என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 23 ஏப்ரல், 2020

நான் கிருஷ்ணதேவராயன் வித்தியாசமான சரித்திரக் கதை-ரா.கி.ரங்கராஜன்


     
          சரித்திரக் கதை ஆசிரியர்கள்  என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கல்கியும் சாண்டில்யனும். பிற சரித்திரக் கதை ஆசிரியர்களும் இவர்களைப் பின்பற்றியே இவர்களுடைய பாதிப்பில்தான் சரித்திரக் கதைகள் எழுதினார்கள். ஒரு காலத்தில் சரித்திர தொடர்கதை இடம் பெறாத பத்திரிகைகளே இல்லை எனலாம். சரித்திரக் கதையை வித்தியாசமான தனக்கே உரிய பாணியில் முயற்சித்தவர் சுஜாதா. அதைப் போலவே முற்றிலும் மாறான முயற்சியை  மேற்கொண்டவர் ரா.கி.ரங்கராஜன். இவர் பல்வேறு புனைப் பெயர்களில்  தனித்தனி பாணியில் எழுதிக் கலக்கியவர் என்பதை  பகிர்ந்திருந்தார் முகநூல் மற்றும் வலைப்பூ பிரபலம் நண்பர் பால கணேஷ் )
     நான் கிருஷ்ண தேவராயன் என்னும் முதல் சரித்திர நாவலை ஆனந்த விகடனில் தொடராக எழுதினார் ரா.கி.ரங்கராஜன். தலைப்பே என்னைக் கவர்ந்துவிட்டது. காரணம் இதுவரை தமிழ் சரித்திர நாவல்கள் படர்க்கையில்தான் எழுதப்பட்டுள்ளன. முதன்முறையாக தன்மையில்,  அதாவது தானே சொல்வது போல சரித்திரக் கதை யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில்  ’நான் கிளாடியஸ்’ என்ற நாவலை ராபர்ட் கிரேவ்ஸ் என்பவர் 1934 லேயே எழுதி விட்டாராம். இது ரோமப் பேரரசர் தானே எழுதுவது போல கூறப்பட்ட வரலாற்று நூலாகும். இதனை கமலஹாசன் தனக்கு பிடித்த  புத்தகம் என்றும் தமிழில் சொல்லுங்கள் என்று  கொடுத்ததாக  ரா.கி.ர. கூறுகிறார்.
              ரா.கி.ர முதலில் அதனை மொழிபெயர்த்து எழுத நினைத்தார். பின்னர் அதனை கைவிட்டு அதிகம் அறியப்படாத தமிழகத்தோடு தொடர்புடைய விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற  கிருஷ்ண தேவராயன் தன்வரலாறாக கூறுவது போல எழுதியுள்ளார். ஏகப்பட்ட நூல்களை குறிப்பு நூல்களாக பட்டியலிட்டு அதன் அடிப்படையில் எழுதி இருக்கிறார். சுஜாதா சொன்ன சில ஆலோசனைகளையும் மனதில் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
    (இவர் ஏன் ஆனந்த விகடனில் எழுதினார் என்பது தெரியவில்லை. நியாயமாக குமுதத்தில் தானே எழுதி இருக்க வேண்டும். தகவல் பெட்டகம் பால கணேஷ் கூறக் கடவது)

