பத்து நாட்களுக்கு முன்னதாக நடந்த சோக நிகழ்வுகளில் ஒன்று இளம் ஆஸ்திரேலிய கிரிக்கட் வீரர் பிலிப் ஹ்யூசின் மரணம். உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிரணி வீரர் வீசிய பவுன்சர் பந்து விக்கெட்டை பறித்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். உயிரை அல்லவா பறித்தது. பந்து அசுர வேகத்தில் தலையில் தாக்கியதில் மயங்கி சரிந்தார் ஹ்யூஸ். அடிபட்ட வேகத்தில் நரம்புகள் சில துண்டிக்கப் பட்டதால் கோமா நிலையை அடைந்தார் ஹ்யூஸ். தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பிழைக்க முடியவில்லை. விக்கெட்டை வீழ்த்தாத கிரிக்கெட் பந்து உயிரை வீழ்த்தி விட்டது. எவ்வளவுதான் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டாலும் காயங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. .ஏற்கனவே ராமன் லம்பா என்ற கிரிக்கெட் வீரர் இதே போல் பந்து தாக்கி மரணம் அடைந்தார்.அவர் பீல்ட் செய்து கொண்டிருந்தபோது அந்த துயர சம்பவம் நடந்தது இன்னும் சிலருக்கும் இது போன்றவிபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
பெரும்பாலும் விபத்துகள் உள்ளூர் போட்டிகளில்தான் அதிகமாக நடக்கின்றன கிரிக்கெட் முரட்டுத் தனமான விளையாட்டு அல்ல என்று கருதப்படுகிறது. சோம்பேறிகளின் விளையாட்டு என்று கூறப்பட்டாலும் தற்போதைய கிரிக்கெட் வியபாரத்தில் களத்தில் ஆக்ரோஷம் திணிக்கப்பட்டுள்ளது கவலைக்குரியது.
இந்தப் பதிவில் நான் சொல்லப்போவது எனது அனுபவம் பற்றியே
பிலிப் ஹ்யூசின் மரணம் எனக்கு என் பள்ளி வயது கிரிக்கெட் விபத்தை நினைவுபடுத்தி விட்டது. அப்போது அதை நான் மிக சாதாரணமாகவே எடுத்துக்க் கொண்டேன். அப்போதெல்லாம் சென்னையின் புறநகர்ப் பகுதியான மடிப்பாக்கத்தில் காலி இடங்கள் அதிகமாக இருக்கும் அவையெல்லாம் எங்களுக்கு சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானங்கள். அடிக்கடி மைதனங்கள் மாறிக் கொண்டே இருக்கும். காரணம் அந்த இடங்களில் புதிதாக வீடுகள் முளைத்துக் கொண்டிருக்கும்.
ரப்பர் பந்தில் விளையாடுவது கௌரவக் குறைவு என்று கருதியதால் கார்க் பாலில்தான் விளையாட ஆரம்பித்தோம். எங்கள் அணியின் ஒபனிங் பேட்ஸ்மேன் நான்தான். ( ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூதானே சர்க்கரை?) கல் போன்று இருக்கும் கார்க்பால் வேகமாக வீசப் படும்போது கை கால்களில் அதிகமாக அடிபடும். க்ளவுஸ், பேட் அப்டமேன் கார்டு பற்றி எல்லாம் பற்றியெல்லாம் நினைத்துக் கூடப் பாரத்திதில்லை. சில சமயங்களில் விரல்கள் வீங்கிக் கொள்ளும்.நகங்கள் பிய்ந்து போகும். முட்டி பெயர்ந்து போகும். இருந்தாலும் ஆடிக் கொண்டேதான் இருப்போம். படக்கூடாத இடத்தில் பட்டால் என்னாவது என்ற கவலை துளியும் இல்லை. நான் முதல் பந்தில் தொடங்கி நீண்ட நேரம் விளையாடுவேன். எல்.பி.டபிள்யூ இல்லை என்பதால் விக்கெட் விழாமல் இருக்க காலில் வாங்கிக் கொள்ளக் கூட தயங்க மாட்டேன். எத்தனை காயங்கள்? அவை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை .
என்னதான் கார்க் பாலில் ஆடினாலும் கிரிக்கெட் பாலில் விளையாட வேண்டும் என்ற ஆசை உடனே நிறைவேறவில்லை. பொருளாதார வசதியும் மேம்பட பிறகு கார்க் பாலில் இருந்து கிரிக்கெட் பாலுக்கு மாறினோம். நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு புதிய கிரிக்கெட் டீம் உருவாக்கினோம்.ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு முதன் முதலாக பேட், Pad, Glouse வாங்கினோம். எங்கள் கிரிக்கெட் டீமின் பெயர் வித்தியாசமானது. ஆம் அக்னிபுத்ரா கிரிக்கெட் க்ளப் ( எங்கேயோ கேள்விப் பட்ட மாதிரி இருக்கிறதா?). இதில் பாதி பேர்தான் கிரிக்கெட் ஆடத் தெரிந்தவர்கள். மீதிப்பேர் சும்மா பதினோரு கணக்குக் காகத்தான். இவர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கும் அளவே இல்லை. சுவாரசியத்திற்கும் பஞ்சம் இல்லை. சென்னை 28 படத்தில் வரும் டீம் போலத்தான் அக்னிபுத்ராவும்.
பாதுகாப்பு என்றாலும் பழக்கம் இல்லாததால் கிளவுசைத் தவிர பேட் கட்டிகொள்வது, கார்டு வைத்ததுக் கொண்டு ஆடுவது கஷ்டமாக இருந்தது. பெரும்பாலும் அவற்றை பயிற்சியின்போது (சின்சியாரான முறையான பயிற்சி என்று நினைத்து விடக் கூடாது) தவிர்த்து விடுவோம். மேட்சுகளின்போது மட்டும் அவற்றை பயன்படுத்துவோம்.
கிரிக்கெட் பால் வாங்கி விட்டோமே தவிர ப்ராக்டீஸ் செய்வதற்கு கிர்க்கெட் பால் கட்டுப்படியாக வில்லை. எங்கள் மைதானங்கள் முன்பு விளைநிலங்களாக இருந்தவை எனவே ஆங்காங்கு மேடு பள்ளங்களும், வேலிகாத்தான் செடிகளும் நிறைந்து கரடு முரடாகவே இருக்கும். பிட்ச் இருக்கும் இடம் மட்டும் ஒரளவிற்கு சமப் படுத்தி வைத்திருப்போம். பேட்ஸ்மேன் அடிக்கும் பந்துகளை தடுப்பது என்பது சாதரணமானதல்ல. மேடு பள்ளங்களில் பட்டு திடீரென்று எகிறி நம்மை ஏமாற்றி விட்டு தாண்டிச் சென்று விடும். காயங்கள் ஏற்படுத்தும். வெறும் தரையில் விளையாடும்போது கிரிக்கெட் பந்து முப்பது ஓவர்களுக்குள் பல்லிளித்து விடும். பந்தின் ஷைனிங் மறைந்து சொரசொரப்பாக ஆகிவடும். தையல்கள் பிரிந்து விடும். முட்டை வடிவமாக மாறிவிடும். எவ்வளவு வேகமாக பந்து வீசினாலும் , அடித்தாலும் மெதுவாகவே செல்லும். அதனால் மேட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தோம்.
டீமின் பணக்கார நண்பன் ஒருவன் தன் வீட்டுக்குத் தெரியாமல் மேட் வாங்கிக் கொடுத்தான். மேட் என்பது கார்பெட் போல நீளமாக இருக்கும். இரண்டு விக்கெட்டுகளுக்கு இடையில் மட்டும் விரிக்கப்படும். மேட்டில் இரண்டு வகை உண்டு. புல் மேட், ஹாஃப் மேட். பாதியளவுக்கு இருக்கும் . ஹாஃப் மேட்தான் எங்களிடம் இருந்து. மேட்டை சரியாக இழுத்து பிடித்து தளர்வின்றி ஆணி வைத்து அடிப்போம் . அது ஒரு கலை. மேட்டில் ஆடினால் கிரிக்கெட் பந்து கொஞ்சம் அதிகமாக உழைக்கும் . சற்று சமதன்மையற்ற பிட்சில் இதன் பயன் அதிகம்.
