என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ஜூனோ! எங்கள் செல்லமே!

( எதிர்பாரா விதமாக இறந்துபோன எங்கள் செல்ல  நாய்க்கு ஒரு இரங்கல் கவிதை )

      சாவெனும் வடிவம் கொண்டு 
            சடு தியில்  காலன் வந்து  
      தாவென   உந்தன் உயிரை 
            தட்டியே பறித்துச் சென்றான் 
      போ வென அவனைச் சொல்ல 
            பூமியில் யாரும் இல்லை      
      ஓ வென அலறுகின்றோம்        
            ஜூனோ உன் பிரிவால் நாங்கள்

      மடிமேல் அமர்ந்துகொள்வாய் 
            மையமாய்  வந்து நிற்பாய் 
      படிமேல் ஏறிச் செல்ல 
            பக்குவமாய் காலை வைப்பாய்
      அடிமேல் அடி என்று 
            அழுத்திச் சொன்னால் போதும் 
      படி தாண்டிச்  செல்ல நீயும் 
            பயந்தது போலே நிற்பாய் 


      காகத்தைப் பாரத்தால் உடனே 
           கத்தி அதைத் துரத்திடுவாய் 
      தேகத்தை விதம் விதமாய்
           வளைத்து நீ உறங்கிடுவாய் 
      சோகத்தை விதைத்துவிட்டு 
           சொல்லாமல் கொள்ளாமல் 
      மேகத்தில் உதித்தெழுந்த 
           மின்னலாய் ஏன் மறைந்தாய் ?

      உரத்த குரலில் எங்கள் பேச்சு 
           சண்டையாய்த் தெரியும் உனக்கு 
     சிரத்தை ஆட்டி ஆட்டி 
           தடுத்திட ஓடி வருவாய் 
     பெருத்த  குரலைக் கொண்டு 
           பேரொலியும் எழுப்பிடுவாய் 
     வெறுத்த மனங்களையும் 
           வெற்றி  கொள்வாயே ஜூனோ 

     எம்பிக் குதித் திடுவாய் 
           எட்டி நீ பார்த்திடுவாய் 
     கம்பிமேல் ஏறிச் செல்வாய்
          கண்டதை கடித் திடுவாய்
     தும்பி பிடித்து வருவாய் 
          துணிகளை கிழித்து விடுவாய் 
     நம்பித்தான் ஏமாந்தோம் 
          நல்லபடி இருப்பாய் என


     அழகிய பொம்மை போலே 
          அனைவரையும் கவர்ந் திழுப்பாய் 
     பழகிய நண்பன் போலே 
          பக்கத்தில் படுத்திருப்பாய் 
     மெழு கெனவே உருக வைப்பாய் 
         மேன்மலும் குறும்பு செய்வாய் 
     அழுகையே நிற்கவில்லை 
          ஐயோ ! நான் என்ன சொல்ல 

     இரவில் உறங்குமுன்னே 
          இல்லத்துள் தானே இருந்தாய்?
     அரவம் தாக்கி உந்தன் 
          ஆருயிர் போன தென்ன?
     அரவம் கேட்கவில்லை 
          அறியாமல் இருந்து விட்டோம் 
     உருவம் குலை  யாமல் 
          உறங்குவது போல் கிடந்தாய்  

     தென்பட்ட இடமெல்லாம் ஜூனோ 
          திரிந்தலைந்த  இடமாகத் தெரியுதடி 
     கண்பட்டுப் போகு மென்று 
          கனவிலும் நினைக் கவில்லை 
     மென்பட்டு மேனி இன்று 
          மண்மூடும் காட்சி கண்டு 
     புண்பட்டுப் போனதம்மா நெஞ்சம் 
          புலம்பியதை நிறுத்தவில்லை

     கூவி நாங்கள் அழைக்கின்றோம் 
         குதித்து நீ வருவாயா?
     தாவி வந்தமர்ந்து மடியில் 
         கொஞ்சத்தான் சொல்வாயா?
     ஆவி பிரித்தெடுத்து உன்னை 
         அழைத்துப் போனதந்த விதியா?
     பாவி இறைவன் அவன் 
          பாதகம் செய்தது சரியா? 

     கண்ணயர்ந்த பின்பு கூட 
          கனவினிலும் நீயே வந்தாய் 
     மன்னுயிர்கள் கோடி இங்கு 
          மகிழ்வாய் வாழ்ந்திருக்க 
     உன்னுயிர் வாழ்வதற்கா 
          உலகத்தில் இடம் இல்லை?
     எண்ணியே நான் பார்க்கின்றேன் 
          இறைவனைத்தான் கேட்கின்றேன்  
================================================================================
இதையும் படியுங்க:

2 கருத்துகள்:

  1. நான் வளர்த்துப் பிரிந்த செல்லங்களின் நினைவு வருகிறது. அருமை.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் முரளிதரன் - செல்லமாய் வளர்த்த ஜூனோவின் மறைவு - உலகத்தில் இடமில்லையா ? - கவிதை அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895