       சரி கதைக்கு வருவோம். சரித்திரக் கதைகளில் வரும் அடிக்குறிப்புகள் இதில் இல்லை சரித்திரக் கதைகளை தானே சொல்வது  போல் எழுதினால் அதிக கவனம் வேண்டும்.  சொல்லப்படும் காலத்திற்கு பிந்தைய வரலாற்று நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கக் கூடாது . இதனை கவனத்தில் கொண்டே எழுதி இருக்கிறார் ரா.கி.ர. சில இடங்களில் சுஜாதா டச் இருப்பதைக் காணமுடிகிறது.
      கதை என்ன? விஜயநகரப் பேரரசின் சக்கரவர்த்தி  கிருஷ்ணதேவராயரின் மனதை சின்னா தேவி என்ற  பெண் கொள்ளை கொள்கிறாள். விஜயநகர அரச வம்சத்தையே வெறுக்கும் ஒருவன். அவனின் நாடகக் கலை திறமை கொண்ட தங்கைதான் சின்னா தேவி.  முதலில் மன்னன் என்று அறியாத நிலையில் காதலை அங்கீகரிக்கும் அண்ணன் உண்மை அறிந்ததும் தங்கையை அழைத்துக் கொண்டு தலைமறைவாகிவிடுகிறான். காதலில்  தவிக்கும் தேவராயன் சின்னா தேவியை தேடிக்கொண்டிருக்கிறான். 
  அரசியல் காரணங்களுக்கக   ஸ்ரீரங்கப்பட்டினத்து இளவரசி திருமலாம்பிகாவை மணந்தாலும் சின்னாதேவியை கிருஷ்ணதேவராயரால் மறக்க இயலவில்லை. காயத்ரி ( இது கற்பனைப் பாத்திரம்)  என்பவளின் உதவியால் சின்னாதேவியை கண்டறிந்துவிட்டாலும்  அவளை மணமுடிக்க இயலவில்லை.   அவள்  கையில் சங்கும் சக்கரமும் பொறிக்கப்பட்டு இறை பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டு தேவதாசி ஆகி விட்டதாகவும் மனிதர்களை காதலிக்கும்  உரிமை இல்லை என்றும் கூறுகிறாள் .     ஆனாலும் காதலியை மறக்க இயலாத ராயர் தன் மன ஒட்டங்களையும் காதல்     தவிப்பையும்  தனது கால வரலாற்று சம்பவங்களின் ஊடே விவரிக்கிறார்

    கிருஷ்ணதேவராயனின்  பிரதான அமைச்சர் அப்பாஜி.  மிகுந்த செல்வாக்கு பெற்றவர். அரச குடும்பத்திர்கு விசுவாசமானவர். அவரது உன்மையான பெயர் திம்மராசு. இவர்தான்   கிருஷ்ணதேவராயருக்கு (அவரது தமையனார் வீர நரசிம்மருக்கும்) உறுதுணையாய் இருக்கிறார். இவர் சொல்வதை மன்னர் தட்டுவதில்லை. இவரது ஆலோசனைப்படிதான்  முடிவுகள் எடுக்கப்பட்டன. கிருஷ்ண தேவராயரை மன்னராக ஆக்கியது இவர்தான்.  அதுவும் எப்படிப்பட்ட சூழ்நிலையில்!  கிருஷ்ணதேவராயரின் தமையனார் வீரநரசிம்மர் தனக்குப் பின் தன் மகனுக்கு முடிசூட்ட வேண்டும் என்றும் தம்பி  கிருஷ்ணதேவராயரின் கண்னைப் பறித்து சிறையில் அடைத்து விடும்படி கூறி விடுகிறார். சரி என்று சொல்லிவிட்டு அவனைக் காப்பற்றி விடுவதோடு  வீரநரசிம்மர் இறந்ததும் கிருஷ்ண தேவராயனை முன்னிருத்தி அரசராக்கி விடுகிறார். அதனால் அப்பாஜி மீது அளவற்ற மதிப்பை கொண்டிருக்கிறார்கள் கிருஷ்ணதேவராயரும் அவரது தாயாரும். பிரச்சனை ஏதும் வரக்கூடாது என்பதற்காக வீரநரசிம்மனின் மகன்களான அச்சுதன் ரங்கன்  இருவரையும் அரண்மணைச் சிறையில் வைத்து விட்டார், 