கட்டாந்தரையில் விளையாடுவதை விட மேட்டில் விளையாடுவது கொஞ்சம் கடினம். சாதாரணமாக மெதுவாக பந்து வீசினாலும் மேட்டில் பட்டதும் பந்தின் வேகம் அதிகமாகும். தரையில் ஆடும்போது இடுப்பளவுக்கு மேல் பந்து எழும்பாது. ஆனால் மேட்டில் பந்து பெரும்பாலும் மார்பளவுக்குத் தான் வரும். பவுன்சர்களும் நிறைய வீசப்படும் .ஸ்விங் அதிகமாக இருக்கும்.
TNCA போட்டிகளில் First Division போட்டிகள் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் தவிர இதர போட்டிகளில் மேட் பயன்படுத்தியே ஆடப்படுகிறது.
எங்கள் பகுதியில் உள்ள டீம்களுடன் மேட்ச் போடுவது வழக்கம்.
அப்படித்தான் டீம் ஒன்றுடன் 16 ஓவர் கொண்ட மேட்ச் ஒன்றை ஆடிக் கொண்டிருந்தோம். எங்கள் மேட்டைத் தான் பயன்படுத்தினோம்.அந்தந்த டீம் கொண்டு வரும் புதிய பந்தையே வீச வேண்டும். அவர்கள் முதலில் பேட் செய்து நூறு ரன்களை கடந்து விட்டார்கள். வெற்றி இலக்கு ஒரு ஓவருக்கு ஆறு ரன்களுக்கு மேல் இருந்தது .
அடுத்து நாங்கள் பேட் செய்ய களத்தில் இறங்கினோம். நின்னு ஆடனும் மச்சி, விக்கெட் விழாம பாத்துக்கணும் என்று ஆலோசனைகள் வழங்க வழக்கம் போல நானும் இடது கை பேட்ஸ் மேன் ஆன நண்பனும் நானும் இன்னிங்க்ஸ் துவக்கினோம். நண்பன் அதிரடியாக ஆடக் கூடியவன். நீண்ட தூரம் ஓடி வந்து வீசப்பட்ட முதல் பந்தை நண்பன் எதிர் கொள்ள. அந்தப் பந்து பைஸ் சென்றதால் மூன்று ரன்கள் கிடைக்க நான் பேட் செய்ய தொடங்கினேன். புல் டாஸ் பந்து அப்படியே ஸ்கொயர் லெக் திசையில் திருப்பி விட 4 ரன்கள் கிடைத்தது. நான் அடித்து ஆடுபவன் அல்லை.. இலகுவான பந்துகள் வரும் வரை காத்திருப்பது என்வழக்கம். பிளேஸ் செய்து ரன் எடுப்பது என் பாணி.
அடுத்த பந்து தலைக்குமேலே நேராக வீசப்பட எங்கயோ சென்றதால் கூடுதல் ரன்கள் கிடைத்தது . முதல் ஓவரில் மேட்டில் ஒரு பந்து கூட படவில்லை. அடுத்தடுத்த ஓவர்களில் அவர்கள் செய்த தவறுகளாலும் சம தன்மையற்ற அவுட் பீல்ட் காரணமாகவும் ஏராளமான ரன்கள் கிடைத்கன. 7 ஓவர்களுக்குள் வெற்றி தேவைப்படும் ரன்களில் பாதிக்கும் மேல் கிடைத்து விட்டது என்றாலும் நண்பன் திடீரென தன் விக்கெட்டை பறி கொடுத்தான். 16 ஓவர் வரை நின்றாலே வெற்றி கிடைத்து விடும் என்ற நிலையில் அடுத்து வந்த பேட்ஸ்மனும் அவுட் ஆக எதிரணியினர் எகிறிக் குதித்தனர். நான்கு விக்கெட்டுகள் இழந்து விட்டன. கொஞ்சம் நிலைத்து ஆடவேண்டிய சூழலில்தான் நான் எதிர்பாராத ஒன்று நடந்தது.
