என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 14 ஜூலை, 2025

கடைசி பெஞ்ச்

 




 கடைசி பெஞ்ச் என்று
கழிவிரக்கம் வேண்டாம்

கடைசி பெஞ்ச்சில் இருக்கிறோம் என்று
அதில் இருக்கிற யாரும் கவலைப் பட்டதில்லை

கடைசி பெஞ்ச்.
கவனிக்காதவர்களின் இடம் அல்ல
அது கவனிக்கப் படாதவர்களின்
 புகலிடமாகக்கூட இருக்கலாம்

கடைசி பெஞ்ச்காரணை வைத்துத்தான்
ஒரு வகுப்பறையே
அடையாளம் காணப்படும்

கடைசி பெஞ்ச்காரன்தான்
வகுப்பறைக்கே பாதுகாப்பு 

அவன் ஒரு போதும்
 முதல் பெஞ்ச மாணவனிடம் 
போட்டிக்கு வந்ததில்லை

அவனைப் போல
 எப்போதும் எச்சரிக்கையாய்
இருக்கத் தேவை இல்லை..
நல்லவன் போல் நடிக்கத் தேவை இல்லை 

 கடைசி பெஞ்ச் காரர்கள்
வரலாறு படைக்கப் பிறந்தவர்கள்

முன் பெஞ்ச் மாணவர்களுக்கு
கடைசிபெஞ்ச் காரர்கள் மீது
பொறாமை உண்டு.
சில அறுவை ஆசிரியர்களிடமிருந்து தப்பிக்க
 கடைசி பெஞ்சுக்கு செல்லலாம் என்றால் முடியாது. 

அப்பனிடமும் சரி ஆசிரியர்களிடமும் சரி
அடி வாங்கத் தயங்காதவன்
கடைசி பெஞ்ச்காரன் 

கவிதை எழுதத் தெரிந்தவனை
கடைசி பெஞ்சில்தான் காணமுடியும்

 ஆசிரியரைப் போல அனைத்து
 மாணவர்களையும் பார்க்க முடிந்தவன் 
 கடைசி பெஞ்ச்காரன்தான்

அவர்களைப் போல் அல்லாது 
முன் பெஞ்ச் மாணவனின்
 பின்னனியும் தெரிந்தவன் 
 கடைசிபெஞ்ச் காரன்

காட்டிக் கொடுக்கத் தெரியாதவன்
கடைசி பெஞ்ச் காரன்/ 

ஆசிரியரைப் போலவே  கடைசி
பெஞ்ச்காரனால் மட்டுமே
வகுப்பறையக் கட்டுப்பாட்டில்
வைக்க முடியும்

ஆசிரியரையும் கற்றுக்கொள்ள
வைப்பவன்தான் கடைசி பெஞ்ச் மாணவன்


 கடைசி பெஞ்ச் இருக்கட்டும்-அதைக் 
காட்சிப் பொருளாக்கத் தேவை இல்லை..

சாட்சிப் பொருளாகவே தொடரட்டும்

 

-------------

டி.என்.முரளிதரன்

செவ்வாய், 10 ஜூன், 2025

முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ-சிவா ஆனந்த்



 ”முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ” பாடல் பற்றி பலரும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். நாமும் நம் பங்குக்கு ஏதாவது எழுதி வைப்போம்

நம்ம பஞ்சாயத்து சின்மயி, தீ யார் படியது நன்றாக இருக்கிறது என்பதல்ல. பாடலை எழுதிய சிவா ஆனந்த பற்றி யாரும் அவ்வளாவாகப் பேசவில்லை.. பாடல் ஹிட் ஆனதற்கு இன்னொரு வைரமுத்து , கண்ணதாசன் என்று புகழ்வார்கள் என்று பார்த்தால் யாரும் வாய் திறக்கவில்லை. காரணம் பாடலின் இசையும் மெட்டும் வரிகளை பின் தள்ளிவிட்டன. என்று சொல்லலாம். மேலும் அவர் தொழில்முறைப் பாடலாசிரியர் அல்ல . அஞ்சு வண்ணப் பூவே எழுதிய கார்த்திக் நேத்தாவின் பேட்டிகள் அங்கங்கே கண்ணில் பட சிவா ஆனந்த் பற்றி ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க,

விகடன் டிவியில் அவரது பேட்டி கண்ணில் பட்டது. கொஞ்ச நேரம் பார்த்தேன். அவரா இந்தப் பாடல் எழுதினார் என்று ஆச்சர்யமாக இருந்தது. மணிரத்தினம் போல தமிழ் பேசுகிறார், நடிகர் ஜெயராம் பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச்சில் மணிரத்தினம் போல் பேசிக் காட்டியது நினைவுக்கு வந்தது.. நிறைய ஆங்கிலம்தான் பேசுகிறார். இவரைப் எப்படிப் பாடல் எழுத வைத்தார் எனத் தெரியவில்லை. இவர் இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட
இப்பாடலின் முதல் வரியை ஏ.ஆர் ரகுமான் சொன்னதாகச் சொன்னார். ஆங்காங்கே பாடல் வரிகள் வார்த்தைகள் நன்றாகவும் மெட்டுக்கு பொருத்தமாகவும் இருந்தாலும் ஒரு தொடர்ச்சி இன்மை தெரிகிறது. AI உதவியுடன் எழுதியது போலவும் இருக்கிறது. கூட்டாக எழுதியும் இருக்கலாம். எப்படியோ பாடல் பேசுபொருளாகிவிட்டது. சில பாடல்களுக்கு வரிகள் முக்கியமில்லை மெட்டும் இசையும் மட்டுமே போதும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது..

