என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Saturday, January 12, 2013

மு.மேத்தாவுக்கு எதிராக எழுதச் சொன்ன தமிழாசிரியர்

   நான் அப்போது +2 படித்துக் கொண்டிருந்தேன்.எங்கள் தமிழாசிரியர் பாடப் புத்தகத்தில் உள்ள கவிதைகள் மட்டுமல்லாது அப்போதைய கவிஞர்களின் கவிதைகளையும் அழகாகச் விளக்குவார்.  அப்படி ஒரு சொன்ன ஒரு  மு. மேத்தாவின் ஒரு கவிதை

  அரளிப்பூவை பெண்கள் சூட மாட்டார்களாம். அதனால் மனம் நொந்த அரளிப்பூ சொல்வது போல அமைந்த அழகான கற்பனை 

                     பூக்களில்நானுமோர்
                     பூவாய்த்தான் பிறந்தேன்.
                     பூவாய் நான் பிறந்தாலும்
                     பொன்விரல்கள் தீண்டலியே!
                     பொன்விரல்கள் தீண்டலியே!
                     நான் பூமாலை ஆகலியே!

 என்று அரளி மலர் வருத்தப் படுவதை சுட்டிக் காட்டிய ஆசிரியர் நீங்களும்  அது போல் இப்போது வருத்தப் படுகிறீர்கள் என்றார்.
எங்களுக்கு ஒன்றும் புரிய வில்லை. அவரே விளக்கினார் .
+2 வில் எங்கள் வகுப்பு மட்டும் முழுக்க ஆண்கள் மட்டுமே. மற்ற வகுப்புகள் எல்லாம் Co.Education. "நீங்களும்தான் +2 படிக்கறீங்க! மத்த வகுப்பு மாதிரி, நீங்க கவனிக்கறதுக்கும், உங்களை கவனிக்கறதுக்கும் Girls இல்லையே என்று கிண்டலடித்துவிட்டு இப்ப புரியுதா" என்றார். 

      சரி சரி பரவாயில்ல. அரளி மாதிரி டல் அடிக்காதீங்க மல்லிகைப் பூ மாதிரி சிரிங்க. எல்லாம் நன்மைக்கே.  எதையும் பாஸிடிவா எடுத்துக்கணும். உங்களுக்கு ஒரு போட்டி வைக்கறேன் நீங்க மு மேத்தாவோட இந்தக் கவிதைக்கு ஒரு எதிர்க் கவிதை   எழுதணும். புலம்பலோ வருத்தமோ இருக்கக் கூடாது என்றார்.

மற்ற மாணவர்கள் யாரும் ஆர்வம காட்டவில்லை. ஆனால் எனக்கு சட்டென்று ஒரு யோசனை வந்தது. நான் கேட்டேன் "சார்! மல்லிகையும் அரளியும் பேசுவது போல் எழுதலாமா சார்!"

" தாராளமா?" என்றார் 

மலர்ந்து மனம் வீசிக் கொண்டிருக்கும் மல்லிகைப்பூ  ஒன்று தன் அழகில் கர்வம் கொண்டு அருகில் மலர்ந்திருந்த அரளியைப் இழிவாக பேசுவது போலஎழுதி இருந்தேன். அடுத்த நாள் ஆசிரியரிடம் இதைக் காட்ட, அதில் உள்ள சொற்குற்றம் பொருள் குற்றம்  எல்லாம் கண்டு கொள்ளாமல் பாராட்டினார்.அந்த மாதிரி சில சம்பவங்கள்தான் நான் கொஞ்சம் கவிதை எழுதி உங்களை டார்ச்சர் பண்றதுக்கு காரணம்