பொதுவாக நம் நாட்டில் டர்பில் விளையாடும்போது பந்து அதிகம் எழும்பாது. உருண்டு சென்று கூட விக்கெட்டை வீழ்த்திவிடும். அதனால் நான் குனிந்து கவனமாக ஆட முயற்சி செய்வேன். எனது விக்கெட்டை வீழ்த்திவிட வேண்டும் என்று குறியாக இருந்தனர். பல்வேறு முறைகளை கையாண்டு பார்த்தனர். எவ்வளவு வேகமாக வீசினாலும் முன் சென்று தடுத்து ஆடினேன். ஆக்ரோஷத்துடன் வீசப்பட்ட அடுத்த பந்து வெளியே போய் விடும் என்றுதான் நினைத்தேன். ஆனால் எதிர்பாராவிதமாக மேட்டில் பட்ட வந்து சீறிக் கொண்டு என்னைநோக்கி திரும்பியது சட்டென்று டிபென்ஸ் செய்ய நான் முயல பேட்டின் கைப்பிடியின் முனையில் பட்டு வேகமாக தெறித்து இடது புருவத்தின் அருகில் நெற்றியில் பலமாக தாக்கியது. டப் என்று ஏதோ உடையும் சத்தம் போல் கேட்க, அனைவரும் பயந்து என்னை நோக்கி ஓடி வந்தனர். அடிபட்டதை உணர்ந்தேனே சட்டென்று தவிர ஒன்றும் புரியவில்லை . ஹாஃப் க்ளோசில் நின்று கொண்டிருந்த பீல்டர் ரத்தம் ரத்தம் என்று கத்த அப்போதுதான் ரத்தம் சளசள வென்று சொட்டிக் கொண்டிருப்பதை கவனித்தேன். எனது வெள்ளை சட்டை ரத்தத்தில் நனைந்து நிறம் மாறிக் கொண்டிருந்தது. நண்பர்கள் ஓடிவந்தனர். முகம் முழுவதும் ரத்தம் பரவி இருந்ததால் எங்கு அடிபட்டது என்பதை அறியாமல் முகத்தில் கர்சீப் வைத்து அழுத்தினர். கண்ணில அடிபட்டுடிச்சி போல இருக்குடா என்று ஒருவன் சொன்னதும் அதுவரை அவ்வளவு சீரியசாக உணராத எனக்கு லேசாக அச்சம் ஏற்படத்தொடங்கியது . இடது கண்ணை மூடிக் கொண்டேன். இரு நண்பர்கள் மற்றும் என்னை சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 24 மணிநேர மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முகத்தில் ரத்தத்தைப் பார்த்ததும் அடி தடி கேசாக இருக்குமோ என்று பயந்து சிகிச்சை செய்ய சிறிது தயக்கம் காட்டினர், பின்னர் எடுத்து சொன்னதும் டாக்டர் , என் முகத்தை துடைத்து காயம் பட்டிருக்கும் இடத்தை பார்த்து அதிர்ந்தார். ஒன்றரை இன்ச் நீளத்திற்கு பிளந்து கொண்டு ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது என்றும் மூன்றாவது கண் போல உள்ளது தெரிவித்தார். உடனடியாக தையல் போடவேண்டும் என்றார். ஒவ்வொரு தையலுக்கும் இவ்வளவு ருபாய் என்று சொல்லி விட்டு ஏழு தையல் போட்டுவிட்டு தலையை சுற்றி ஒரு கட்டு போட்டுவிட்டார். நண்பர்கள் தங்கள் கையில் இருந்த பணத்தை சிகிச்சைக்கு செலவழித்தனர். நான் மயங்காமல் இருந்தது கண்டு ஆச்சர்யம் தெரிவித்தார் டாக்டர்