சின்மயி மேடையில் பாடியது முதல் முறை கேட்கும்போதே நன்றாக இருந்தது. பொதுவாக ரகுமான் பாடல்கள் கேட்க கேட்கத்தான் இசை நுணுக்கங்கள் புலப்படும். இப்பாடல் முதல் முறைகேட்கும்போதே என்னைப் போலவே பலருக்கும் பிடித்திருக்கிறது.

பாடகி தீ பாடியதையும் பின்னர் கேட்டேன். அவர் பாடியது மிகவும் நன்றாகவே இருந்தது.
படத்தில் இப்பாடல் இடம் பெறவில்லை என்று சொல்கிறார்கள்.. இடம்பெறாவிட்டால் என்ன நீண்ட நாட்களுக்குப் பிறகு. ஏ.ஆர் ரகுமானுக்கு இன்னும் ஒரு அதிரடி ஹிட்

(எனக்கு என்னவோ ’அஞ்சு வண்ணப் பூவே’ அவ்வளவாகப் பிடிக்கவில்லை. நம்ம ரசனை அவ்வளவுதான்)

செவ்வாய், 31 டிசம்பர், 2024

குட் டச் -பேட் டச்

 
வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம்

2024 ஐ வழி அனுப்ப இருக்கிறோம். இவ்வாண்டு வலைப்பக்கமே தலைகாட்டவில்லை ஒரு பதிவு கூட எழுதவில்லை..நேரமில்லை என்று சொல்வது ஒரு  சாக்கு மனம்தான் காரணம்.முக நூலில் நண்பர்களின் பதிவுகளை படித்து வந்தாலும் அங்கு பதிவுகள் எழுத ஏனோ விருப்பமில்லை. உண்மையில் முகநூலுக்கு தக்கவாறு மாற முடியவில்லை என்பதே உண்மை.   ஒவ்வோர் ஆண்டும் .குமுதத்தில் ஏதாவது எனது ஒருபக்கக்  கதை பிரசுரமாகிவிடும். பிரியா கல்யாணராமன் ஆசிரியராக இருந்தவரை பெரும்பாலும் நான் அனுப்பும் கதைகள் பிரசுரமாகி விடும். 2023 இல் வாத்தியாரை அடித்தவன் என்ற கதைக்குப் பின் ஒரு கதையும் வெளியாகவில்லை.  அப்படி அனுப்பிய கதையில்  ஒன்று, 

                                                           குட் டச்-பேட் டச்

டி.என்.முரளிதரன்


           பள்ளியில் ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை பற்றிய செய்தி டிவியில் ஃபிளாஷ் நியூசாக  ஓடிக் கொண்டிருந்தது.  “குட் டச்-பேட் டச்” பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு உளவியல் டாகடர். 

        பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த ராதாவை அழைத்து, “ராதா! இங்க வா என்கூட ஒக்காந்து இந்தப் நிகழ்ச்சியப் பாரு” என்று அழைத்து பார்க்க வைத்தாள் சாரதா.
            டாக்டர் தொடுகையின் அர்த்தங்களை விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார்.
பாதுகாப்பான தொடுதல்,
  பாதுகாப்பற்ற  தொடுதல், தேவையற்ற தொடுதல் என்று தொடுதலின் வகைகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசினார். பிடிக்காத வகையில் தொடுதல் இருந்தால்  என்ன செய்ய வேண்டும்  என்று விளக்கினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ராதாவைப் பார்த்து “புரிஞ்சுதா. எங்க காலத்தில எங்களுக்கு யாரும் இப்படிச் சொன்னதில்லை” என்றாள் சாரதா 

    “என்கிட்ட  எதுக்கும்மா சொல்ற?”

    புது ஸ்கூலுக்கு போகப்போற . ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இது பொம்பள பசங்களுக்கான  அறிவுரை மட்டும் இல்ல. ஆம்பளங்களும் இத தெரிஞ்சுக்கணும் நீ கேர்ள்ஸ் ஸ்கூல்ல வேல செய்யப் போற. அதுவும் பிளஸ் டூ பொண்ணுங்களுக்கு கிளாஸ் எடுக்கப் போற . இப்ப ப்ரோக்ராம்ல சொன்ன மாதிரி  சந்தேகப் படும்படியா யாரையும் தொடக் கூடாது. பொண்ணுங்களுக்கு அசௌகர்யமோ பயமோ வர்ற மாதிரி நடந்துக்கக்  கூடாது. குரு ஸ்தானத்தை தவறாப் பயன்படுத்தக் கூடாது. தெரிஞ்சுதா?” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூற

          “அம்மா! நான் உன் பிள்ளைம்மா. கெட்ட பேர் வர்ற மாதிரி நடந்துக்க மாட்டேன். இந்த மாதிரி ஆம்பளைப் பசங்கள வளத்தா தப்பே நடக்காதும்மா” என்று  சொல்லிவிட்டுப் புறப்பட்டான் ஆசிரியராகப் பணியாற்றும் ராதா என்கிற ராதாகிருஷ்ணன்     

--------------------------------------------------------------------------------------------------------

-



குட் டச்-பேட் டச்

டி.என்.முரளிதரன்

        பள்ளியில் ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை பற்றிய செய்தி டிவியில் ஃபிளாஷ் நியூசாக  ஓடிக் கொண்டிருந்தது.  “குட் டச்-பேட் டச்” பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு உளவியல் டாகடர். 

        பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த ராதாவை அழைத்து, “ராதா! இங்க வா என்கூட ஒக்காந்து இந்தப் நிகழ்ச்சியப் பாரு” என்று அழைத்து பார்க்க வைத்தாள் சாரதா.
            டாக்டர் தொடுகையின் அர்த்தங்களை விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார். பாதுகாப்பான தொடுதல்,
  பாதுகாப்பற்ற  தொடுதல், தேவையற்ற தொடுதல் என்று தொடுதலின் வகைகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசினார். பிடிக்காத வகையில் தொடுதல் இருந்தால்  என்ன செய்ய வேண்டும்  என்று விளக்கினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ராதாவைப் பார்த்து “புரிஞ்சுதா. எங்க காலத்தில எங்களுக்கு யாரும் இப்படிச் சொன்னதில்லை” என்றாள் சாரதா 

    “என்கிட்ட  எதுக்கும்மா சொல்ற?”

    புது ஸ்கூலுக்கு போகப்போற . ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இது பொம்பள பசங்களுக்கான  அறிவுரை மட்டும் இல்ல. ஆம்பளங்களும் இத தெரிஞ்சுக்கணும் நீ கேர்ள்ஸ் ஸ்கூல்ல வேல செய்யப் போற. அதுவும் பிளஸ் டூ பொண்ணுங்களுக்கு கிளாஸ் எடுக்கப் போற . இப்ப ப்ரோக்ராம்ல சொன்ன மாதிரி  சந்தேகப் படும்படியா யாரையும் தொடக் கூடாது. பொண்ணுங்களுக்கு அசௌகர்யமோ பயமோ வர்ற மாதிரி நடந்துக்கக்  கூடாது. குரு ஸ்தானத்தை தவறாப் பயன்படுத்தக் கூடாது. தெரிஞ்சுதா?” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூற

          “அம்மா! நான் உன் பிள்ளைம்மா. கெட்ட பேர் வர்ற மாதிரி நடந்துக்க மாட்டேன். இந்த மாதிரி ஆம்பளைப் பசங்கள வளத்தா தப்பே நடக்காதும்மா” என்று  சொல்லிவிட்டுப் புறப்பட்டான் ஆசிரியராகப் பணியாற்றும் ராதா என்கிற ராதாகிருஷ்ணன்


சனி, 23 செப்டம்பர், 2023

பிரிந்த நாள் வாழ்த்துகள்

வலைப்பக்கம் வந்து நீண்ட நாட்களாயிற்று. வலைப்பூக்கள் முன்பு போல கலகலப்பாக இல்லையென்றாலும் விட மனமில்லை. 
கடந்த ஆண்டு ஒரு சிறுகதைப்போட்டிக்கு அனுப்பிய (
அங்கு தேர்வாகவில்லை)  கதையை இங்கே பகிர்ந்திருக்கிறேன். 


பிரிந்த நாள் வாழ்த்துகள்

--டி.என்.முரளிதரன்---

ஞாயிற்றுக் கிழமை சாவகாசமாக எழுந்தேன். லேப்டாப்பில் எனது அலுவலக வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டு எனது பெர்சனல் மெயில் ஓபன் செய்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரியா மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள். 'ரமேஷ்! விட்டு விடுதலையாகிவிட்டேன்......” என்று தொடங்கிய மின்னஞ்சலை மேலும் படிக்க முடியாமல் சற்றே திகைத்து கணினித் திரையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
காஃபி கொண்டு வந்த என் மனைவி சசியையும் கவனிக்காமல் அதிர்ச்சியில் இருந்து இன்னும் விடுபடாமல் இருந்தேன்.
”ரமேஷ்! என்ன ஆச்சு?” என்றவள் பக்கதில் உட்கார்ந்து மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பதை மட்டும் படித்தாள்.
”யாரு பிரியா உங்க எக்ஸ் ஆளா என்றவள்”

என் முகபாவத்தைக் கண்டு ”சாரி,சாரி சும்மா ஜோக்தான். நீ அதுக்கெல்லாம் லாயக்கில்லன்னு எனக்கு தெரியாதா? ஏன் இவ்வளவு சீரியஸ் ரமேஷ். நான் தெரிஞ்சுக்கலாமா? சொல்லக்கூடாத விஷயமா இருந்தா வேணாம்”

“ அதெல்லாம் இல்ல சசி. பிரியா என்னோட காலேஜ்மேட். கார்த்திக்கும் நானும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஒரே ஸ்கூல்ல படிச்சோம். ஒரே காலேஜ்ல சேந்தோம். கார்த்திக் ரொம்ப இண்டலிஜெண்ட். ஆளும் பாக்கறதுக்கு ஹீரோ மாதிரி இருப்பான். நானும் கார்த்திக்கும் இஞ்சினியரிங்la கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தோம். அப்போ எங்க கிளாஸ்ல சேர்ந்தவதான் பிரியா. பிரியா அழகான பொண்ணு மட்டுமில்ல. எக்ஸ்டார்டினரி டேலண்ட் இருக்கவ. அகடமிக், கல்சுரல்ஸ் காம்படிஷன்ஸ்ல் அவதான் எப்பவுமே டாப். கார்த்திக்குக்கு பிரியாவை ரொம்ப பிடிச்சிப் போச்சு. லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான். பிரியாகிட்ட பிரபோஸ் பண்ண ட்ரை பண்ணான். ஆனா அவ பிடி கொடுக்கல. அவன் என் கிட்ட புலம்பிகிட்டே இருப்பான். அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்வேண்.அவ கிடைக்கலன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்னு. அப்ப காதலை தெய்வீகமா நினைச்ச காலம். நண்பர்களோட காதலுக்கு உதவறதுதான் பிறவிப் பயன்னு நினச்சோம்”