    ஆனால் ஒரு கட்டத்தில் கிருஷ்ண தேவராயர் தன் 6 வயது பாலகன் திருமலைக்கு முடிசூட்ட நினைக்கிறார். அப்பாஜி அதை வேண்டாம் என்று ஆட்சேபிக்கிறார். ஆனாலும் ராயர் உறுதியாக இருக்கிறார். திடீரென இளவரசன்  திருமலை இறந்து விடுகிறார். அந்தப் பழி அப்பாஜி மேல் விழுகிறது. அவர் திருமலையை விஷம் வைத்துக் கொன்று விடுகிறார் என்று வதந்தி நிலவ கிருஷ்ண தேவராயர் கோபம் கொள்கிறார். அப்போது விஜய நகரம் முழுதும் விஷ ஜுரம்( அப்போதைய கொரோனாவோ? ) பரவிக் கொண்டிருந்தது. நிக்கோலஸ் என்ற இத்தாலிய மருத்துவன் விஜயநகரத்தில் மருத்துவ ஆராய்ச்சி செய்து வருகிறான். இளவரசனுக்கு முடிசூட்டு வைபவத்தில்   ஆறுகளில் இருந்து கொண்டு வரப் பட்டு நீண்ட நாளாக வைத்திருந்த புனித தீர்த்ததங்களைக் கொண்டு குளிப்பாட்டுகிறார்கள்.  சரியாக பாதுகாக்கப்படாத இந்த நீரின் காரணமாகத்தான் காய்ச்சல் வந்து இறந்து விடுகிறான் என நிக்கோலஸ் நிரூபிக்கிறான்.  
(இதில் நிக்கோலஸ் சொல்வதாக ஒரு வசனம் இந்த  விஷ  ஜுரத்திற்கு குமரனென்றும் தெரியாது, கிழவனென்றும் தெரியாது .சக்கரவர்த்தி என்றும் தெரியாது. ஆண்டி என்றும் தெரியாது-இப்போது கொரோனாவுக்கும் பொருத்தமாக உள்ளது ஆச்சர்யம்)
இதுவும் ஒருவகை கொரோனா சமுக இடைவெளிதான்

   அதன் பிறகு சமாதானம் அடைந்து அப்பாஜியிடம் மன்னிப்பு கோருகிறார். (ஆனால் சரித்திரம் கூறும் கதை வேறு கடைசியில் சொல்கிறேன்.)

பல்வேரு சம்பவங்களுக்குப் பின் ஆச்சார்ய வெங்கடத்தையா மூலமாக பரிகாரம் செய்யப்பட்டு இறைபணியில் இருந்து விடுவிக்கப் பட்டு  அவளை கிருஷ்ணதேவராயர் திருமணம் செய்து  கொள்வதாக கதை முடியும்

    தன் வரலாறாகச் சொல்வதால் தன்னையே  பெருமைப் படுத்திக் கொண்டு சொல்வது போல எழுது முடியாது என்பதை உணர்ந்து  எழுதி இருக்கிறார் ரா.கி.ரா. கிருஷ்ண தேவராயர் ஒரு அறிஞர்: கவிஞர்: தெலுங்கு, கன்னடம் சமஸ்கிருதம்  அறிந்தவர்: தமிழும் அறிந்திருந்தார். தெலுங்கு  இலக்கியத்தில்  போற்றப்படும்   ஆமுக்த மால்யதா என்ற நூல்  கிருஷ்ண தேவராயரால் எழுதப்பட்டது . இது ஆண்டாள் பாசுரங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது.    தெலுங்கு இலக்கியத்தில் முக்கிய இலக்கியமாக  இன்றும் கொண்டாடப் படுகிறது.