அதுவரை ஆட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. சிகிச்சை பற்றிய தகவல் தெரிவிக்க ஆபத்து ஒன்றுமில்லை என்றதும் ஆட்டத்தை தொடர்ந்தனர். என்னை வீட்டில் விட்டுவிடுவதாக சொன்னார்கள். அப்போது வீட்டில் யாரும் இல்லை ஊருக்கு சென்றிருந்தனர் என்பதால் நான் வீட்டுக்கு போக விரும்பவில்லை. மைதானத்துக்கு சென்று மரத்தடியில் உட்கார்ந்து மேட்ச்சை பார்த்துக் கொண்டிருந்தேன். வெற்றி பெற 4 ரன்களே தேவை என்ற நிலையில் எட்டாவது விக்கெட் வீழ்ந்தது. நான் ஏற்கனவே ஹர்ட் ரிடையர் ஆகி இருந்ததால் 9 வது விக்கெட் வீழ்த்தி விட்டால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். அந்த விக்கெட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தவர்கள் ஒப்புக்கு சப்பான் ப்ளேயர்கள். யாரவது அவுட் ஆகி விட்டால் நான் போய் ஆடுகிறேன் என்றேன் கேப்டனிடம். வாயில் வந்தபடி எல்லாம் திட்டினான். அமைதியானேன். அந்த வேலை ஏதுமின்றி ஒய்டும் நோ பாலுமாக அவர்களே ரன் கொடுக்க வெற்றி பெற்றோம்.
வீட்டில் உள்ள அனைவரும் ஊருக்கு சென்றிருந்ததால் காயம்பட்ட தகவல் தெரியாது. அக்கம் பக்கத்தவரிடமும் சொல்ல வேண்டாம் என்று நண்பர்களிடம் கேட்டுக் கொண்டேன், அடுத்த இரண்டு நாட்கள் வலியும் காய்ச்சலும் இருந்தது. எப்படியோ நானே சமாளித்துக் கொண்டேன். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கேட்டபோது மாடிப்படியில் இருந்து இறங்கும்போது ஸ்லிப் ஆகி விட்டதால் கைப்பிடி சுவற்றின் கூர் முனை குத்தி விட்டது. லேசான காயம்தான் என்று சொல்லி இருந்தேன். அதையே அனைவரும் வந்தபிறகும் சொன்னேன். தையலைப் பார்த்து பயந்து போனாலும் நான் சொன்னதை அவர்கள் நம்பினார்கள் (நம்பியதாக நான் நினைத்துக் கொண்டேன்) இன்று வரை வீட்டில் யாருக்கும் தெரியாது .
அதனால் உண்டான தழும்பு என் நெற்றிப் பகுதியில் இன்னமும் மறையாமல் உள்ளது . மனதிலோ உடலிலோ உண்டாகும் காயங்களின் தழும்புகள் தானே வாழ்க்கையின் அடையாளங்கள்?
பிலிப் ஹ்யூசுக்கு நேர்ந்த துயரம் இதனை நினைவு படுத்தி விட்டது.இப்போது சிந்தித்துப் பார்த்தால் எவ்வளவு அசட்டுத் தனமாக நடந்து கொண்டிருக்கிறோம் என்று புரிகிறது. கொஞ்சம் கூட அச்சம் இல்லாமல் எப்படி இருந்தோம் என்பதை நினைத்தால் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. சில காயங்களின் விளைவுகள் சில மாதங்கள் கழித்துக் கூட தெரிவதுண்டு. அதிர்ஷ்ட வசமாக அப்படி ஏதும் நடக்க வில்லை . என்றாலும் அப்போதே பெற்றோரிடம் சொல்லி இருக்க வேண்டும். அப்படி சொல்லாதது இன்று வரை உறுத்திக் கொண்டிருக்கிறது. இனிமேலும் சொல்ல முடியாது . இருவரும் இப்போது இல்லை.
