என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பத்தினியின் காலை வெட்டு!


   இன்று தமிழ் புத்தாண்டு. அனவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று ஏதாவது தமிழ் பற்றி ஒரு பதிவு போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் நீயெல்லாம்  ஒரு தமிழ்ப் பதிவரா என்று தமிழ் கொஞ்சம் கூறும் பதிவுலகம் தூற்றாதா? ( நீ பதிவு போட்டாதான் சந்தேகமே வரும் னு உங்க மனக்குரல் கேக்குது) 

   நான்  கிராமத்தில கொஞ்ச நாள் வேல செஞ்சப்ப அந்த கிராமத்தோட ஒரு.  அவர் பழைய வில்லேஜ் முன்சீப்பா இருந்தவர். அவர்  வீட்டுக்கு பக்கத்தில்தான் நான் தங்கி இருந்தேன். மாலை நேரங்கள்ல அவரோட பேசிக் க்கிட்டிருப்பேன். அவர் அதிகம் படிக்காதவர்.எஸ்.எஸ்.எல்.சி பாஸ் பண்ணாததால அவர வி.ஓ பதவியில இருந்து எடுத்துட்டாங்களாம். அவர் பத்திரம் எழுதுவதிலும் வல்லவர்னு அந்த ஊர்ல சொல்வாங்க. ஆனால் தமிழ் ஆர்வம் நிறைய உடையவர். பழைய தமிழ் புத்தங்கள் எல்லாம் அவருக்கு அத்துபடி. கம்பர் எழுதின கம்ப ராமாயணம் மட்டும்தான் நான் கேள்விப் பட்டிருக்கேன். அவர்  கம்பர் எழுதின சரஸ்வதி அந்தாதி பத்தி சொன்னபோது ஆச்சர்யமா இருந்தது.   கொஞ்சம் வெத்திலை வாங்கி குடுத்தா போதும் ஏராளமான விஷயங்களை சொல்லுவார். சினிமா பாடல்களைப் பத்தியும் பேசுவார் சித்தர் பாடல்களையும் விளக்குவார். 
  அப்படி ஒரு நாள் பேசிக்கிட்டிருந்தபோது தம்பி!.நான் ஒரு செய்யுள் சொல்றேன் அதுக்கு அர்த்தம் சொல்லு பாக்கலாம். எனக்கும் ஆர்வம் உண்டாகி சொல்லுங்க என்றேன்
அவர்  சொன்னார்

முக்காலை கைப்பிடித்து மூவிரண்டு செல்கையிலே 
அக்காலை ஐந்துதலை நாகம் கடித்தால்
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் 
பத்தினியின் காலை வெட் டித்தேய்

இதுக்கு  அர்த்தம் என்ன தெர்யுமா? சொல்லு என்றார் 
நான் எப்படி விழிப்பது என்றுதெரியாமல் விழித்தேன் ( ஏன்னா ஏற்கனவே  "ஙே" என்று ராஜேந்திரகுமாரும் "ழே" என்று நம்ம பாலகணேஷ் சாரும் முழிச்சிட்டாங்களே)

எனக்கு ஒன்னும் புரியல. "ஒரு புதிர் மாதிரி இருக்கே! நீங்களே சொல்லிடுங்களேன்"என்றேன்
 "இப்பெல்லாம் யாரும் யோசிக்கவே மாட்டேன்கறாங்க. எல்லாம் உடனே சொல்லிடனும்" என்று சொல்லி சிரித்துவிட்டு வார்த்தை வார்த்தையாக விளக்க ஆரம்பித்தார் .

