என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 14 ஜூலை, 2025

கடைசி பெஞ்ச்

 




 கடைசி பெஞ்ச் என்று
கழிவிரக்கம் வேண்டாம்

கடைசி பெஞ்ச்சில் இருக்கிறோம் என்று
அதில் இருக்கிற யாரும் கவலைப் பட்டதில்லை

கடைசி பெஞ்ச்.
கவனிக்காதவர்களின் இடம் அல்ல
அது கவனிக்கப் படாதவர்களின்
 புகலிடமாகக்கூட இருக்கலாம்

கடைசி பெஞ்ச்காரணை வைத்துத்தான்
ஒரு வகுப்பறையே
அடையாளம் காணப்படும்

கடைசி பெஞ்ச்காரன்தான்
வகுப்பறைக்கே பாதுகாப்பு 

அவன் ஒரு போதும்
 முதல் பெஞ்ச மாணவனிடம் 
போட்டிக்கு வந்ததில்லை

அவனைப் போல
 எப்போதும் எச்சரிக்கையாய்
இருக்கத் தேவை இல்லை..
நல்லவன் போல் நடிக்கத் தேவை இல்லை 

 கடைசி பெஞ்ச் காரர்கள்
வரலாறு படைக்கப் பிறந்தவர்கள்

முன் பெஞ்ச் மாணவர்களுக்கு
கடைசிபெஞ்ச் காரர்கள் மீது
பொறாமை உண்டு.
சில அறுவை ஆசிரியர்களிடமிருந்து தப்பிக்க
 கடைசி பெஞ்சுக்கு செல்லலாம் என்றால் முடியாது. 

அப்பனிடமும் சரி ஆசிரியர்களிடமும் சரி
அடி வாங்கத் தயங்காதவன்
கடைசி பெஞ்ச்காரன் 

கவிதை எழுதத் தெரிந்தவனை
கடைசி பெஞ்சில்தான் காணமுடியும்

 ஆசிரியரைப் போல அனைத்து
 மாணவர்களையும் பார்க்க முடிந்தவன் 
 கடைசி பெஞ்ச்காரன்தான்

அவர்களைப் போல் அல்லாது 
முன் பெஞ்ச் மாணவனின்
 பின்னனியும் தெரிந்தவன் 
 கடைசிபெஞ்ச் காரன்

காட்டிக் கொடுக்கத் தெரியாதவன்
கடைசி பெஞ்ச் காரன்/ 

ஆசிரியரைப் போலவே  கடைசி
பெஞ்ச்காரனால் மட்டுமே
வகுப்பறையக் கட்டுப்பாட்டில்
வைக்க முடியும்

ஆசிரியரையும் கற்றுக்கொள்ள
வைப்பவன்தான் கடைசி பெஞ்ச் மாணவன்


 கடைசி பெஞ்ச் இருக்கட்டும்-அதைக் 
காட்சிப் பொருளாக்கத் தேவை இல்லை..

சாட்சிப் பொருளாகவே தொடரட்டும்

 

-------------

டி.என்.முரளிதரன்

செவ்வாய், 10 ஜூன், 2025

முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ-சிவா ஆனந்த்



 ”முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ” பாடல் பற்றி பலரும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். நாமும் நம் பங்குக்கு ஏதாவது எழுதி வைப்போம்

நம்ம பஞ்சாயத்து சின்மயி, தீ யார் படியது நன்றாக இருக்கிறது என்பதல்ல. பாடலை எழுதிய சிவா ஆனந்த பற்றி யாரும் அவ்வளாவாகப் பேசவில்லை.. பாடல் ஹிட் ஆனதற்கு இன்னொரு வைரமுத்து , கண்ணதாசன் என்று புகழ்வார்கள் என்று பார்த்தால் யாரும் வாய் திறக்கவில்லை. காரணம் பாடலின் இசையும் மெட்டும் வரிகளை பின் தள்ளிவிட்டன. என்று சொல்லலாம். மேலும் அவர் தொழில்முறைப் பாடலாசிரியர் அல்ல . அஞ்சு வண்ணப் பூவே எழுதிய கார்த்திக் நேத்தாவின் பேட்டிகள் அங்கங்கே கண்ணில் பட சிவா ஆனந்த் பற்றி ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க,

விகடன் டிவியில் அவரது பேட்டி கண்ணில் பட்டது. கொஞ்ச நேரம் பார்த்தேன். அவரா இந்தப் பாடல் எழுதினார் என்று ஆச்சர்யமாக இருந்தது. மணிரத்தினம் போல தமிழ் பேசுகிறார், நடிகர் ஜெயராம் பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச்சில் மணிரத்தினம் போல் பேசிக் காட்டியது நினைவுக்கு வந்தது.. நிறைய ஆங்கிலம்தான் பேசுகிறார். இவரைப் எப்படிப் பாடல் எழுத வைத்தார் எனத் தெரியவில்லை. இவர் இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட
இப்பாடலின் முதல் வரியை ஏ.ஆர் ரகுமான் சொன்னதாகச் சொன்னார். ஆங்காங்கே பாடல் வரிகள் வார்த்தைகள் நன்றாகவும் மெட்டுக்கு பொருத்தமாகவும் இருந்தாலும் ஒரு தொடர்ச்சி இன்மை தெரிகிறது. AI உதவியுடன் எழுதியது போலவும் இருக்கிறது. கூட்டாக எழுதியும் இருக்கலாம். எப்படியோ பாடல் பேசுபொருளாகிவிட்டது. சில பாடல்களுக்கு வரிகள் முக்கியமில்லை மெட்டும் இசையும் மட்டுமே போதும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது..

சின்மயி மேடையில் பாடியது முதல் முறை கேட்கும்போதே நன்றாக இருந்தது. பொதுவாக ரகுமான் பாடல்கள் கேட்க கேட்கத்தான் இசை நுணுக்கங்கள் புலப்படும். இப்பாடல் முதல் முறைகேட்கும்போதே என்னைப் போலவே பலருக்கும் பிடித்திருக்கிறது.

பாடகி தீ பாடியதையும் பின்னர் கேட்டேன். அவர் பாடியது மிகவும் நன்றாகவே இருந்தது.
படத்தில் இப்பாடல் இடம் பெறவில்லை என்று சொல்கிறார்கள்.. இடம்பெறாவிட்டால் என்ன நீண்ட நாட்களுக்குப் பிறகு. ஏ.ஆர் ரகுமானுக்கு இன்னும் ஒரு அதிரடி ஹிட்

(எனக்கு என்னவோ ’அஞ்சு வண்ணப் பூவே’ அவ்வளவாகப் பிடிக்கவில்லை. நம்ம ரசனை அவ்வளவுதான்)