”அந்தக் கால விவேக், சின்னி ஜெயந்த், சார்லி போலவா?” சிரித்தாள் சசி

“நக்கலா” என்று சொல்லிவிட்டு தொடர்ந்தான் ரமேஷ்

”நான் கொஞ்சம் கதை, கவிதை எல்லாம் எழுதுவேன். காலேஜ் கல்சுரல்ஸ்ல நானும் பிரியாவும் கலந்துக்குவோம். பிரியா என்கிட்ட நல்ல நட்போட இருந்தா. நான் சொன்னா அவ கேப்பான்னு கார்த்திக் நினச்சான். அதனால என்ன பேசச் சொன்னான். அவனைப் பாத்தா பாவமா இருந்தது. அவன் காதல் அப்ப எனக்கு உண்மையா தெரிஞ்சது. அவங்க ரெண்டு பேரும் எல்லாவிதத்திலும் பொருத்தமான ஜோடியாவும் இருந்தாங்க. சமயம் கிடைக்கும் போதெல்லாம் கார்த்திக்கோட காதலைச் சொன்னேன். ஆனா அவ, காதல் மேல எனக்கு நம்பிக்கை இல்லை; நல்ல ஸ்டேட்டசுக்கு வரணும்கிற இலட்சியம்தான் முக்கியம்னு சொன்னா. காதலால உன் லட்சியம் பாதிக்காது, அவன் உனக்கு நிச்சயம் துணையா இருப்பான்னு நான் சொன்னேன்

“ஒருமுறை பிரியாவை கிண்டல் பண்ண ஒரு பையனை அவள் முன்னால் அடித்துத் துவைத்தான். தனக்காக அவன் சண்டை போட்டது எல்லா பொண்ணுங்களப் போல அவளுக்கும் பிடிச்சிருந்தது”

“ஒஹோ! எல்லாப் பொண்ணுங்களோட மனசும் உங்களுக்கு தெரியும் போல. ஒரு படத்துல விவேக் மாதிரி பஸ் ஸ்டாண்ட், கோவில்னு போயி பொண்ணுங்க மனசு பத்தி ஆராய்ச்சி பண்ணியா”

நான் எரிச்சலுடன் பார்க்க

”ஒகே ஓகே கண்டினியு "

”அவனோட நாலெட்ஜ் பிரியாவை பிரமிக்க வச்சது. கொஞ்சம் கொஞ்சமா அவ மனசு மாறினா. கார்த்திக்கோட கடைக்கண் பார்வைக்காக நிறையப் பொண்ணுங்க காத்திருத்தாங்க. ஆனா அவங்களையெல்லாம் அவன் கண்டுக்காதது பிரியாவுக்கு பெருமையா இருந்தது”

“இப்படித்தானே உறுதியான பெண்களையும் காலம் காலமா ஏமாத்திக்கிட்டிருக்கீங்க. சரி அப்புறம் என்ன ஆச்சு”

”காலம் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்க அவங்க காதல் ஸ்ட்ராங் ஆகிடுச்சு.. இப்ப கார்த்திக் மேல பிரியா அளவில்லாத அன்பு வச்சிருந்தா. இரண்டுபேரையும் ஒன்னா பாக்கறது ரொம்ப சந்தோஷமா இருந்தது. படிப்பு முடிஞ்சு வேல கிடைச்சதும் பெற்றோர் சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணாங்க.
எப்பவுமே தேர்ட் இயர்ல வரும் கேம்பஸ் இண்டர்வியு அந்த வருஷம் ஃபைனல் இயர்லதான் நடந்தது. ஃபர்ஸ்ட் ரவுண்டல பிரியாவும் நானும் ஒரே கம்பெனில செலக்ட் ஆயிட்டோம். என்ன ஆச்சுன்னு தெரியல கார்த்திக் மட்டும் செலக்ட் ஆகல. கடைசி வரை எந்த கம்பெனியும் அவனை செலக்ட் பண்ணல. நொந்து போய்ட்டான். என்னை விட அறிவாளி அவன். எப்படி செலக்ட் ஆகாமப் போனான்னு புரியல, அவனோட ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா இருக்கலாம்னு நாங்க பேசிக்கிட்டோம். ஆஃப் கேம்பஸ்ல ஏராளமான ஆஃபர்ஸ் இருக்குன்னு பிரியாவும் நானும் சமாதானம் செஞ்சோம்.

ஃபைனல் ரிசல்ட் வந்து ஆறுமாசத்துக்குள்ள நாங்க ரெண்டு பேரும் வேலையில ஜாயின் பண்ணிட்டோம். இதுக்குள்ள பிரியா வீட்டில அவளுக்கு கல்யாண ஏற்பாடு பண்ண ஆரம்பிக்க, பிரியா தன்னோட காதல் விவகாரத்தை வீட்டில சொல்ல பிரச்சனை ஆரம்பமாயிடுச்சு. ரெண்டு பேரும் வீட்டை எதிர்த்துக்கிட்டு கலயாணம் பண்ணிக்கிட்டாங்க. அதுக்கு ஃப்ரண்ட்ஸ் நாங்கல்லாம் ஹெல்ப் பண்ணோம். தனக்கு வேலையில்லையேன்னு கவலப்பட ஆரம்பிச்சதால பிரியா எங்க கம்பெனியிலேயே ரெகமண்ட் பண்ணி அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தா, ஆனா சம்பளம் அவள விடக் குறைவு. அங்க அடிக்கடி அவன் எஃபிஷியன்சிய பிரியாவோட கம்பேர் பண்ணி பேசினாங்க. அவள் அளவுக்கு அவனுக்கு திறமை இல்லன்னு வெளிப்படையாவே சொல்ல ஆரம்பிச்சாங்க. அது அவனுக்கு உறுத்தலா இருக்க சொல்லாம கொள்ளாம வேலைய விட்டுட்டான்”