பிலிப் ஹ்யூசுக்கு நேர்ந்த துயரம் இதனை நினைவு படுத்தி விட்டது.இப்போது சிந்தித்துப் பார்த்தால் எவ்வளவு அசட்டுத் தனமாக நடந்து கொண்டிருக்கிறோம் என்று புரிகிறது. கொஞ்சம் கூட அச்சம் இல்லாமல் எப்படி இருந்தோம் என்பதை நினைத்தால் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. சில காயங்களின் விளைவுகள் சில மாதங்கள் கழித்துக் கூட தெரிவதுண்டு. அதிர்ஷ்ட வசமாக அப்படி ஏதும் நடக்க வில்லை . என்றாலும் அப்போதே பெற்றோரிடம் சொல்லி இருக்க வேண்டும். அப்படி சொல்லாதது இன்று வரை உறுத்திக் கொண்டிருக்கிறது. இனிமேலும் சொல்ல முடியாது . இருவரும் இப்போது இல்லை.
இப்போதெல்லாம் டென்னிஸ் பந்தில்தான் விளையாடுகிறார்கள் அதனால் அபாயம் அவ்வளவாக இல்லை. விளையாட்டை ஊக்குவிக்கும் பெற்றோர் எல்லா உபகரணங்களும் வாங்கித் தந்து விடுவார்கள். ஆனால் விளையாடவே அனுப்பாத பெற்றோரும் உண்டு. எவ்வளவு நேரம் எந்த விளையாட்டு விளையாடினாலும் கண்டு கொள்ளாதவர்களும் உண்டு. விளையாட அனுமதிக்கும் பெற்றோர் சிலருக்கு என்ன விளையாட்டு பையன் விளையாடுகிறான் என்பது கூட தெரியாது. குழந்தைகளை சுதந்திரமாக விளையாட விடுவதில் தவறில்லை. ஆனாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் அக்கறை செலுத்தி கவனத்துடன் விளையாடும்படி சொல்லவேண்டும்.குறிப்பாக அடி ஏதும் பட்டாலும் மறைக்காமல் வீட்டில் சொல்லிவிட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
சில விளையாட்டுக்களைப் போல கிரிக்கெட் ஆபத்தான விளையாட்டு அல்ல என்றாலும் அவ்வப்போது விபத்துகள் நடப்பதால் எச்சரிக்கையுடன் விளையாடுவது நல்லது
சில விளையாட்டுக்களைப் போல கிரிக்கெட் ஆபத்தான விளையாட்டு அல்ல என்றாலும் அவ்வப்போது விபத்துகள் நடப்பதால் எச்சரிக்கையுடன் விளையாடுவது நல்லது
**************************************************************************
எச்சரிக்கை:( அக்னிபுத்ரா கிரிக்கெட் டீமின் அலம்பல்கள் என்று ஒரு சிறிய தொடர் பதிவு எழுத ஆசை உண்டு. )
*****************************************************************************
கிரிக்கட் பற்றிய பிற பதிவுகள்
என்ன உலகப் புகழ் பெற வேண்டிய கிரிக்கெட்வீரர் இங்கே தன் திறமையை மறைத்து பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறாரா... அய்யோகோ ....தமிழகம் சிறந்த கிரிக்கெட் வீரரை கவனிக்காமல் விட்டு விட்டதே
பதிலளிநீக்குமுரளி உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமையுள்ளது. உங்களை கார்க் பால் நெற்றியில் தாக்கி நிறைய தையல் போட்டும் மீண்டும் நீங்கள் மைதனாத்திற்கு வந்த மாதிரிதான் நானும் பூரிக்கட்டையால் அடிபட்டாலும் மீண்டும் மைதானதிற்கு அதுதாங்க வீட்டிற்கு தைரியமாக வந்துவிடுவேன்
பதிலளிநீக்குஇதுக்கு கொஞ்சம் தைரியம் அதிகமாத் தான் வேணும்.