முக்காலை கைபிடித்துன்னா- வயதாகி நடக்க முடியாம  மூணாவது காலாகிய கொம்பை பிடிச்சிக்கிட்டு ன்னு அர்த்தம் 
மூவிரண்டு  செல்கையிலேன்னா  மூவிரண்டு ஆறு அல்லவா? ஆறுன்னா இன்னொரு அர்த்தம் "வழி" போகும்போது 
அக்காலை-அந்த வேளை
ஐந்துதலை  நாகம் கடித்தால் -அதாவது  ஐந்து தலை நாகம் போல  முட்களை உடைய நெருஞ்சி முள் குத்தினால்
பத்துரதன்-  தசரதன், 
புத்திரனின்-அவனோட மகன் ராமனின் 
மித்திரனின் -அவனோட நண்பன் சுக்ரீவன் 
சத்துருவின் -சுக்ரீவனின் பகைவன் வாலியின் 
பத்தினியின்-வாலியின் மனைவி  தாரை 
காலை  வெட்டித் தேய்-தாரை என்ற வாரத்தையில் காலை எடுத்தால் தரை அதாவது தரையில் தேய் .

   மொத்தமா சொல்லனும்னா வயசாகி கொம்பை ஊணி நடந்து போகும்போது நெருஞ்சி முள் காலில் குத்தினா தரையில தேச்சுட்டு போய்க்கிட்டே இருன்னு அர்த்தம் என்றார்.

    கிராமத்தில  நடக்கும்போது நெருஞ்சி முள் கால்ல குத்தறது ஒரு சாதாரண விஷயம். அதை குனிஞ்சி கூட எடுக்க மாட்டாங்க.தரையில் தேச்சுட்டு போய்டுவாங்க அதை எப்படி வித்தியாசமா சொல்லி இருக்காங்க பாத்தியா. ஒரு  விஷயத்தை நாம் சொல்றதுக்கும் புலவர்கள்  சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இந்த மாதிரி நிறையப் பாடல்கள் தமிழ்ல இருக்கு என்பார். 

  நான்  மாறுதலாகி வந்துவிட்டேன். அவர் பற்றி தகவல் எதுவும் அறிய முடியவில்லை .இந்த  நாளில் அந்தப் பெரியவருக்கு நினைவு கூர்ந்து நன்றி கூர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

**************************************************************************************

34 கருத்துகள்:

  1. நல்லதொரு செய்யுளும், அதற்கான விளக்கமும் அருமை... புத்தாண்டு முடிவதற்குள் நல்லதொரு பகிர்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அந்த காலத்தில் காரணம் இல்லாமல் பழமொழி கிடையாது.எல்லாத்துக்கும் ஒன்றைச் சொல்லி விடுவார்கள்.அதுபோல இப்போ சொன்னதும் அருமை

    பதிலளிநீக்கு
  3. நல்ல விஷயம்... அதாவது ரோட்டில் தெரியாத்தனமாக சாணியை மிதித்துவிட்டால் பிளாட்பாரத்தில் தேய்க்கிறோமே அது போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாணத்தை வைத்தும் இதை மாற்றி எழுதிவிட முடியும்.நன்றி பிரபாகரன்.

      நீக்கு
  4. ரசித்தேன். இதை ரசிப்பதற்காகவேதான் காலையில் இரண்டு மணிக்கு எழுந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பாடலை நானும் கேட்டு இருக்கிறேன் - அம்மா சொல்லி இருக்கிறார்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. முதலில் பதிவின் தலைப்பை பார்த்தது பயந்துவிடேன் என்ன என்று உள்ள வந்து பார்த்தால்
    மிக அருமையான பாடல் அதற்கு விளக்கம் நல்ல நினைவு கூறல் உங்களுக்கு பசுமரத்தாணி போல் சொல்லுவாங்க மிக நல்ல வித்யாசமான பகிர்வு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது தலைப்பு ஈர்க்கும் வகையில் இருக்கவேண்டுமே. நன்றி பூவிழி

      நீக்கு
  7. அருமையான விளக்கம் ஐயா......
    நலமாக இருக்கிறீங்களா

    பதிலளிநீக்கு
  8. // "இப்பெல்லாம் யாரும் யோசிக்கவே மாட்டேன்கறாங்க. எல்லாம் உடனே சொல்லிடனும்" என்று சொல்லி சிரித்துவிட்டு வார்த்தை வார்த்தையாக விளக்க ஆரம்பித்தார் .

    // - ஆமால்ல! சுவாரஸ்யமான பெரியவர்தான்!

    பதிலளிநீக்கு
  9. பாடல் விளக்கம் அருமை.
    இதை தொலைக்காட்சியில் சமீபத்தில் கேட்டேன்.