”அடப்பாவமே!” பரிதாபப் பட்டாள் சசி

“அடுத்தடுத்து நடந்தத கேட்டா நீ பரிதாபப் படமாட்ட”

" ஆம்பளைங்களோட மனநிலை அப்படித்தான் இருக்கும்னு வேலய விட்டதை பிரியா பெரிசா எடுத்துக்கல. அவனுக்கு ஆறுதலாவே இருந்தா. வேற வேலைக்கு முயற்சி பண்ணினான் ஆனா எதுவும் அவனுக்கு செட் ஆகல. தன்னோட தகுதிக்கு குறைவான சேலரின்னு கிடைச்ச ஆஃபரையெல்லாம் வேணான்னு சொல்லிட்டான். போகப் போக சான்ஸ் கம்மியாயிகிட்டே போச்சு. அவன் வீட்டில இருந்து பிரியாவை டூ வீலர்ல கொண்டுவந்து விடறதும் திரும்ப அழைச்சிட்டுப் போறது மட்டுமே அவன் வேலையா இருந்தது. மத்த நேரங்கள்ல வீட்டில தனியாத்தான் இருந்தான். அவன் நடத்தையில மாற்றம் இருந்தாலும் முதல்ல அவ்வளவா தெரியல. எப்போதாவது பார்ட்டிகள் மட்டும் குடிக்கிற பழக்கம் இருந்தது. இப்போ அவன் அடிக்கடி குடிக்கிறான்னு வருத்தப்பட்டாள் பிரியா”

“சே! கேக்கவே கஷ்டமா இருக்கே. அது சரி உங்களுக்கு அந்தப் பழக்கம் இப்ப இல்லன்னு நினைக்கிறேன்” சசி தன்னோட கவலையை வெளிப்படுத்தினாள்

”முன்னாடியும் எனக்கு இல்ல” என்று நான் முறைக்க, ”நம்பிட்டேன், மேல சொல்லு” என்றாள் சசி

“ஒரு நாள் ஆஃபீஸ்ல பிரியாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. பிரியாவை கூட்டிட்டுப் போக அவனை வரச் சொல்லலாம்னு ஃபோன் பண்ணா எடுக்கவே இல்லை. அவ்வளோ போதையில் இருந்திருக்கான். நான் அவளைக் கொண்டு போய் வீட்டுல விட்டேன். உள்ளே இருந்த அவனுக்கு அடவைஸ் பண்ணேன். அவனோ என்னையும் பிரியாவையும் தப்பா பேசினான்”

“ என்னால நம்பவே முடியல. என்ன இவன் இவ்வளவு தரம் கெட்டவனா மாறிட்டான். இவன் காதலையா நாம் புனிதம்னு நினச்சு பிரியாகிட்ட சப்போட் பண்ணோம்னு முதல்முறையா கில்டியா ஃபீல் பண்ணேன்.”

நான் வருந்துவதைப் பார்த்ததும் சசி ”உன் மேல என்ன தப்பு இருக்கு. நீ சொன்னதாலதான் அவ கார்த்திக் காதல ஏத்துகிட்டான்னு நீ நினைக்கற. நீ சொல்றத மட்டும் கேட்டு முடிவு எடுத்த பொண்ணா பிரியா இருந்திருக்க மாட்டான்னுதான் நான் நினைக்கிறேன். அவ சொந்தமாதான் முடிவு பண்ணியிருப்பா. கார்த்திக் அப்ப நல்லவனா இருந்திருப்பான்னுதான் தோனுது” என்றாள்

“இல்ல சசி, மனசு நெருடலாவே இருக்கு. பிரியா சொல்ற ஒவ்வொன்னும் அதிர்ச்சியாவே இருந்தது. ஒரு முறை அவன் சிகரெட் பிடிக்கும்போது நெருப்பு பிரியா மேல பட்டுவிட்டது பதறிப்போய் மன்னிப்பு கேட்டானாம். ஆனா அடிக்கடி இந்த மாதிரி நடக்கறப்பதான் தெரிஞ்சது, அதஅவன் வேணும்னே செஞ்சிருக்கான்னு. நாளுக்கு நாள் அவனால ஏகப்பட்ட தொல்லை பிரியாவுக்கு. அவ பேர் சொல்லி பல பேரிடம் கடன் வாங்கிட்டு திரும்பக் கொடுக்காததால் கடன் காரங்க வீட்டு வாசல்ல வந்து தகராறு செஞ்சது இன்னொரு கதை. பிரியாவுக்கு தெரியாமல் அவனது ஏ.டி.எம் கார்டை எடுத்து சென்று அடிக்கடிபணம் எடுத்திருக்கிறான். அப்புறம் கார்டை மறைத்து வைக்க ஏகப்பட்ட சண்டை. ”எங்க அப்பா அம்மாவை பகைச்சிக்கிட்டு உன்னைப் போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாரு. அவங்க எனக்கு சீர் செனத்தியோட நல்ல பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. இப்ப நான் உங்கிட்ட பிச்சை எடுக்க வேண்டி இருக்குன்னு வார்த்தையாலேயே சாகடிச்சானாம்”

“படிச்சவன் இப்படிக்கூட நடந்துக்குவானா?” ஆரம்பத்தில் நான் சொல்வதை சாதாரணமாகக் கேட்டுக் கொண்டு வந்த சசி இப்போது சீரியசானாள்.
நான் தொடர்ந்தேன்.