இதோ  அந்தக் கவிதை 

                      மல்லிகையும் அரளியும்

                கொடியில் மலர்ந்த மலர்ந்த மல்லிகை ஒன்று
                அருகில் இருந்த அரளியைப்  பார்த்து
                "பூக்களில் வீணாய்ப் பிறந்திட்ட அரளியே !
                என் பெருமை சொல்வேன் அதைநீ கேட்பாய்!
                பூக்களில் எனக்கே உயரிடம் உண்டு
                பாவலர் பாடிய பெருமையும் உண்டு
                மங்கையர் விரும்பும் மனமெனக்குண்டு
                மனதைக் கவரும் அழகெனக் குண்டு
                நங்கையர்  பொன்விரல் கொண்டெனைப் பறிப்பார்
                நகைமுகம் கொண்டே மாலையாய்த் தொடுப்பர்
                இறைவன் மேனியில் இனிமையாய் சாற்றுவர் 
                தானும்  தலையில் சூடியே போற்றுவர் 
                கூந்தல் வாசம் நீ அறிவாயா?
                மெல்லுடல் தழுவிடும் சுகம் பெறுவாயா?
                இத்தனை சிறப்பு உனக்கென இல்லை.
                புவியில் உனக்கே தனி இடம் இல்லை 
                வீணில் வாழ்வது உன்னுடை வாழ்க்கை 
                தேனில் பழம்போல் இனிக்கும்என் வாழ்க்கை" 
                என்றே  உரைத்ததைக் கேட்ட அரளியும் 
                மௌனம் தனையே பதிலாய்ச் சொன்னது 
                மாலை  வந்தது; மங்கையர் வந்தனர் 
                மல்லிகைப் பூவைப் பறித்துச் சென்றனர் 
                மாலை மறைந்து இரவும் வந்தது 
                அரளியும் சற்றுத் தன்கண் அயர்ந்தது
                விடியும் வேளையில் சத்தம் கேட்டது 
                சத்தம் கேட்டு அரளியும் விழித்தது 
                வெளிச்சம் வந்ததும் கீழே பார்த்தது 
                பூச்சரம் ஒன்று பூமியில் கிடந்தது 
                மல்லியும் அதிலே இருந்ததைக் கண்டது 
                எள்ளி நகைத்து அதனிடம் உரைத்தது 
                "சூடிய பூவாய் நேற்றுநீ இருந்தாய் 
                வாடிய பூவாய் இன்று நீ விழுந்தாய் 
                நேற்றுனை பலபேர் போற்றி மதித்தனர் 
                இன்றுனை  அவரே  காலில் மிதித்தனர்
                அப்போ துன்னை  விரும்பி அணிந்தனர் 
                இப்போ துன்னை தூக்கி எறிந்தனர்
                மானிட உலகில் இதுவும் விந்தை 
                மனதில் கொள்ளுமோ உன்னுடை சிந்தை
                தாழ்ந்தவள்  என்று எனையே ஏசினாய்
                உயர்ந்தவள் நீ என்று பெருமை பேசினாய்
                சுகந்தம் இருந்ததால் எனை நீ இகழ்ந்தாய் 
                அகந்தை கொண்டதால் அறிவை இழந்தாய் 
                சிறப்பு உனக்கு என்றே நினைந்தாய்
                இறப்பு அருகில் இருப்பதை மறந்தாய் 
                ஒரு நாள் வாழ்வு மறுநாள் மரணம் 
                இயற்கை வகுத்த உன் விதி இதுதான் 
                மகத்துவம் எனக்கே இல்லையென்றாலும் 
                மடந்தையர் கையால் மரணம் இல்லை 
                வாழ்நாள் முழுதும் தாயுடன் இருப்பேன் 
                காலம் முழுதும் களிப்புடன் கழிப்பேன்"
                அரளியின்  சொல்லில் உண்மை இருந்தது
                அறிந்த  மல்லியோ தலையைக் குனிந்தது.

**************************************************************************************

39 comments:

 1. விளையும் பயிர் முளையிலே!