    ஏராளமான சுவாரசியமான தன் காலத்து வரலாற்றுத் தகவல்களை கிருஷ்ணதேவராயர்   சகஜமான உரையாடல்கள் மூலம்  நகைச்சுவையுடன் கூறுவது ரா.கி.ர வின் எழுத்துத் திறமைக்கு சான்று. பொதுவாக வரலாற்று நாவல்களில்  பேரரசர்கள் கிண்டலும் கேலியுமாக பேசமாட்டார்கள். ஆனால் இதில் கிருஷ்ணதேவராயர் எப்போது   நக்கல் நையாண்டியுடன் பேசுவது சுவாரசியம் கூட்டுகிறது.
     கிருஷ்ண தேவராயருக்கு   நகைச்சுவை உணர்வு  அதிகம் இருந்திருக்கும் என்பதற்கு சான்று அவரது அவையில் அஷ்ட திக்கஜங்கள் என்ற அறிஞர் பெருமக்கள் அவையை அலங்கரித்தனர் என்பதை நாம் படித்திருப்போம். தெனாலி ராமன் எனும் விகடகவியும் இதில் ஒருவர்.
இதை எப்படி கிருஷ்ணதேவராயர் கூறுகிறார் பாருங்கள்
     அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு அறிஞர்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள்  அவர்கள் அனைவரையும் ஒரு சேர நான் பார்த்ததில்லை. நவரத்தினங்கள் என்ற 9 அறிஞர்களை ஆதரித்த சந்திரகுப்தருக்கு இணையாக என்னை சொல்வதில் இவர்களுக்கு என்ன பெருமையோ என்று தன்னையே கிண்டலடித்துக் கொள்வார்
     ஒரு இடத்தில் இந்தக் கவிஞர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை என்பார். வடிவேலுவின் ’பாடித் தொலையும்’ என்பது நம் நினைவுக்கு வரும்
   இன்னோர் இடத்தில் ஓவியன் ஒருவன் கிருஷ்ணதேவராயனை அட்டகாசமான ஓவியமாக வரைந்து  காட்ட, அதைப் பார்த்து சிரித்துக் கொண்டே இப்படி ஆஜானுபாகுவாகவா இருக்கிறேன்?. நான் சராசரி பருமன், உயரம் உடையவன்தானே? எனது முகத்தில் அம்மை வடுக்கள் கூட இருக்கிறதே, மிகைப் படுத்திக் காட்டுவதில் கலைஞர்களுக்கு எப்போதுமே மோகம்தான் என்று கிண்டலடிப்பார். வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற  வடிவேலுவின் இம்சை அரசன் 23 ம் புலிகேசி காட்சி இதில் இருந்து உருவாக்கப் பட்டதாக இருக்கலாம்.

திருப்பதி கோவிலில் ராயர்
   ஒரிடத்தில் திருமலாதேவியும் சின்னா தேவியும் ஒருவரை ஒருவர் அக்காஜி என்று அழைத்துக் கொளவார்கள் இதில் யார் அக்காஜி யார் தங்கை ஜி என்று கிண்டல் செய்வார் ராயர்.
 (கிருஷ்ணதேவராயர்- சின்னாதேவி, திருமலாம்பாவோடு காட்சி தரும் சிலைகள் இன்றும்  திருப்பதியில் காணலாம்)

 பல  சுவாரசியமான தகவல்களைத் நிறைந்தது இந்நூல்  
      ராயரின் தாயார் தனயனின் காதலை ஆதரித்தாலும் ஆச்சார்யர் வெங்கட தத்தையாவின் அனுமதி கோருகிறார் .அவர் மறுக்கிறார். நீங்கள் அனுமதிக்காவிட்டால் அவன் சைவனாக மாறிவிடுவான் மதமாற்ற பிளாக்மெயில் செய்ய  அவரும் பயந்து பரிகாரம் கூறுவது சுவாரசியம். 
        கிருஷ்ணதேவராயர் இஸ்லாமியர்களையும் மதித்தார். அவரது படையில் முஸ்லீம்கள் இருந்தனர். அரசரைப் பார்க்க வரும் முஸ்லிம் பெரியவர்கள் தலைகுனிந்து  வணக்கம் செலுத்துவதில் சங்கடப் படுவதை உணர்ந்த ராயர். ஒரு சிம்மாசனம் செய்து அதில் குர்ஆனை வைத்தாராம். அதனால் சங்கடம் இன்றி வணக்கம் செலுத்தினர் (என்னா ஐடியா?)