”ஃபேஸ் புக்ல பிரியா அவ்வளவு ஆக்டிவா இல்லன்னாலும் எப்பவாவது ஒன்னு ரெண்டு போஸ்ட் போடுவா. ஃப்ரெண்ட் லிஸ்ட்ல ஒருத்தன் அடிக்கடி இன்பாக்ஸ்ல வந்து வக்கரத் தொல்லை கொடுத்துக்கிட்டிருந்தானாம். எவ்வளவுதான் அன்ஃபிரண்ட் பண்ணாலும் வெவ்வேறு விதமா வந்து டார்ச்சர் செய்ய, அவ கார்த்திக் கிட்ட சொல்லி சைபர் கிரைமில் புகார் கொடுக்கலாம்னு சொன்னா. அவனோ வேண்டாம் விட்டுடு சொல்லியிருக்கான். பரவாயில்லையே கோவப்படாம பெருந்தன்மையா இருக்கானேன்னு ஆச்சர்யமா இருந்தது பிரியாவுக்கு. யதேச்சையா ஒருநாள் லாக் அவுட் செய்யாத ஃபேஸ்புக் அக்கவுண்டை கார்த்திக் மொபைலில் பார்த்தப்பதான் ஃபேக் ஐடி இல இருந்து தொந்தரவு கொடுத்தவன் கார்த்திக்தான் என்ற உண்மை தெரிஞ்சது“

“என்ன அநியாயங்க. அவளுக்கு எப்படி இருந்திருக்கும்?. அதை பிரியா கேக்கலையா எப்படி சகிச்சிக்கிட்டா?” சக பெண்ணின் வேதனை சசிக்கு புரிந்தது

“கேட்கத்தான் செஞ்சா. அவன் அழுது கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்க, வழக்கம்போல ஏமாந்து போனா. ஒருமுறை உடம்பு சரியில்லன்னு ஒரு வாரம் லீவில இருந்தப்ப அவளுக்கு கம்பெனியில் இருந்து ஆன்சைட்டுக்கு யூ.எஸ் போக வில்லிங்னஸ் கேட்டு பிரியாவுக்கு மெயில் அனுப்பியிருந்தாங்க. பிரியா நாட் வில்லிங்னு ரிப்ளை அனுப்பிட்டா. லீவ் முடிஞ்சி ஆஃபீஸ் வந்ததும் ஏன் இந்த ஆஃப்ரை அக்செப்ட் பண்ணலன்னு நான் கேட்க, எனக்கு தெரியாதே! நான் எதுவும் அப்படி அனுப்பலயேன்னு சொல்ல,அப்பதான் தெரிஞ்சது. அவளுக்கு பதிலா கார்த்திக்தான் அவ மெயில்ல இருந்து ரிப்ளை பண்ணியிருக்கான்னு. என்னோட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. பிரியாவோட முகத்தை என்னால பாக்கவே முடியல. நல்ல சான்ஸ் வந்ததும் நான் வேற கம்பெனிக்கு மாறிட்டேன். அதுக்கப்புறம் எப்பவாவது பேசுவா இல்லன்னா வாட்ஸ் அப்ல மெசேஜ் அனுப்புவா. சில நேரங்கள்ல மெயில் அனுப்புவா. கடைசியா நம்ம கல்யாணத்துக்கு கூப்பிடறதுக்காக அவளுக்கு ஃபோன் பண்ணேன். அப்ப இருந்த சூழ்நிலையில அவ நம்ம கல்யாணத்துக்கும் வரமுடியாதுன்னு சொல்லிட்டு அப்புறம் அவ சொன்னதத்தான் என்னால ஜீரணிக்கவே முடியல.

“ஒரு பொண்ணு எவ்வளதான் கஷ்டத்தை தாங்கறது ”

“ஆமாம் சசி. அவ குடி இருந்த வீட்டின் ஓனரின் மூனு வயது குட்டிப் பெண் வீட்டுக்கு வந்து விளையாடிக் கிட்டிருப்பாளாம். கார்த்திக் அந்தக் குழந்தையைப் பார்த்ததும் குழந்தையோடு குழந்தையா மாறி கொஞ்சி விளையாடுவானாம், அங்கிள்,அங்கிள்னு குழந்தை அவனுடன் ஒட்டிக்கிட்டாளாம். அது அவன் மன அழுத்தத்துக்கு ஆறுதலா இருக்குன்னு பிரியா நினைச்சா.
கார்த்திக்கைப் பார்த்தாலே ஓடி வந்து தன்னை தூக்கச் சொல்லும் குழந்தை, ஒரு நாள் அவன் அருகில் வரவே பயந்து ஓடியது. அவனோட குடிப் பழக்கமும் சிகரெட் நாற்றமும் காரணமா இருக்கும்னு பிரியா நினைச்சா.. ஒரு நாள் அவன் இல்லாத நேரத்தில் வந்த குழந்தையிடம், “ஏன் கார்த்திக் அங்கிள பார்த்து பயப்படற. அவர் அடிச்சாரா? ன்னு கேட்க, சொல்லத் தெரியாமல் குழந்தை சொன்னதைக் கேட்டதும் கார்த்திக்கின் வக்கிர புத்தி புரிஞ்சி போச்சு, இதுவரை இல்லாத பெரிய ஷாக்கா இருந்தது அவளுக்கு ரொம்பக் கோபப் பட்டு சண்டை போட்டா. அவனோ அதெல்லாம் இல்லன்னு சாதிச்சான். விஷயம் பெரிதாகுமுன் அடுத்த நாளே வீட்டை காலி செய்து விட்டாள்.”

“ அவ்வளவு மோசமானவரா உன் ஃப்ரண்டு?”