நீக்குஅடிக்கிற கைதான் அடிக்கும் சாரி அணைக்கும் என்ற உண்மையை தெரிஞ்சவராச்ச்சே மதுரைத் தமிழன்
முரளி நீங்க ரொம்ப அதிர்ஷடக்கார் உங்களுக்கு அடிபட்டால் நாலு பேர் ஹாஸ்பிடலுக்கு கூட்டி போய் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து கூட்டி வருகிறார்கள் ஆனால் என்னை பாருங்கள் அடி பட்டால் நானேதான் ஹாஸ்பிடலுக்கு போய் சிகிச்சை பெற்று திரும்ப வர வேண்டி இருக்கிறது. இதுல வேற நம் நண்பர்கள் பூரிக்கட்டை தீர்ந்து விட்டால் சொல்லுங்க மாமி என்ன செலவானாலும் பரவாயில்லை ஒரு லாரி நிறைய வாங்கி அமெரிக்காவிற்கே அனுப்புகிறோம் என்று சொல்லுகிறார்கள் ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பதிலளிநீக்குஇப்போது இந்தக் கவலை எல்லாம் தேவையில்லை . எங்கே இப்போது மைதானம் சென்று விளையாடுகிறார்கள். எல்லா ஆட்டங்களையும் மொபைலிலேயே விளையாடிக் களைத்து விடுகிறார்கள் பிள்ளைகள்.
பதிலளிநீக்குஉங்களின் அனுபவங்கள் நம் பருவத்தின் எல்லோருக்குமானவை.
சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்
விளையாடும் பிள்ளைகள் மீது எப்போதும் ஒரு கண் இருக்கவேண்டிய
பதிலளிநீக்குஅவசியத்தை வலியுறுத்தும் பகிர்வுகள்.
பயங்கர அனுபவம்தான். ஆனால் சிவகுமார் சொல்வதைத்தான் நானும் நினைத்தேன்.
பதிலளிநீக்குஅவுட்டோர் கேம்ஸெல்லாம் எங்கே விளையாடுகிறார்கள் இப்போது?
பசங்களுக்கு இது மாதிரியான வீரத் தழும்புகள் இப்போ கிடைகிறது இல்லை அண்ணா! பாவம் அவங்க எல்லா கேம் மையும் மொபைல் லதான் விளயாண்டுறாங்க:((
பதிலளிநீக்குஇப்போதுதான் மாணவர்கள் தொலைக் காட்சித் தொடர்களில் மூழ்கிப் போகிறார்களே ஐயா.
பதிலளிநீக்குஅவர்கள் சற்று விளையாட நினைத்தாலும், ஆசிரியர்கள் விளையாட விடுவதில்லை.
நான் சிறுவனாக இருந்தபொழுது, ஒவ்வொரு தெருவிலும் ஒரு பெருங் கூட்டம் இருக்கும், எங்கள் தெருவிற்கும், அடுத்த தெருவிற்கும் மேட்ச் நடக்கும், கிரிக்கெட், கிட்டிப்புல், பளிங்கு என அத்தனை போட்டிகளும் நடக்கும்.
பதிலளிநீக்குஆனால் இப்பொழுது தெருக்கள் வெறிச்சோடி அல்லவா கிடக்கின்றன.
பள்ளி, பள்ளி விட்டால் வீடு என
மாணவர்கள் முடங்கி விட்டார்களே
தம 1
எந்த ஒரு விளையாட்டிலும் சற்று கவனம் இருப்பது நல்லது. தங்களது இளமைக்கால நிகழ்வுகள் எனது இளமைக்காலத்தை நினைவூட்டின. வீட்டுக்குத் தெரியாமல் நண்பர்களுடன் வீட்டு கொல்லைப்புறத்தில் விளையாடும்போது தென்னை மட்டை தலையில் விழுந்து இன்னும் அந்த தழும்பு உள்ளது. உங்களது தழும்பைப் பற்றிப் படித்ததும் என் தலையில் உள்ள தழும்பை தடவிப் பார்த்துக்கொண்டேன்.
பதிலளிநீக்குநெற்றிப் பகுதியில் இருக்கும் தழும்பிற்கு இது தான் காரணமா...? வெற்றி பெற்றதால் அப்போது அந்த நேரம் வலி தெரிந்திருக்காது...
