என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 25 ஜனவரி, 2013

அரவாணிகள் கவிதைப் பதிவில் செய்த தவறு.

   முந்தைய பதிவில் அரவாணிகள் பற்றிய இரண்டு கவிதைகள் வெளியிட்டிருந்தேன், அதில் ஒன்று பிரபல கவிஞர் எழுதியது ஒன்று நான் எழுதியது.எதை யார் எழுதியது என்பதை கண்டுபிடிக்கச் சொல்லி இருந்தேன். பெரும்பாலானவர்கள் எது நான் எழுதியது என்பதை சரியாகக் கணித்துள்ளனர். பலர் இன்னொரு கவிதையை அறிந்திருந்தாலும்  எழுதிய கவிஞரின் பெயரை  மட்டும் கண்டுபிடிக்கவில்லை. முதல் கவிதை "நாங்கள் யார்" நான் எழுதியது. இரண்டாவது கவிதை "காகிதப் பூக்கள்" எழுதிய கவிஞர் நா.காமராசன் அவர்கள். அவர் எழுதிய கருப்பு மலர்கள் என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது இக் கவிதை . நிறையப் பேர் அரவாணிகளின் வலிகளை சொல்லும் இரண்டு கவிதைகளுமே நன்றாக இருக்கின்றன என்று கூறினாலும் அவரது கவிதை என்க விதையை  விட உயர்வானது என்பதே என் கருத்து.

பலர் கருத்திட்ட போதும் நான் எதிர்பார்க்காத கருத்தை பெயர் சொல்லாத ஒருவர் கூறி இருந்தார் 

// ரயிலில் செல்லும் போது, திருநங்கை உங்களிடம் மிரட்டி பணம் வாங்குகிறார். கையில் இருக்கும் எதையாவது பிடுங்கி கொண்டு விடுகிறார். என்ன நினைப்பீர்கள்? கோபம், வருத்தம் துளியும் படாமல், சாந்தமாக நின்று கொண்டு இருப்பீர்களா?

உங்களிடம் அவர்கள் வந்து காசு கேட்டால் எவ்வளவு கொடுப்பீர்கள்?
பஸ்ஸில் உங்கள் அருகில் அவர்கள் உட்கார்ந்தால் எவ்வாறு உணர்வீர்கள்? அவர்களிடம் பேசுவீர்களா?
கவிதையை தவிர, அவர்களுக்கு ஏதாவது உதவி, நன்மையை செய்திருக்கிறீர்களா? அவர்களை எவ்வாறு நடத்தியிருக்கிறீர்கள்?

முடிந்தால் மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.//
என்று எழுதி இருந்தார்

   நான் தினமும்  மின்சார ரயிலில்தான் பயணம்  செய்கிறேன். அவர்கள் காசுகேட்கும்போது அவ்வபோது என்னால் முடிந்ததைக் ( 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை) கொடுத்திருக்கிறேன் என்பதைத் தவிர வேறு எதுவும் பெரிதாக செய்ததில்லை என்பது உண்மைதான்.  பல சமயம் கொடுக்காமலும் இருந்திருக்கிறேன். திட்டும் வாங்கி இருக்கிறேன். முதன் முதலில் அவர்களைப் பார்த்தபோது சற்று பயம் இருந்தது. நாளடைவில் அது மறைந்து விட்டது. ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. எப்படி என்றுதான் பிடிபடவில்லை. . பொதுவாக அவர்கள் காலியாக இருந்தாலும் இருக்கைகளில் உட்காருவதில்லை.   
    ஒரு சமயம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் பார்த்த ஒரு சில  நிகழ்வுகளின் பாதிப்பிலும் அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் உண்மையான பாதிப்பிலும் தான்  இந்தக் கவிதையை எழுதினேன். அரசாங்கம் இவர்களுக்கு என்ன செய்கிறது  தனி மனிதன் என்ன செய்ய முடியும், சமுதாயம் சென்ன செய்ய வேண்டும் நல்ல தீர்வுகளுக்கு வாய்ப்பு உண்டா?   என்பது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.