“என்னாலயும் நம்பவே முடியல சசி. அவனை என் ஃபிரண்டுன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு.. பிரியாவோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு நானும் ஒரு காரணமா இருந்தேன்னு நினைக்கும்போது என் மேலயே எனக்கு வெறுப்பு வருது. ஆனால் பிரியா ஒருமுறைகூட என்மேல தப்பு சொல்லல, அவ என்ன திட்டி இருந்தாக் கூட ஆறுதலா இருந்திருக்கும்.
இனிமே அவன்கூட வாழறதில அர்த்தம் இல்லன்னு கடைசியா அவ எடுத்த முடிவுதான் விவாகரத்து. அதுக்கு அவன் லேசில ஒத்துக்கல.இனிமே திருந்திடறேன்னு கெஞ்சினான். ஆனா அவ ரொம்ப உறுதியா இருந்தா. பணம் கொடுக்கறேன்னு சொன்னதும் ஒத்துக்கிட்டானாம்’. கேஸ் நடந்து கிட்டிருந்தது. அதுக்கப்புறம் அவ முன்ன மாதிரி காண்டேக்டல இல்ல.
அதுக்கப்புறம் இப்பதான் இந்த மெயில் பண்ணி இருக்கா.

சசி அந்த மெயிலை முழுதாக இப்போது படித்தாள்

ரமேஷ்,
விட்டு விடுதலையாகிவிட்டேன். இப்போது தீர்ப்பு வந்து விட்டது. சட்டப்படி பிரிவு உறுதி செய்யப்பட்ட இந்த நாள்தான், என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள். என்னைப் பற்றி எப்போதாவது கவலைப்படுவது நீ மட்டும்தான் என நினைக்கிறேன். நீ எதற்கும் காரணமில்லை. விதி சிலரது வாழ்க்கையை சின்னா பின்னமாக்கி சிரிக்கிறது. இன்னும் சில நாட்களில் நான் அமெரிக்கா செல்ல இருக்கிறேன். இது தகவலுக்காகத்தான்.

நட்புடன்
பிரியா
லேப்டாப்பில் மெயில் வாசகங்களை படித்த சசியின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

சில வினாடிகள் அமைதியாக இருந்த ரமேஷ் ரிப்ளை டைப் செய்ய ஆரம்பித்தான் ரமேஷ்

பிரியா,

’என்னை மன்னித்து விடு’ என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தை தெரியவில்லை, இப்படி ஒரு அரக்கனாக கார்த்திக் இருப்பான் என்று என்னால் அறியமுடியாமல் போனதை நினைத்து வருந்துகிறேன். சங்கடத்துடனும் இனியாவது உன்வாழ்வில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடனும் கூறுகிறேன்; உன் துயரங்களைப் பார்க்கும்போது இப்படிக் கூறுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
பிரிந்த நாள் வாழ்த்துகள்”.
இப்படிக்கு
-ரமேஷ்-

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

நூலகம் உறங்கலாமா?

           திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக “நூலகம் உறங்கலாமா?”  என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. வட்டார அளவில் கவிதையைப் போட்டியை துவக்கி வைத்து மாணவர்களுக்காக நான் வாசித்த கவிதை 

                          நூலகம் உறங்கலாமா?

டி.என்.முரளிதரன்


ஆறும் உறங்கலாம் ஊரும் உறங்கலாம்

நீரும் உறங்கலாம் நிலமும் உறங்கலாம்

நல்லொளி காட்டும் அந்த

நூலகம் உறங்கலாமா?                                                                                      1

 

சீறிடும் சிங்கம் உறங்கலாம்

சிறுநரி கூட உறங்கலாம்

ஆடிடும் மயில்கள் உறங்கலாம்

பாடிடும் குயில்கள் உறங்கலாம்

 

பண்பாட்டு அகமாய் திகழும்

       ஓர்நூலகம் உறங்கலாமா?                                                                          2

 

மலர்ந்திடும் மலர்கள் உறங்கலாம்

மழைதரும் மரமும் உறங்கலாம்

வளர்ந்திடும் நிலவும் உறங்கலாம்

வானத்து மீன்கள் உறங்கலாம்

 

 எத்தனையோ அறிஞர் தந்த அந்த

நூலகம் உறங்கலாமா?                                                                                      3

 

ஆலைகள் உறங்கலாம்-ஏன்

ஆலயமும் உறங்கலாம்

அகலச் சாலைகள் உறங்கலாம்

அன்ன சத்திரம் உறங்கலாம்

 

அறிவினை ஊட்டும் ஒர்

நூலகம் உறங்கலாமா?                                                                                     4

 

கதிரவன் உறங்கலாம்

கவின்முகில் உறங்கலாம்

காற்றும் உறங்கலாம்

நாற்றும் உறங்கலாம்

 

வெற்றிடம் போல் மூடி வைத்து- அந்த

நூலகம் உறங்கலாமா?                                                                                     5

 

விதைகள் உறங்கலாம்-மனதில்

 நல்ல கதைகள் உறங்கலாம்

அலைகடல் உறங்கலாம்

ஆழிசூழ் நிலமும் உறங்கலாம்

 

பாழ்மனம் பண்படவைக்கும்

புத்தகம் நிறைந்து கிடக்கும்அந்த

நூலகம் உறங்கலாமா?                                                                                     6

 

மீன்களும் உறங்கலாம்-மெல்லின

மான்களும் உறங்கலாம்

எருதும் உறங்கலாம்

எறும்புகள் உறங்கலாம்

 

மனிதம் வளர்த்தோங்க

புனிதர் பலர் போற்றும் -அந்த

நூலகம் உறங்கலாமா?                                                                                    7

 