பதிலளிநீக்கு//இலகுவான பந்துகள் வரும் வரை காத்திருப்பது என்வழக்கம். // நீங்க இப்ப கூட அப்படித்தான் காட்சியளிக்குறீங்க :-)
பதிலளிநீக்குரத்த எபிசோட் கொஞ்சம் டரியலாத்தான் இருந்தது...ஆனாலும் டீமுக்கு விளையாடுவேன்னு சொன்ன உங்க மன தைரியம் :-)
அக்னிபுத்ரா பேரே நல்லா இருக்கு
எனக்கு இதில் ஆர்வமில்லை!
பதிலளிநீக்குசாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்கள், புகையிலை, சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகள், மருத்துவர்களின் கவனக்குறைவால் ஏற்படும் சாவுகள், கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை, போஷாக்கு குறைவால் குழந்தைகளின் உயிரிழப்பு, நாட்டின் எல்லையைக் காக்க இராணுவ வீரர்களின் தியாகம் என்று ஒவ்வொன்றையும் இந்தியாவில் கணக்கெடுத்தால் மரணங்கள் சில பல ஆயிரங்களைத் தாண்டும். கிரிக்கெட் ஆடியதால் செத்தவன் என்று பார்த்தால் வரலாற்றிலேயே ஒருத்தனோ ரெண்டு பேரோ தான். ஆனால், அவர்களைப் போல சுகபோகங்களை அனுபவிப்பவர்கள் வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம். இவர்களுக்காக கவலைப் படவேண்டியதில்லை என்பது எனது கருத்து. வேண்டுமானால் ஒரு கிரிக்கெட் பேட் மேலே தொப்பியை கவிழ்த்து வைத்து விட்டு ஒருநாள் கழித்து எடுத்துவிடலாம்.
பதிலளிநீக்குரொம்ப தைரிய சாலியாத்தான் இருந்திருக்கீங்க! இதே போன்ற அனுபவம் எங்கள் கிரிக்கெட் டீமிலும் நடந்தது. அடிபட்டது எனக்கு இல்லை! இன்னொரு நண்பருக்கு! இதை நானும் பகிர நினைத்தேன். ஆனாலும் வேலைப்பளு காரணமாக எழுத முடியவில்லை!
பதிலளிநீக்குநாங்கள் கிரிக்கெட் ஆட fully equipped. பெங்களூருவில் எங்கள் டீமின் பெயர் விஜய் கிரிக்கெட்டர்ஸ். 3rd division லீகிலெல்லாம் ஆடி இருக்கிறோம்.வெகு நாட்களுக்குப் பின் விசாரித்ததில் எங்கள் டீமின் மெம்பர் ஒருவர் அரசியலில் புகுந்து மந்திரியாகி விட்டார் என்றும் தெரிந்தது. ஜீவ் ராஜ் ஆல்வா என்பது அவர் பெயர்.என்றும் நினைவு. உங்கள் பதிவு என் கிரிக்கெட் நினைவுகளை மீட்டு விட்டது.
பதிலளிநீக்குபதிவிற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஇனிய வாழ்த்து. முரளி.
வேதா. இலங்காதிலகம்.
செம துணிச்சல் தான் சார் ,....
பதிலளிநீக்குஉங்களுக்கானது மாதிரி பெருத்த காயம் இல்லை எனக்கு இருந்தாலும் வலது கரத்தின் நடுவிரல் நகம் பிய்ந்து தொங்கியது இன்று வலித்தது உங்கள் எழுத்தை வாசிக்கையில் ...
நினைவுகள்.......
பதிலளிநீக்குபலருக்கு அவர்களது கிரிக்கெட் நினைவுகளை மீட்டெடுத்தது உங்கள் பதிவு.
வெற்றி தந்த விழுப்புண்ணை ரசித்தேன் :)
பதிலளிநீக்குத ம 8
பயங்கரமான அனுபவம் நண்பரே! உங்களுக்கு! நல்ல தைரியமும் கூட! நல்ல ம(அ)லரும் நினைவுகள்!!
பதிலளிநீக்குசிறந்த பதிவு
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
ஒரு நாள் இதை நான் உங்கள் அனுமதியோடு வேறுமாதிரி எழுத விரும்புகிறேன்...
பதிலளிநீக்குநன்றி
த ம ஒன்பது