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. \\மத்த வகுப்பு மாதிரி, நீங்க கவனிக்கறதுக்கும், உங்களை கவனிக்கறதுக்கும் Girls இல்லையே என்று கிண்டலடித்துவிட்டு இப்ப புரியுதா"\\ இப்படியெல்லாம் உங்களுக்கு ஏக்கம் இருக்கா? நீங்கள் கோ-Ed படித்ததே இல்லையா!! கோ-Ed என்றால் குஜாலா இருக்கும்னு யாரு கிளப்பி விட்ட புரளியோ தெரியலையே!! சின்ன வயதில் இருந்து ஒன்றாகப் படிப்பதால் அவர்களுடன் சகோதர உறவு மாதிரி தான் இருக்கும். வாத்தியார் வைக்கும் வார/மாத டெஸ்டு எல்லாத்தையும் எங்களியே திருத்த குடுப்பார் அவங்க பேப்பர் எங்ககிட்ட எங்க பேப்பர் அவங்க கிட்ட. மார்க்கு போடும்போது அவங்க குறைக்க, நாங்களும் குறைக்க இதனால் எலியும்பூனையும் மாதிரி இரு பிரிவுக்கும் கடைசி வரை சண்டையாகத்தான் இருக்கும்.மேலும் அவர்கள் வளர்ந்து பருவமடைந்த பின்னரும் எங்களுக்கு ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை அப்படியே +2 க்கு வேறு பள்ளிக்குச் சென்ற பொது அவர்களை ஆ....... வென்று வாயைப் பிளந்து கொண்டு புதிய மாணவர்கள் பார்க்கும் போது எங்களுக்கு எதுக்குடா இப்படி பார்க்கிறானுங்கன்னு வியப்பா இருக்கும். புதிய மாணவிகள் பேசியதே இல்லை!! பள்ளி முடிந்த பின்னர் நம்மைக் கண்டால் கூட அதுங்க எதுவும் பேசாது. எல்லாம் கொடுமை......... அனுபவிக்க ஒன்றுமில்லை.


  கவிதை அருமை. [அந்த வயசுக்கு!!]

  ReplyDelete
 4. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

  ReplyDelete
 5. மேத்தா, 1970இல் என்னுடன் ராசிபுரம் அரசு கலைக் கல்லூரியில் உடன் பணியாற்றியவர், அவருடைய ‘கண்ணீர்ப் பூக்கள்’ வருவதற்கு முன்பு.

  கவிதைகள் எழுதி வந்து எங்களிடம் படித்துக் காட்டுவார். ஆரம்ப காலக் கவிதைகளே நன்றாகத்தான் இருக்கும்.

  அவர் கோவைக்கு மாறுதல் ஆன பிறகுதான், வானம்பாடிக் குழு உருவாகி, சிறந்த கவிதைகள் எழுதினார்.அவையே கண்ணீர்ப் பூக்களாகத் தொகுக்கப் பெற்றுப் புகழேணியில் ஏறத் தொடங்கினார்.

  உங்களுடைய கவிதையும் மிகச் சுவையானதே.

  பாராட்டுகள் முரளி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பரமசிவம் சார்

   Delete
 6. ஹா ஹா ஹா செம செம அப்பவே இப்படி அடிச்சி தூள் கிளப்பிருக்கிங்க.. வாழ்த்துகள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. அப்போதே உங்களின் திறமை
  ஒளிவீசி இருக்கின்றது...
  இன்னும் இன்னும்
  புதுநிலா.. போல...
  புத்தொளி வீசி பரவட்டும்...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது
  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி மகேந்திரன்

   Delete
 8. தேனில் பழம்போல் இனிக்கும்என் வாழ்க்கை" //

  சுகந்தம் இருந்ததால் எனை நீ இகழ்ந்தாய்
  அகந்தை கொண்டதால் அறிவை இழந்தாய் //

  அழகான வரிகள்..ஆரம்ப கவிதைக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி இராஜேஸ்வரி மேடம்

   Delete
 9. இளம் வயதில் எழுதி இருந்தாலும் கவிதையில் முதிர்ச்சி தெரிகிறது. பாராட்டுக்கள் முரளிதரன்.

  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. கவிதை நன்றாக இருக்கிறது.

  உங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி மேடம்

   Delete
 11. கவிதை நன்றாகவே இருக்கிறது முரளி....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 12. உண்மையாவே மல்லிகை பயந்துதானிருக்கும்.அப்பவே இப்பிடியா நீங்க !

  அன்பான பொங்கல் வாழ்த்துகள் முரளி !

  ReplyDelete
 13. இன்றைய உங்கள் திறமைக்கு இது, அன்றைய எடுத்துக்காட்டு! அருமை முரளி!

