என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 5 செப்டம்பர், 2013

உண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ?

 
கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும்   ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.   . உங்களுக்கு கற்பித்த  ஆசிரியர்களை நினைவு கூற விரும்புவீர்களாயின் உங்கள் பொன்னான நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் உங்கள் இதை படிக்க செலவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் ஆசிரியராக பணி செய்தபோது ஒரு ஆசிரியர் தின விழாவில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை 

 ஒரு உண்மையான ஆசிரியர் தன் பணியை இப்படியும் நேசிப்பாரோ? அவர் வாய் மொழியாகவே கேட்போம்
(சிலர் இக்கவிதையை என் பெயரைக் குறிப்பிடாமல் காப்பி அடித்து தங்கள் சொந்தக் கவிதைபோல வெளியிட்டுள்ளனர். இந்தக் கவிதையின் சில வரிகளை  சிலர் தன் கட்டுரையில், சொற்பொழிவில் மேற்கோளாக காட்டி இருப்பதை அறிகிறேன்.அவ்வாறு பயன்படுத்துவோர் எந்த விதத்தில் பயன்படுத்தினாலும் எழுதிய என்பெயரையும் குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன். )

இந்த வீடியோவிலும் கவிதை கேட்கலாம் .

ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை  -      *****டிஎன்.முரளிதரன் ******

ஆயிரம் ஆண்டுகள்  ஆயிரம் பிறவிகள் 
 பூமியில் பிறந்திட விரும்புகின்றேன்.
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை 
         ஏற்றிட விரும்புகிறேன் .

மூங்கில் காட்டில் புல்லாங்குழலை தேடும் வேலை இது
முழுதாய் பாறையில் சிற்பம் செதுக்கும் முக்கிய வேலை இது
மனிதம் வாழ அறிவைத் தந்திடும் மகத்துவ வேலை இது
புனிதர்பலரும் போற்றிச் சொன்ன புண்ணிய வேலை இது

அதனால் அடுத்த பிறவிகள் பலவும் எடுத்து வந்தாலும்
அத்தனை பிறப்பிலும் ஆசிரியராக இருந்திட விரும்புகின்றேன்.       1

சித்திரம் வரைந்து வண்ணம் தீட்டும் சீரிய பணியிதுவாம்
நித்திரை மறந்து நித்தியம் செய்ய  விரும்பும் பணியிதுவாம்
சொத்துக்கள் சேர்த்து வாழ நினைப்பவர் விரும்பாப்  பணியிதுவாம்
முத்துக்கள் தேடி ஆழ்கடல் நீரில்  மூழ்கிடும் அரிய பணியிதுவாம்

எத்தனை ஆண்டுகள் எத்தனை பிறவிகள் எடுத்து வந்தாலும்
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை ஏற்றிட விரும்புகின்றேன்.   2

ஐந்தும் மூன்றும் அடுக்காய்  இருந்தால் சமைப்பது கடினமல்ல
இருப்பதை வைத்து அறுசுவை உணவு படைப்பது சுலபமல்ல
படிப்பறிவில்லா பாமர மக்கள் கல்வியை பெற்றிடவும்
அடிப்படை கல்வி அனைவர்க்கும் என்ற நோக்கம் வென்றிடவும்

ஆசான் அதிகம் உழைத்திட வேண்டும் என்பதை உணர்கின்றேன்
அயரா உழைப்புடன் உறுதி கொண்டப்பணி தொடர்ந்திட   
                                                  விரும்புகின்றேன்

ஈன்ற குழந்தை 'அம்மா" என்றால் அன்னை மகிழ்ந்திடுவாள்
சான்றோனாகி  சரித்திரம் படைத்தால் தந்தையும் மகிழ்ந்திடுவார்
சான்றோன்  ஆனதன் காரணம் எந்தன் ஆசான் என்றுரைத்தால்
ஈன்றாள், தந்தை  இருவரை விடவும் ஆசான் மகிழ்ந்திடுவார்

