என்னை கவனிப்பவர்கள்

புதன், 17 டிசம்பர், 2014

சிறகுகள் தேவை இல்லை


                                             சிறகுகள் தேவை இல்லை
                                             வரம்கொடுக்க வந்த  தேவதையிடம்
                                             சொன்னேன்.
                                             அதிசயத்துடன் பார்த்தது
                                             "வரம் மறுப்பது அறிவீனம்
                                              முட்டாளே!
                                              சிறகுகளின் பலம் அறியாய்
                                              மறுக்காமல் அணிந்து கொள்
                                              அனைவரையும்
                                              அண்ணாந்து பார்க்க வை
                                              ஆகாயத்தை அள
                                              இரைச்சல் எழுப்பு
                                              ஈரக் காற்று அனுபவி
                                              உரசிப் பார் மலைகளை
                                              ஊர்களை நோக்கு
                                              எண்ணிலா ஆசை கொள்
                                              ஏக்கம் தீர்த்துக் கொள்
                                              ஐவிரல் அடங்க மறு
                                              ஒலி பரப்பு
                                              ஓங்கி உலகள ...."

                                               சபலப் படுத்தாதே!
                                               சிறகுகள் வேண்டாம்
                                               சிக்கனமாய் கூறுகிறேன்
                                               பறப்பதில் எனக்கு ஆசை இல்லை
                                               சிறகுகள் என்னை  சிந்திக்க விடாது

                                               வானில் திரிந்தாலும்
                                               இரை தேட பூமியில்
                                               இறங்கித்தானே ஆக வேண்டும்
                                               களைப்பாற பூமி மரங்கள் தானே
                                               கை கொடுக்கும்?
                                               புழுதி ஆயினும்
                                               எனக்கு மண்தான் பிடிக்கும்
                                               மண்ணுக்கும்  என்னை பிடிக்கும்
                                               என் மண்ணின்
                                               ஒவ்வொரு அங்குலத்திலும்
                                               கால்தடம் காண்பேன்
                                               அவை தடங்களல்ல
                                               எனது அடையாளங்கள் ;
                                               எதிர்கால ஆவணங்கள்
                                               
                                                இன்னமும் ஒன்று சொல்வேன்
                                                மண்ணில் இருந்து விழுந்தால்
                                                மீண்டுஎழுந்து
                                                பின்புற மண் தட்டி
                                                மறுபடியும்  நடப்பேன்
                                                 விண்ணில் இருந்து விழுந்தால்.....

                                                 சிறகுகள் தேவையில்லை
                                                 சீக்கிரம் போய் விடு தேவதையே!
                                                 வேலை இருக்கிறது

*********************

21 கருத்துகள்:

 1. மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை...
  மனிதன் மீது மண்ணுக்கு ஆசை...
  மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது...
  இதை மனம்தான் உணர மறுக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே தங்களை வலைச்சரத்தில் கோர்த்து இருக்கிறேன் வருக

   நீக்கு
 2. நிகழ்ச்சி கற்பனைதான்[தேவதை வரம் தருதல்] என்றாலும், “கவைக்குதவாத வீண் கனவுகள் தேவையில்லை; படைப்பு நியதிகளை மீறாமலே சாதனைகள் படைக்கலாம்” எனப் பகரும் தரமான கவிதை.

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான தன்னம்பிக்கை கவிதை! வரிகள் அருமை!

  பதிலளிநீக்கு
 4. அருமை. நடுவே அகர வரிசையிலும் வரிகள்

  பதிலளிநீக்கு
 5. இதுவரை சிறகுகள் தேவை என நினைத்திருந்தேன். பறக்க ஆசையாக இருந்தது. தங்கள் கவிதையைப் படித்தபின் சிறகின் சிக்கல் தெரிந்தது.

  பதிலளிநீக்கு
 6. புழுதி ஆயினும்
  எனக்கு மண்தான் பிடிக்கும்
  மண்ணுக்கும் என்னை பிடிக்கும்
  என் மண்ணின்
  ஒவ்வொரு அங்குலத்திலும்
  கால்தடம் காண்பேன்
  அவை தடங்களல்ல
  எனது அடையாளங்கள் ;
  எதிர்கால ஆவணங்கள்

  நயமான வரிகள்..

  பதிலளிநீக்கு
 7. மண்ணில் கால் இருக்கும்போது வானில் பறந்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் சிறகுகள் வேண்டாம் எனும் உங்கள் திண்மை அட்டகாசம்!! அடுக்கி இருக்கும் காரணங்கள் அட்டகாச தோரணங்கள்!! சிலிர்க்கிறது அண்ணா!

  பதிலளிநீக்கு
 8. மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்
  *** வானில் திரிந்தாலும்
  இரை தேட பூமியில்
  இறங்கித்தானே ஆக வேண்டும்
  களைப்பாற பூமி மரங்கள் தானே
  கை கொடுக்கும்?
  புழுதி ஆயினும்
  எனக்கு மண்தான் பிடிக்கும்
  மண்ணுக்கும் என்னை பிடிக்கும்
  என் மண்ணின்
  ஒவ்வொரு அங்குலத்திலும்
  கால்தடம் காண்பேன்
  அவை தடங்களல்ல
  எனது அடையாளங்கள் ;
  எதிர்கால ஆவணங்கள்*** குறிபெடுத்துகொள்ளவேண்டிய கவிதை!! அருமை அண்ணா!

  பதிலளிநீக்கு
 9. சிறகுகள் மறுத்தது உங்களுக்கு சிறகுகள் தந்திருக்கிறது ...

  பதிலளிநீக்கு
 10. முரளிக்கு மண்ணாசை வந்துவிட்டது! கருத்துள்ள கவிதை! நன்று!

  பதிலளிநீக்கு
 11. அற்புதமான கவிதை
  பாதத்திற்கு அதிகம் பலம் கொடு
  எனக்குச் சிறகுகள் தேவையில்லை என
  இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ
  என நினைத்தேன்
  ஏனெனில் தவத்திற்கான காரணம் ஏதேனும்
  வேண்டுமல்லவா ?
  மனம் கவர்ந்த கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொன்ன வரிகள் அருமை. என்ன இருந்தாலும் தாங்கள் அனுபவக் கவிஞர் அல்லவா.அது எனக்கு தோன்றவில்லை. இது போன்ற கவிதைகளுக்கு தூண்டுகோலாக இருந்தது தங்கள் கவிதைகளே. அவசரமாக எழுதிய கவிதை இதை இன்னும் கொஞ்சம் மாற்றி அமைத்து அடுத்த் ஆண்டு வெளியிட எண்ணம் உண்டு

   நீக்கு
 12. சிறகுகள் தேவையில்லை
  சீக்கிரம் போய் விடு தேவதையே!
  ஆம் எம்மால் எழுந்து நடக்க முடியும்.
  வேதா. இலங்காதிலகம்:

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895