        பல அதிர்ச்சி தரும் மூடப்பழக்கங்கள் இக்காலத்தில் வழக்கத்தில் இருந்தன.  உடன் கட்டை ஏறுதல் எனபதை அறிந்திருப்போம், ஆனால் இதில் கூறப்படும்  முறை  கொஞ்சம் பயங்கரமானது. ஆழமான குழி தோண்டி இறந்த கணவனை  குழியில் இறக்கி கூடவே மனைவியையும்  உயிருடன் குழியில்  இறக்கி  கொஞ்சம் கொஞ்சமாக  மண்ணைப்போட்டு மூடுவதே அது. 
   
   ஒரு நல்ல வித்தியாசமான சரித்திர நாவல் படித்த அனுபவம் என்றாலும் இதில் குறைகள் இல்லையா என்றால்  இருக்கிறது. தற்கால வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியது. சில வரலாற்று உண்மைகளைக் கூறாமல் விட்டது  கற்பனைப் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்பன அவற்றில் சில.
     கிருஷ்ணதேவராயன் தன் மகனைக் கொன்றுவிட்டதாக கோபம் கொண்டு  தான் அதுவரை போற்றி மதித்துவந்த மந்திரி அப்பாஜி என்ற திம்மராசு  மற்றும் அவரது  மகனின்   கண்களைப் பறித்து சிறையில் அடைத்ததாக வரலாறு சொல்கிறது. பின்னர் இதனை தவறென்று உணர்ந்து வருந்தியதாக கூறப்படுகிறது.  ”கிருஷ்ண தேவராயர்”  தெலுங்குப் படத்திலும் இப்படித்தான் காட்டுகிறார்கள். ஆனால் ரா.கி.ர. இதனைக் குறிப்பிடவில்லை 
அப்பாஜி சிறை வைக்கப்பட்ட இடம்
       கிருஷ்ண தேவராயருக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு உண்டு. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் குடியேறியதற்கு முக்கியக் காரணம் விஜயநகர ஆட்சிதான்   மதுரையில் நாயக்கர் ஆட்சிக்கு அனுமதித்ததும் கிருஷ்ணதேவராயர்தான்.
      இந்நூலும்   சு வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டத்தின் முற்பகுதி ஒரே வரலாறைத்தான் சொல்லுகின்றன. ஆனால் இருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கொஞ்சம் மாற்றி எழுதியுள்ளதாக  தெரிகிறது. கிருஷ்ண தேவராயரின் தளபதி நாகம நாயக்கர் விஜயநகரத்தின் கீழுள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டார். ஆனால் அவர் கிருஷ்ணதேவராயருக்கு கீழ்ப்படியாது தானே அரசு அமைக்க முற்பட அவரை அடக்க  நாகம நாயக்கரின் மகனான விஸ்வநாத நாயக்கனை அனுப்புகிறார். அவனும் தந்தையை சிறைப்பிடித்து கிருஷ்ணதேவராயர் முன் நிறுத்துகிறார். அவனது வீரத்தையும் விசுவாசத்தையும்  மெச்சி தமிழகப் பகுதியை சில நிபந்தனைகள் விதித்து ஒப்படைத்து விடுகிறார். அதில் இருந்து மதுரையில் நாயக்கர் ஆட்சி  தொடங்கியது. இந்த வம்சத்தில் சிறப்பு பெற்ற்வர் திருமலை நாயக்கர்,  இராணி மங்கம்மாள், இராணி மீனாட்சி இவர்கள் வழிவந்தவர்களே. 

      இது தொடராக வந்தபோதே படித்திருந்தாலும் மீண்டும் படித்து ரசிக்க வாய்ப்பு கொடுத்தது கொரோனா ஊரடங்கு.  மறு வாசிப்பும் சுவாரசியம்தான். 
கொரோனா ஊரடங்கின் ஆரம்பத்தில்  எழுதிய பதிவு சரி பார்த்து இன்றைய இன்று உலக புத்தக தினத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி
---------------------------------------------------------



11 கருத்துகள்:

  1. படித்ததில்லை. சுவையாக இருக்கிறது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  2. சில கதைகளை படித்துள்ளேன்...