விண்ணும் உறங்கலாம்

மண்ணும் உறங்கலாம்

எரி-மலையும்  உறங்கலாம்

தாழ் மடுவும் உறங்கலாம்

 

மாண்பினை வளர்க்கும் நல்ல

நூலகம் உறங்கலாமா?                                                                                    8

 

வாயிலில் ஓர் நாள் முழுதும்

உட்கார நேரமும் இன்றி

காவல் பணி  செய்யும்

காவலர் கூட உறங்கலாம்

 

அறிவினை மனிதர்க்கு தந்து

அரும்பணி புரியும் அந்த

நூலகம் உறங்கலாமா?                                                                                   9

 

சீரிய குற்றம் செய்வேர்

திருந்தவே சிறைகள் உண்டு

நூலகம் அப்பணி செய்யும்

நூறு சிறை மூட உதவும்

 

சமூகம் செழிக்க நூல்கள்

சீர் அகம் செய்யும் அந்த

  நூலகம் உறங்கலாமா?                                                                                   10

 

புத்தகம் படிக்கும்போது

பசி தாகம் மறந்து போகும்

சித்தமும் சீர்மை பெறவே

நித்தமும் ஒர் நூல் படிக்க

 

வய்ப்பினை தந்து நம்மை

வாவா என்றழைத்துக் கெஞ்சும் அந்த

நூலகம் தூங்கலாமா?                                                                                     11

 

 பயணத்தின் துணையாம் நூல்கள்

தனிமையைப் போக்கும் நூல்கள்

தனித்துவம் கொண்ட நூல்கள்

தரணியே போற்றும் நூல்கள்

 

அழகழகாய் அடுக்கி வைத்து

நமக்காக் காத்துக் கிடக்கும்-அந்த

            நூலகம் தூங்கலாமா?                                                                         12

 

அறுசுவை உணவில் உண்டு

அனைவரும் ரசித்து உண்ண

ஆனாலும் அச்சுவை எல்லாம்

நூற்சுவை போலே ஆகா

 

பாற்சுவை தோற்கும் நல்ல

சுவைமிகு நுல்கள் கொண்ட

நூலகம் தூங்கலாமா?                                                                                      13

 

நூலகம் சென்று நாளும்

நூலினை மடியில் வைத்து

படித்திடும் நேரம் தன்னில்

 உறங்கவும்  செய்வார் சிலரே

 

ஆனாலும் பாதகமில்லை புத்தகம்

புரட்டியே பார்க்க வைத்த

நூலகம் உறங்கலாமா?                                                                                   14

 

திறந்திடும் நேரம் நுழைந்து

முடிடும் நேரம் வரையில்

நூலகம் தன்னில் இருந்து 

தன்னையும் செம்மைப் படுத்தி

 

 தரணியை  திருத்தச் செய்த

நிகரிலா தலைவர்கள்  சொன்ன அந்த

நூலகம் உறங்கலாமா?                                                                                  15

 

பள்ளியில் நூலகம் உண்டு

பயன்பெற சிறார்கள் உண்டு

கிழிந்திடும்  என்று  நாமும்

அஞ்சிட த் தேவை இல்லை

 

பிள்ளைகள் படித்துக் கிழிக்கட்டும்

கிழித்தும் படிக்கட்டும்-சிந்திப்பீர்

அந்த நூலகம் தூங்கலாமா?                                                                         16

 

புரட்சிகள் நடப்பதற்கு

புத்தகங்கள் விதையாய் ஆகும்

புத்துணர்ச்சி பெறுவதற்கும்

புத்தகம் மருந்தாய் மாறும்

 

வாயில்லை என்றாலும்

நம்மிடம் நூல்கள் பேசும்அந்த

நூலகம் உறங்கலாமா?                                                                                     17

 

கைகளே படாத நுல்கள்

கதறியே நம்மை அழைக்கும்

காதினில் விழாது போனால்-தன்னை

கரையான்கள் தின்னக் கொடுக்கும்

 

பெரும்பாவம் செய்தவர் ஆவோம்- கேட்கின்றேன்

நூலகம் உறங்கலாமா?                                                                                      18

 

இலக்கிய இன்பம் கொடுக்கும்

அறிவியல் அறிவைக் கொடுக்கும்

வரலாறு நமக்கு சொல்லும்

வாழ்க்கையை புரிய வைக்கும்

 

  புதுமைகள் படைப்பதற்கு

 புத்தகம்  வழியைக் காட்டும்-

        அந்த நூலகம் தூங்கலாமா?                                                                  19

 

காகித நூலின் வடிவம்

கணினிக்கு மாறிப் பின்னர்

கைபேசிக்குள்ளும் நுழைந்து

விரல் நுனி பிடித்திழுத்து

 

எவ்வகையேனும் கற்றிடச் சொல்லும் -அந்த

நூலகம் தூங்கலாமா?                                                                                      20

 

நூலகம் உறங்கிக் கிடந்தால்

சமுதாயம் முடங்கிப் போகும்

நூலகம் உறங்கிக் கிடந்தால்

அறியாமை  நோய்கள் பெருகும்

 

மாக்களை மக்களாக்கி

    மாண்புறும் அகமாய் திகழும்

         நூலகம் உறங்கலாமா?     

                                                                                                                                  21

 பிறப்பெடுப்போம் புதிதாய் இன்று

புறப்படுவோம்  நூலகம் நோக்கி

நூல்களின் வாசம் நுகர்ந்து

 நூலக உறக்கம் கலைப்போம் 

 

வளர்க நுலகம்! வாழ்க தமிழ்!                                                                        22

                                    நன்றி வணக்கம்

 

                                                                                                                -டி.என்.முரளிதரன்-