    நாங்கள் யார் கவிதை எழுதி ஓராண்டுக்கு மேலாக இருக்கும். இந்தக் கவிதையை மட்டும் வெளியிடுவதாகத்தான் இருந்தேன்.இதை பற்றி வேறு யாராவது எழுதி இருப்பார்களா என்று தேடினேன்.குறிப்பாக வைரமுத்துவின் கவிதைகளில் தேடினேன்.  தமிழ் படித்த ஆசிரியர் ஒருவர் நா. காமராசன் இது பற்றி எழுதி இருக்கிறார். தற்கால இலக்கியத்தில் படித்ததாக நினைவு என்றார். காமராசன் என்றதுமே கருப்பு மலர்கள் நூல் நினைவுக்கு வந்தது. கேள்விப் பட்டிருக்கிறேனே தவிர படித்ததில்லை. சமீபத்தில் நான் கன்னிமாரா நூலகம் சென்றபோது அந்தப் புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதையும் சேர்த்து பதிவிட முடிவு செய்தேன். இதுவரை தவறு ஏதுமில்லை.

  பொதுவாக கவிதைகளுக்கு கருத்துக்கள் அதிகமாகக் கிடைத்தாலும் மொத்த பார்வையாளர் எண்ணிக்கை பிற பதிவுகளைவிட  குறைவே (எனது கவிதைகளுக்கு).  பிரபலத்தின் கவிதை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்  என்பதற்காக கவரும் விதமாக தலைப்பும் வோட்டுப் பட்டனும் வைத்தேன். அரவாணிகளின் வலிகளை சொல்லும் பதிவில் சவால், இரண்டு கவிதைகளை ஒப்பிடும் விதமாக ஒட்டுப்பட்டை இதெல்லாம் தேவையா என்று அவர் சுட்டிக் காட்டியதும் நான் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்டேன்.  கருத்தை ஏற்று அதை  நீக்கி விட்டேன். இது போன்ற பதிவுகளின்போது பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். கருத்துக்களைப் பதிவு செய்த அத்துணை பேருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

*******************************************************************************************
அந்தக் கவிதைகள் இதோ
அரவாணிகள் -பிரபல கவிஞர் எழுதியது எது? 

*****************************************************************************************

8 கருத்துகள்:

 1. நண்பரே... இதில் ஒரு தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
  நாம் திருநங்கையரையும் மனிதர்களாகத் தான் மதிக்கிறோம்.
  அவர்களின் துன்பங்களைத் தான் இருவருமே கவிதைகளாக எழுதி இருந்தீர்கள்.
  தவிர தற்போதைய சமூகம் அவர்களை மதிக்கிறது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
  அவர்களுக்கு இன்னும் வரவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

  தாங்களும் மனிதர்கள் தான் என்பதை அவர்கள் தான் உணர்த்த வேண்டும்.
  அவர்களே ஒதுங்கிச் செல்வதுதான் அவர்கள் செய்யும் தவறு!

  த.ம. 1

  பதிலளிநீக்கு
 2. முந்தைய பதிவை இப்போதுதான் படித்தேன். பார்த்த நிகழ்வுகளின் பாதிப்பை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. உங்களின் பெருந்தன்மைப் பாராட்டுக்குரியது

  பதிலளிநீக்கு
 4. அரவாணிகளும் மனிதர்களே! நாம் அவர்களை நடத்தும் விதத்தில் அவர்களும் நம்மிடம் நடந்து கொள்கிறார்கள்! விளக்கப்பதிவிற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. அந்தப் பதிவில் தவறேதுமில்லை

  பதிலளிநீக்கு
 6. அந்தப் பதிவில் என் பதிலைச் சொல்லியிருக்கிறேன் . அவர்களின் வலி உணர்தல் தான் நாம் செய்யும் முதல் உதவி.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895