    முதியவர்கள், பழமொழி, விடுகதை இது போன்ற பாடல்கள் மூலம் புராணத்தை அதில் அழகாய் சேர்த்து எளிமையாக சொல்லிக் கொடுத்துவிடுவார்கள் இளைய தலைமுறையினருக்கு.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. கரு .பழனியப்பனின் "பிரிவோம் சந்திப்போம்" என்ற திரைப்படத்தில நீங்கள் கூறிய இந்த செய்யுளையும் அதற்கான விளக்கத்தையும் எம்.எஸ் பாஸ்கர் அவருடைய வேலையாளிடம் சொல்வதைப்போல் காட்சிப்படுத்தியிருப்பார். அதற்கு அந்த வேலையாள் பதில் கமென்ட் அடிப்பார் பாருங்க அது செம...!

    //இதுக்கு அர்த்தம் என்ன தெர்யுமா? சொல்லு என்றார்
    நான் எப்படி விழிப்பது என்றுதெரியாமல் விழித்தேன் ( ஏன்னா ஏற்கனவே "ஙே" என்று ராஜேந்திரகுமாரும் "ழே" என்று நம்ம பாலகணேஷ் சாரும் முழிச்சிட்டாங்களே)// ஹா ஹா ஹா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இந்த விஷயம் எனக்கு தெரியாது தெரிந்திருந்தால் பதிவில் குறிப்பிட்டிருப்பேன். மனம் விடு சிரித்தமைக்கு நன்றி ஜீவன்

      நீக்கு
  11. . ஒரு விஷயத்தை நாம் சொல்றதுக்கும் புலவர்கள் சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

    அருமையான வித்தியாசமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. அருமை.

    பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின்.... என்ன ரைமிங்!

    பதிலளிநீக்கு
  13. மிகவும் அருமை, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    புத்தாண்டை அழகு தமிழோடு தொடங்கியதற்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வணக்கங்கள் அந்த பெரியவருக்கும், மிக அழகாக பதிவு செய்த தங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  14. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று ஏதாவது தமிழ் பற்றி ஏதாவது ஒரு பதிவு படித்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் நீயெல்லாம் ஒரு தமிழ்ப் பதிவரா என்று தமிழ் கொஞ்சம் கூறும் பதிவுலகம் தூற்றாதா என்ன அதனால் இனிய தமிழ் உறவாடும் உங்கள் பதிவை படித்தேன். படித்ததும் அப்படியே போகாமல் கருத்தும் இடுகிறேன். இல்லையென்றால் நான் படித்தற்கு ஆதாரம் இருக்காது அல்லவா..

    பதிலளிநீக்கு
  15. அருமையான பகிர்வு! இந்த செய்யுளை புலவருக்கும் வைத்தியருக்கும் நடந்த உரையாடல் என எப்போதோ எதிலோ படித்த ஞாபகம்! பின்பாதிதான் ஞாபகத்தில் இருந்தது என்னுடைய தமிழ் அறிவு எப்படியில் பதிவிடலாம் முழுதாக கிடைத்தால் என்று நினைத்தேன்! நீங்கள் முந்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. இது பற்றி ஏற்கனவே ஓரளவு கேள்விப்பட்டுள்ளேன்.இன்று இந்தப்பதிவின் மூலம் மேலும் விபரமாக தெரிந்து கொள்ள முடிந்தது.

    // கிராமத்தில நடக்கும்போது நெருஞ்சி முள் கால்ல குத்தறது ஒரு சாதாரண விஷயம். அதை குனிஞ்சி கூட எடுக்க மாட்டாங்க.தரையில் தேச்சுட்டு போய்டுவாங்க அதை எப்படி வித்தியாசமா சொல்லி இருக்காங்க பாத்தியா. ஒரு விஷயத்தை நாம் சொல்றதுக்கும் புலவர்கள் சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.//

    அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். இனிய் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  17. மிக நல்ல விளக்கம்.
    மிக்க நன்றி.
    புத்தாண்டு லாழ்த்து.

    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895