு பாழாய்ப் போனதென்று!///
    ஆனாலும் பெரிசுகள் பாடம்
    கற்றுக்கொண்டிருப்பார்களேயானால்
    இனி வரும் வெள்ளத்தையாவது தடுக்கலாம்
    பார்ப்போம்
    கற்பார்களா அல்லது
    நாட்கள் பல கடந்ததும்
    மறப்பார்களா என்று
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை!!!! அந்த மாணவனுக்கு/நீங்கள் தான் என்பது தெரியுமே....!!! வாழ்த்துகள்! உண்மை இந்த மழை கற்றுக் கொடுத்த பாடங்கள் வாழ்வியல் பாடங்கள் எந்தப் பள்ளியிலும் கிடைக்காத பாடங்கள். ஆனால் அரசியல வாதிகளுக்கு எந்தப் பாடமும் மர மண்டையில் ஏறுவதில்லை என்ன செய்ய...
    உங்கள் பதில் கவிதையும் அருமை...அருமை...ஹும் மக்கள் இதோ மீண்டும் பழைய படி பர பரக்கத் தொடங்கிவிட்டார்கள் இங்கா 10 நாட்கள் முன்பு அவலம் என்ற சுவடு கூட இல்லாமல்…

    பதிலளிநீக்கு
  4. மழை பல பாடங்கள் கற்றுத் தந்து விட்டது...

    பதிலளிநீக்கு
  5. முதல் கவிதை, இரண்டாம் கவிதை இரண்டுமே ரசிக்க வைத்தது!

    பதிலளிநீக்கு
  6. மழை பல பாடங்களைக் கற்றுத் தருகிறது ஆனால் நாம் கற்றுக் கொண்டோமா.இதுவும் கடந்து போகத்தானே வேண்டும் பிழைப்பு இருக்கிறதே

    பதிலளிநீக்கு
  7. அந்த மாணவனின் புரிதலும், வார்த்தைகளும் அட்சரலட்சம் பெறும் அண்ணா.
    உங்கள் மழை கவிதை மனதை கனக்கச்செய்யும் வலி:(( அந்த பத்தாம்நாள் ஒரு சென்னைவாசியாக முரளி அண்ணா கலக்கீடீங்க.....

    பதிலளிநீக்கு
  8. அது பாடம் அல்ல ,இயற்கை தந்த ஞானம்,இதுதான் உண்மையான கல்வி என்றாலும் மதிப்பெண்ணுக்கு இது உதவாதே :)

    பதிலளிநீக்கு
  9. அருமையாக
    உரைத்தீர்கள்
    பிள்ளைகளுக்கு
    பாடத்தை
    மனனம் செய்து
    மூளையிளேற்றி
    வாந்தியெடுக்க
    வைப்பதே
    ஆசிரியப் பணி
    எணக் கருதும்
    சிலருக்கு
    உரைக்கும்படி
    உரைத்தீர்கள்
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. மழை மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நிறைய கற்றுத் தந்திருக்கிறது.
    த ம 6

    பதிலளிநீக்கு
  11. கற்றதும் இழந்ததும் ஏராளம்!

    பதிலளிநீக்கு
  12. ஆம் மழை பாடம் தந்தது. மழை முடிய மாறாது நின்றால் மகிழ்ச்சியே.
    எத்தை அரசியல் சரித்திரங்கள் மக்கள் கண்டது.
    நல்ல பதிவு சகோதரா.
    வேதாவின் வலை.

    பதிலளிநீக்கு

  13. எத்தனை அரசியல் சரித்திரங்கள் மக்கள் கண்டது.

    வேதாவின் வலை.

    பதிலளிநீக்கு
  14. மழை கற்றுக் கொடுக்காததையா ஆசிரியர் கற்றுக் கொடுக்கப் போகிறார்.--பெருசுகள் உணர்ந்தால் சரி........


    .

    பதிலளிநீக்கு
  15. வேதனைையான உண்மைகள் நண்பரே
    த+ம 9

    பதிலளிநீக்கு

  16. மழைப் பாக்களில்
    சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  17. நல்ல பாடம். நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. பெற்றது மழை: கற்போமா பாடம். கவிதை சிறப்பாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. வாழ்வியல் பாடம் கற்றார்கள்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895