அந்தப் பெருமை எனக்கும் கூட கிடைத்திட விரும்புகின்றேன்.
அடுத்த பிறப்பிலும் ஆசானாக இருந்திட விரும்புகின்றேன்.       4

ஆடை அழகாய் அமைவதில்தானே தைப்போர் திறனை அறிவதுண்டு
ஓடை நீரின் நிலத்தின் தன்மை நிலத்தால்தானே திரிவதுண்டு
கூடையில் உள்ள பூவின் வாசம் கூடைக்கும் கூட வருவதுண்டு
மேடையில்  உள்ளோர் புகழில் அவரவர் குருவுக்கும் கூட பங்கு உண்டு

எனக்கும்  அதுபோல்கொஞ்சம் பங்கு இருந்திட நினைக்கின்றேன்
அதனைப்  பெறவே ஆசான் பணியை நானும் விரும்புகின்றேன்  5

பழுத்த  பழங்கள் நிறைந்த  மரத்தை பறவைகள் தேடிவரும்
இனித்த கரும்பை கடித்து சுவைக்க எறும்புகள் ஓடிவரும்
படித்த ஞானம் நிறைந்த குருவை மாணவர் சூழ்ந்திடுவார்
நிலைத்த புகழை நிச்சயம் பெற்று நித்தியம் வாழ்ந்திடுவார்

அத்தகு  புகழும் சிறிதே எனக்கு கிடைத்திட வேண்டுகின்றேன்
இத்தரை மீதில் ஆசிரியர்பணியை அதனால் விரும்புகின்றேன். 6

தீயில் சுடாத தங்கம் என்றும் அணிகலன் ஆவதில்லை
அழுத்தித் துவைக்காத் துணிகள் என்றும் வெளுப்பும் அடைவதில்லை
ஆலையில் கரும்பைப் பிழிந்தெடுக்காமல் சர்க்கரை கிடைப்பதில்லை
                                                            - கல்விச்
சாலையில் மாணவர் பயிற்சி பெறாமல் சான்றோர் ஆவதில்லை

சான்றோன் ஆக்கும் பணியில் நானும் சாதனை படைத்திடவே
ஆசான் பணியே அடுத்த பிறப்பிலும் செய்திட விரும்புகின்றேன்     7

ஆதியில்  வாழ்ந்த மனிதர்களிடத்தில் சாதிகள் இருந்ததில்லை
பாதியில் வந்து பாதகம் செய்தது இதுபோல் எதுவுமில்லை
சாதம் உண்டு சோம்பித் திரிந்தவர் செய்திட்ட பேதமன்றோ
பேதம் மறைந்திட கல்வியைத் தருவது ஆசான் திறனன்றோ

அந்தத் திறனை நானும் பெற்றிட மனதில் நினைக்கின்றேன்
அடுத்த பிறப்பிலும் ஆசான் பணியே தொடர்ந்திட விரும்புகின்றேன். 8

முன்னோர் வகுத்த நெறிமுறை அடுத்த தலைமுறை உணர்த்திடவும்
பின்னோர் அதனை மறந்துவிடாமல் போற்றிக் காத்திடவும்
வன்முறை என்பதை அறியாத் தலைமுறை உருவாக்கி வைத்திடவும்
நன்முறை மட்டும் நாடும் இளைஞர்கள் நிறைந்து பெருகிடவும்

என்னாலியன்ற பணியினைச் செய்து என்றும் உழைத்திடுவேன்.
அடுத்தபிறவி எடுத்து வந்தாவது என் பணி முடித்திடுவேன்.       9.

சேவை  செய்து குருவுடன் வசித்து கற்றது  பழைய கதையாகும்
தேவை அறிந்து கற்றலில் செயல்வழி புகுத்திடல் புதிய முறையாகும்
மாற்றம் என்பது மானிட இனத்தின் மாறா இயல்பாகும்
ஏற்றம் பெற்றிட இதனை உணர்வது ஆசான்  கடனாகும்

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட விரும்புகின்றேன்.
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியைப் போற்றிட விரும்புகின்றேன்.

