குதிரை என்பது வெறும் மிருகத்தை குறிப்பது இல்லை.காண்பது எதுவும் குதிரைக்கு தொடர்புடையதாகத் தோன்றுகிறது.உதாரணமாக காற்று சுழற்றி சுழற்றி அடித்தால் குதிரை தாண்டிப் போகிறது என்று அர்த்தம். கை பம்பில் டைட்டா அடித்து தண்ணிர் வந்தால் பம்புக்குள்ள குதிரை தண்ணீர் இழுப்பதாகத் தோன்றும்.
(பம்ப்போட கைப்பிடியை பாருங்கள் அது குதிரை வால் போலவே தோன்றும்.)
அந்த குதிரை சக்தி பற்றி அழகாக சொல்லும் ஒரு நெடுங்கவிதை
இரும்புக்குதிரையின் குதிரை நாயகன் விஸ்வநாதன் சொல்வதை கேளுங்கள் .ஒரு கதைபோல இருக்கும் இக்கவிதை சற்று பெரிதாக இருக்கும் முழுவதும் படித்தால் அதன் சுவை உணரமுடியும்
கல்தோன்றி மண் தோன்றி கடவுள் தோன்றி
கைவழியே மொழிவளரும் காலம் தோன்றி
கால்நடையே செல்வமெனக் கொண்ட நாளில்
ஆண்டிருந்த ஓர் அரசன் பறையறிவித்தான்
வீட்டிற்கொரு குதிரை வளர்க்க வேண்டும்
வேண்டுகிற உதவிகள் அரசு செய்யும்
குதிரைகள் தேசத்தின் பொக்கிஷங்கள்
போர்வந்தால் புரவிகளை அரசே வாங்கும்
போர்க்காலம் காணாத அரசில்லை.
போராட்டம் இல்லாத காலம் இல்லை
போர்க்காலம் முன்கருதி புரவி வளர்ப்பீர்
பின்வரும் சந்ததிக்கு உறுதி கொடுப்பீர்
மீறுபவர் தேசத்தின் முதல் எதிரிகள்
மறுப்பவர்கள் வெளியேற்றப் படுவர் உறுதி
பறையடித்து ஊர் முழுதும் செய்தி சொல்ல
ஜனம்கூடி தெரு நடுவே புலம்பலாச்சு
இவன் என்ன பேயரசன் குதிரை வெறியன்
திடுமென்று குதிரைக்கு எங்கே போக?
குதிரைதான் செல்வமெனில் செந்நெல் என்ன?
கொள்ளுமட்டும் பயிரிடவா வயலும் நீரும்?
ஆடுகளோ உணவாகும்; மாடுகளோ பயிர் வளர்க்கும்;
மேய்ப்பதொன்றும் கடினமில்லை கோலசையக் கூடவரும்!
குடும்பத்து பெண்மணிக்கு குதிரைகளா கட்டுப்படும்?
குரல் கொடுத்தால் நாய்போல புரவிகளா துணையாகும்?
இவன் என்ன பேயரசன் குதிரை வெறியன்..
பார்ப்பனர்கள் சிலர்கூடி தமக்குள்ள பேசி
முடிவாக திடமாக சபைக்குள் சென்று
தமக்கு மட்டும் கட்டளையைத் தளர்த்துமாறு
பணிவாக அறிவித்தார் காரணம் சொன்னார்
வேதங்கள் சொல்லுகையில் குதிரை கனைக்கும்
பாடத்தில் முழுமுனைப்பு சிதறிப் போகும்
தோல்பொருளை பார்ப்பனர்கள் தொடக்கூடாது
வாரின்றி குதிரைகள் வசப்படாது
போருக்கும் பார்ப்பனர்க்கும் பொருத்தமில்லை
போரில்லா வழ்க்கையதே எங்கள் கொள்கை
பேரரசன் யோசித்தான் தலை அசைத்தான்
பார்ப்பனர்கள் குதிரைக்கு விலக்கு என்றான்
பார்ப்பனர்கள் சபை நீங்க வணிகர் வந்தார்
வைத்தியரும் கொல்லரோடு சேர்ந்து கொண்டார்
எங்களுக்கும் விலக்களிப்பாய் தேரா மன்னா
வணிகத்தில் எருதுகளே உதவியாகும்
பொதி சுமக்கும் கழுதைகளே போதும் எமக்கு
ஊர் சுற்றும் வேலையிலே நாங்கள் இருக்க
பெண்டுகளே பிற வேலை செய்தல்வேண்டும்
புரவிகளை பெண்டுகளால் ஆள முடியுமா?
பேரரசே தயை செய்யும் இது தாங்க முடியுமா?
மன்னவனும் மனு ஏற்றான்; விலக்கு என்றான்.
வந்தவர்கள் சபை மீள கூட்டமாக
தொழில் தெரிந்த சூத்திரர்கள் முன்னே சென்றார்
குதிரைகள் பேணுதற்கு வசதியில்லை
முன்பின்னே இது குறித்து பழக்கமில்லை
கைகாலே துணையாக உழைப்போர் நாங்கள்
போரென்றால் கால்படையின் அங்கம் நாங்கள்
குதிரைகள் சுமை எமக்கு உதவி வராது
உழவுக்கோ கவலைக்கோ துணையாகாது
மன்னவனும் தலையசைத்தான் சரியே ஏன்றான்
படைவீரர் மேற்கொள்வார் போகச் சொன்னான்
படைவீரர் பெருமறவர் கூட்டம் போட்டார்
முடிவாக அரசனிடம் வணக்கம் சொன்னார்
போர்க்காலம் குதிரைகள் தேவைஎனினும்
போர் எதிரி யானையுடன் வந்து நின்றால்
குதிரைகள் என்செய்யும் கலைந்து போகும்
படைவீரர் தெருவுக்கொரு யானை வளர்ப்பார்
முறைபோட்டு அனுதினமும் பேணிக் காப்பார்
வீட்டுக்கொரு குதிரைஎன்ற விதியினின்று
பேரரசே விலக்களிப்பீர் யானை தருவீர்!
பேரரசன் யோசித்தான் கவலை சூழ
கையசைத்தான் மற்றவர்கள் கலைந்துபோக
மறு நாளே சபை கூட்டி எழுந்து நின்று
பெருமன்னன் குரல் செருமிப் பேசலானான்.
மன்னன் என்ன சொன்னான்? விரைவில்.
*******************************
இதையும் படியுங்க!
பாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன?
குதிரை சொல்லும் ஏழாம் வேதம்
குதிரை வேதம் 6- பாலகுமாரன்.
குதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.
பால குமாரன் கவிதைகள் -பகுதி 2
பாலகுமாரனின் கவிதைகள்!l

