என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 30 மே, 2016

கழுதைக்குத்தான் பதவி- உள்குத்து ஏதுமில்லை



  நான்படித்த ரசித்த சில கதைகளை என் கற்பனை கலந்தும். சில சமயங்களில் முழுதும் கற்பனையாகவும்  எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள் என்ற தலைப்பில் பதிவிடுவதை  அறிந்திருப்பீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு  

எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை 


அந்த அரசவையில் வானிலை ஆலோசகர்  பதவி காலியாக இருந்தது . மழை வெள்ளம்  பூகம்பம் முதலிய  இயற்கை இடர்பாடுகளை கணித்துக் கூறவேண்டும் அரசின் செயல்பாடுகளுக்கும் திட்டங்களும் தடைபடாமல் நடைபெற  வானிலை உகந்ததாக இருக்கிறதா என்று சொல்லவேண்டும். இவை வானிலை ஆலோசகரின் பணியாகும். இப்பதவிக்கு   தக்க அறிவும் புத்திசாலித்தனமும் நிறைந்தவரை நியமிக்க விரும்பினார் மன்னர். .அப்பதவிக்கு நிறையப் போட்டி இருந்தது. அவர்களில் அதிகம் கற்றவரை மன்னரிடம் அழைத்து வந்த அமைச்சர்.,"மன்னா இவர்தான் வந்தவர்களிலேயே மிகவும் கல்வி அறிவு உடையவர்.. வானவியல் பூகோளவியல் உள்ளிட்ட அனைத்தும் அறிந்தவர்,. இவரை இந்தப் பதவிக்கு நியமிக்கலாம்" என்றார்.
"அப்படியா! இவரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்..  வேட்டைக்காக செல்லப் போகிறேன். இன்றைக்கு மழை வருமா? மழை உறுதியாக வராது என்று தெரிந்தால் மட்டுமே  வேட்டையாட செல்வேன். இவர் சொன்னபடி நடந்தால் இவரையே இப்பதவிக்கு நியமிக்கிறேன்."  என்றார் 
     அமைச்சர் அழைத்து வந்தவர் வானத்தை நான்கு பக்கமும் உன்னிப்பாக  பார்த்தார்,பின்னர் கையில் இருந்த ஓலை சுவடிகளைப் புரட்டிப் பார்த்தார்
" அரசே! இன்று வானிலை நன்றாக உள்ளது மழை நிச்சயம் வராது. மழை வராது  என்பதை கால சாஸ்திரமும்  உறுதிப்படுத்துகின்றன.  தாங்கள் தாரளமாக வேட்டைக்குச் செல்லலாம்." என்றார் 
     மன்னர் தன் பரிவாரங்களோடு வேட்டைக்கு காடு நோக்கி புறப்பட்டார். சிறிது தூரம் கடந்ததும் வழியில்வி வசாயி ஒருவன் வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தான். அறுவடை செய்யப்படும் பயிரைக்  கவனித்த மன்னர்  இன்னும் சில நாட்களுக்குப்  பிறகு செய்ய வேண்டிய அறுவடையை இப்போதே செய்து கொண்டிருந்தான். மன்னர் அவனை அழைத்து ஏனிப்படி பயிரை முன்னதாகவே அறுவடை செய்கிறாய் என்று கேட்டார் ,
அதற்கு அந்த விவசாயி , "அரசே! இன்று கடும் மழை பெய்யப் போகிறது மழை வந்தால் பயிர் நீரில் மூழ்கி  வீணாகி விடும் அதனால்தான் இப்போதே அறுவடை செய்கிறேன். நீங்கள்கூட, உங்கள் பயணத்தை  நிறுத்திவிட்டு திரும்பி விடுங்கள் " என்றான் 
   மன்னரும் கூட வந்தவர்களும் கொல்லென்று  சிரித்தனர் ."படித்த விவரம் அறிந்த அறிஞரே சொல்லிவிட்டார் இன்று மழை வராது என்று,.மழை வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. நீயோ முட்டாள்தனமாக மழை வரும் என்கிறாய் . உன்னைப் போன்ற முட்டாள்கள் என் நாட்டு மக்களாக இருப்பதைக் கண்டு வெட்கப்படுகிறேன், என்று சொல்லி விட்டு வேட்டைப் பயணம் தொடர்ந்தார்.
  நேரம் கடந்தது எதிர்பாராவிதமாக திடீரென்று காற்று  வீசியது. வானம் இருண்டது . மழை சட சடவெனப்  பெய்ய ஆரம்பித்தது. மழை மேலும் வலுத்துக் கொட்டிக் கொண்டிருந்தது. ஒதுங்க இடம் தேடி அலைந்து கடைசியில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒதுங்கினர். மழை விட்டபாடில்லை. அதிகாலை வரை மழை பெய்து எங்கும் வெள்ளக் காடாக மாறி விட்டது. வேறு வழியின்று காலையில் வேட்டைக்கு  செல்ல முடியாமல்  அரண்மனை திரும்பினார் மன்னர் .
  அரண்மனை சென்றும் மன்னனின் ஆச்சர்யம் அகலவில்லை. கற்று அறிந்த அறிஞரால் மழை வரும் என்று கணித்துக் கூற முடியவில்லை கல்லாத விவசாயி மழை வரும் என்று அடித்துக் கூறுகிறான். அவனல்லவா சிறந்த வானிலை அறிஞன் என்று எண்ணினார் மன்னர். அந்த விவசாயியை அழைத்து வரச் செய்து,"நீதான் இனிமேல் என் வானிலை ஆலோசகன்" என்றார்
  விவசாயி  தயக்கத்துடன் மறுத்தான். மன்னன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியும் அவன்  மறுக்கவே கோபம் அடைந்த மன்னர்."நீதான் என் வானிலை ஆலோசகன்.உடனே பதவி ஏற்க வேண்டும் இல்லையென்றால் சிறையில் தள்ளப்படுவாய் " என்றார் 
  விவசாயி அச்சத்துடன் மீண்டும் சொன்னான் "மன்னா! நான் மழை வரும் என்று சொன்னது  நடந்து விட்டதால்  தகுதி உடையவன் என்று என்னை இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்கள். உண்மையில் எனக்கு அந்தத் தகுதி இல்லை. என் கழுதைதான் இந்தப் பதவிக்கு தகுதியானது" என்றான் .
மன்னர் குழப்பத்துடன் அவனைப் பார்க்க விவசாயி தொடர்ந்தான்"மழை வருவதன்  அறிகுறி தெரிந்தால் எனது கழுதையின்  காது நரம்பு புடைத்துக் கொள்ளும்.காதுகள் தொங்காமல் மேல்நோக்கி விறைப்பாக இருக்கும். நேற்று அப்படித்தான் இருந்தது. அப்படி இருக்கும்போதெல்லாம் கட்டாயம்  மழை வரும். இதுவரை ஒருமுறை கூட தவறியதில்லை. அதனால்தான் அவசர அவசரமாக அறுவடை செய்தேன். என் கழுதையை வேண்டுமானால்  ஆலோசகராக நியமித்துக் கொள்ளுங்கள்" என்றான் பெருமையுடன்  