    // பல அதிர்ச்சி தரும் மூடப்பழக்கங்கள் இக்காலத்தில் வழக்கத்தில் இருந்தன //

    உண்மை தான்... இக்காலத்தில் அக்காலத்தை விட அதிகம்...!

    பதிலளிநீக்கு
  3. உங்களால், கதையினைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மகிழ்ச்சி. (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

    பதிலளிநீக்கு
  4. முரசு தொலைக்காட்சியில் தெனாலிராமன் படம் ஓடுகிறது . கிருஷ்ணதேவராயரை பார்த்து கொண்டு இருந்தேன்.

    இங்கும் உங்கள் பதிவில் கிருஷ்ணதேவராயரை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.


    //இளவரசனுக்கு முடிசூட்டு வைபவத்தில் ஆறுகளில் இருந்து கொண்டு வரப் பட்டு நீண்ட நாளாக வைத்திருந்த புனித தீர்த்ததங்களைக் கொண்டு குளிப்பாட்டுகிறார்கள். சரியாக பாதுகாக்கப்படாத இந்த நீரின் காரணமாகத்தான் காய்ச்சல் வந்து இறந்து விடுகிறான் என நிக்கோலஸ் நிரூபிக்கிறான்.
    (இதில் நிக்கோலஸ் சொல்வதாக ஒரு வசனம் இந்த விஷ ஜுரத்திற்கு குமரனென்றும் தெரியாது, கிழவனென்றும் தெரியாது .சக்கரவர்த்தி என்றும் தெரியாது. ஆண்டி என்றும் தெரியாது-இப்போது கொரோனாவுக்கும் பொருத்தமாக உள்ளது ஆச்சர்யம்)//

    ஆச்சர்யம் தான்.


    //கிருஷ்ண தேவராயரின் தளபதி நாகம நாயக்கர் விஜயநகரத்தின் கீழுள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டார். ஆனால் அவர் கிருஷ்ணதேவராயருக்கு கீழ்ப்படியாது தானே அரசு அமைக்க முற்பட அவரை அடக்க நாகம நாயக்கரின் மகனான விஸ்வநாத நாயக்கனை அனுப்புகிறார்.//

    10 வது படிக்கும் போது பாடமாக வந்தது.

    கதை படிக்க நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. விகடனில் வந்த போது சில பகுதிகளை வாசித்திருக்கிறேன். முழுவதுமாக வாசித்ததில்லை. வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  6. நல்ல நினைவுகளை கிளர்த்திய பதிவு அண்ணா

    பதிலளிநீக்கு
  7. இதுவரை படித்த்தில்லை நூலாக கிடைத்தால் வேண்டிப்படிக்கலாம்.அண்ணாச்சி நலம் தானே கவனமாக இருங்கோ கொர்னா பலரின் வாழ்வை புரட்டிப்போட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு.விகடனில் வந்த இந்த கதையை படித்ததாய் நினைவு இல்லை. ஆனால் தாங்கள் எழுதிய விதம் இதை படிக்க தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  9. மிக நேர்த்தியான பதிவு
    || சமூக மாற்றங்களை உடனே கொண்டுவர முடியாது அவை மெதுவாக நிகழவேண்டும்// என்கிற வரி இன்னமும் நினைவில்

    பதிலளிநீக்கு
  10. விகடனில் இந்த கதை தொடராக வந்தபோது படித்து மகிழ்ந்திருக்கிறேன். திரும்பவும் அதை தாங்கள் இரத்தினச் சுருக்கமாக ஆவலைத்தூண்டும் வகையில் தந்து மீண்டும் படிக்கும் எண்ணத்தைத் உண்டாக்கிவிட்டீர்கள். பாராட்டுகளும் நன்றியும!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895