  ReplyDelete
 14. // ஒரு நாள் வாழ்வு மறுநாள் மரணம்
  இயற்கை வகுத்த உன் விதி இதுதான்
  மகத்துவம் எனக்கே இல்லையென்றாலும்
  மடந்தையர் கையால் மரணம் இல்லை
  வாழ்நாள் முழுதும் தாயுடன் இருப்பேன்
  காலம் முழுதும் களிப்புடன் கழிப்பேன்"//

  அரளியின் தத்துவம் யோசிக்க வைத்தன. எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!


  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா!
   சிறப்பு உனக்கே என்றே நினைத்தாய்
   இறப்பு அருகில் இருப்பதை மறந்தாய்!

   இதில் இறப்பு என்பதை விட்டுவிட்டேன். அந்தத் இப்போதுதான் கண்ணில் பட்டது.
   திருத்தி இருக்கிறேன்.பலமுறை படித்துப் பார்த்தேன். அப்படியும் தவறு புலப்படாமல் போய் விட்டது.

   Delete
 15. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயகுமார் சார் பொங்கல் வாழ்த்துக்கள்

   Delete
 16. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. நன்றி கண்ணதாசன் சார்

   Delete
 17. அந்த வயதிற்கு பாடல் மிக மிக அருமை!
  வாழ்த்துக்கள் முரளிதரன் ஐயா.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  என் இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
  த.ம. 9

  ReplyDelete
 18. ’மூங்ல் காற்று’...தலைப்பு அருமை!

  “உங்கள் உள்ளம் புகுவேனா?” என்கிறீர்கள்.

  புகுந்து வெகுகாலம் ஆகிவிட்டதே!

  ReplyDelete
 19. அருமை அய்யா, தங்களின் அனுமதியுடன் பள்ளியில் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை. ஆணவம் தலைக்கு ஏறினால் அழிவு நிச்சயம் என்பதை அழகாக உணர்த்துகிறது கவிதை.

  ReplyDelete
  Replies
  1. தாராளமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

   Delete
 20. இந்த உங்களின் இளமைக் கவிதை
  முந்திய உஙகளின படைப்பைப் படிக்க
  என்னைத் தூண்ட, இதற்கான நன்றி
  நண்பர் பாண்டியன் வலைவழி வந்தது.
  // ஒரு நாள் வாழ்வு மறுநாள் மரணம்
  இயற்கை வகுத்த உன் விதி இதுதான்
  மகத்துவம் எனக்கே இல்லையென்றாலும்
  மடந்தையர் கையால் மரணம் இல்லை
  வாழ்நாள் முழுதும் தாயுடன் இருப்பேன்
  காலம் முழுதும் களிப்புடன் கழிப்பேன்"//
  என்னும் வரிகள் மின்னும் பொறிகள்!
  தங்கள் கவிதைத் தொகுப்பைப் படிக்க
  எங்கள் மனமும் துடிப்பது உணர்வீர்
  இன்றே அதனைத் தொகுத்துக் கொணர்வீர!
  நன்றி வாழ்த்து வணக்கம்
  என்றே கூறி முடித்தேன் இனிதே

  ReplyDelete
  Replies
  1. ஆகா! கவிதையிலேயே கருத்தளித்துவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.
   தொகுக்க ஆசைதான். காலம் கனிந்தால் நிச்சயம் செய்வேன்.

   Delete
 21. ஐயா வணக்கம்.

  அபாரம் ஐயா.

  வியக்கிறேன்.

  உங்களின் கவிமனதைப் புரிந்து கொண்டேன்.
  மாணவ மனங்களைப் புரிந்தும் வளர்த்தும் போன உங்களின் தமிழாசிரியரை வணங்குகிறேன்.

  இன்றுள்ள மாணவர்களுக்கு இப்பேறு கிடைக்கவில்லையே என்றெண்ண ஆறொணாத் துயர்தான்

  நன்றி.

  ReplyDelete
 22. ஐயா வணக்கம்.

  அபாரம் ஐயா.

  வியக்கிறேன்.

  உங்களின் கவிமனதைப் புரிந்து கொண்டேன்.
  மாணவ மனங்களைப் புரிந்தும் வளர்த்தும் போன உங்களின் தமிழாசிரியரை வணங்குகிறேன்.

  இன்றுள்ள மாணவர்களுக்கு இப்பேறு கிடைக்கவில்லையே என்றெண்ண ஆறொணாத் துயர்தான்

  நன்றி.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895