*************************************************************************
பிற எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள் 
என்னைவிட புத்திசாலி நீதான்—ஐன்ஸ்டீன்

17 கருத்துகள்:

  1. மன்னர்கள் பெரும்பாலும் ஏன் முரடர்களாகவும், முட்டாள்களாகவுமே இருந்திருக்கிறார்கள்?!!!

    :)))

    பதிலளிநீக்கு
  2. ஹாஹா.....

    இன்றைய பல தலைவர்களும் கூட இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.... :(

    பதிலளிநீக்கு
  3. நல்ல ஆலோசனை. கழுதை நியமிக்கப்பட்டதா என்று கூறவில்லையே?

    பதிலளிநீக்கு
  4. விலங்குகள், பறவைகள் ஏன் எறும்புகள் கூட இயற்கையின் மாற்றங்களை அறியும் நாச்சுரல் இன்ஸ்டிங்க்ட் வாய்ந்தவை. கழுதையின் இந்த அறிகுறி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். மகனிடம் கேட்டிருக்கின்றேன்.

    அருமையான கதை...

    பதிலளிநீக்கு
  5. மழைவரும் அறிகுறியாகக் கழுதைகளின் காதுகள் விரைத்துக் கொ ள்ளுமா தெரியாமல் கேட்கிறேன் உள் குத்து ஏதுமில்லை.

    பதிலளிநீக்கு
  6. சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது கதை! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  7. சிலருக்குக் கழுதை காது என்பார்கள் முரளி!அதுதான் இதுவோ?!

    பதிலளிநீக்கு
  8. கழுதைக்கு இத்தனை திறனா ?? கதை அருமை.

    பதிலளிநீக்கு
  9. கதையை ரசித்தேன் நண்பரே
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
  10. தட்டான் ( தும்பி) தாழப் பறந்தால் ....மழை வரும் என்பார்கள். நானும் கவனித்திருக்கிறேன்.

    சுவாரசியமான கதை

    பதிலளிநீக்கு
  11. மழை வருவது ஸ்ரீதேவிக்கு தெரியும் ,அவர்தான் மயிலாச்சே :)

    பதிலளிநீக்கு
  12. மழை வருமெனத் தெரிந்தால் கழுதையின் காது நரம்புகள் புடைக்கும் என்பது உண்மையாயிருக்கும் பட்சத்தில் இது ஒரு சிறந்த கதை மட்டுமல்ல; பலருக்குத் தெரிந்திராத விஷயமும் கூட.

    பதிலளிநீக்கு
  13. உயிரினங்களுக்கு உள்ள நுட்பமான திறன் பற்றிய கதை சிறப்பு

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895