என்னிடம் கற்றவர் என்னை மதித்திட மறந்து போனாலும்
ஏற்றிய ஏணியை எட்டி உதைத்து தள்ளிட நினைத்தாலும்
ஏழை ஆசான் என்றனை எண்ணி ஏளனம் செய்தாலும்
பேழையில் செல்வம் சேர்த்திட அறியா பேதை என்றாலும்

ஆவல்  கொண்டே ஆசான் பணியை அகத்தில் துதித்திடுவேன்.
அந்தப்  பணியே ஆயுள் முழுதும் செய்ய முனைந்திடுவேன்  11

சில  பேர்மட்டும் ஆசான் திறனை அறிந்து போற்றிடுவார்
சிலபேர்  சேர்ந்து ஆசான்களையே பலமாய் தூற்றிடுவார்
தூற்றல் போற்றல் இரண்டையும் சமமாய் தூர வைத்திடுவோம்
ஆற்றும் பணியில் ஆர்வம் கொண்டே அயராதுழைத்திடுவோம்

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட விரும்புகிறேன்
அத்தனை பிறப்பிலும் ஆசான்பணியை செய்திட விரும்புகின்றேன்.-   
                                  புகழ் எய்திட விரும்புகிறேன்.

இயற்றியவர் :டி.என்.முரளிதரன் 


31 கருத்துகள்:

  1. எத்தனை ஆண்டுகள் எத்தனை பிறவிகள் எடுத்து வந்தாலும்
    அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை ஏற்றிட விரும்புகின்றேன்.

    இனிய ஆசிரியர்தின வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக் கவிதை மிகவும் அருமை...

    இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. வரும் கருத்திடும் நண்பர்களுக்கு :

    தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான வரிகள்... எப்படி இவ்வளவு கோர்வையா மனசுல பதியறா மாதிரி எழுத வருது? வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! நல்லாசிரியர் விருது மாணவர்களாலும், பொது மக்களாலும் அடையாளம் சொல்ல பட்டு உரியவர்க்கு சிறப்பிக்க பட வேண்டும்! அதற்கேன் விண்ணப்பம்? விண்ணப்பமும், சிபாரிசும் விருதை சாதாரணமாக்கிவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. மாணவர்கள் முன்னர் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்த அளவுக்கு இப்போது கொடுப்பதில்லை. தெய்வத்துக்கு இணையாக கருதப் பட்ட நிலை போய் மிரட்ட ஆரம்பித்து விட்டனர். துரதிர்ஷ்டம்.........

    Happy Teachers day!!

    பதிலளிநீக்கு
  7. ஆசிரியர் தின வாழ்த்துகள். சிறப்பு பதிவு அருமை. இப்படி கோர்வையா எழுத எனக்கு எப்போதான் வரப்போகுதுன்னு தெரியலியே!!

    பதிலளிநீக்கு
  8. ஆசிரியர் தினக் கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் சிறப்பு! அருமை! ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. ஆசிரியர் தின வாழ்த்துக்கள். கவிதை மிகவும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    முரளி(அண்ணா)

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பதிவிட்ட பதிவு மிக அருமையாக உள்ளது
    ஆசிரியர் தின வாழ்த்துக்கள். பதிவு அருமை

    குறிப்பு- தீபாவளித் திருநாளை முன்னிட்டு மா பெரும் கவிதைப் போட்டி நடைபெற உள்ளது. தனபால் அண்ணா முன்பு அறிவித்து விட்டார் பதிவுப் பார்வைக்கு
    https://2008rupan.wordpress.com
    http://dindiguldhanabalan.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. முன்னோர் வகுத்த நெறிமுறை அடுத்த தலைமுறை உணர்த்திடவும்
    பின்னோர் அதனை மறந்துவிடாமல் போற்றிக் காத்திடவும்
    வன்முறை என்பதை அறியாத் தலைமுறை உருவாக்கி வைத்திடவும்
    நன்முறை மட்டும் நாடும் இளைஞர்கள் நிறைந்து பெருகிடவும்

    என்னாலியன்ற பணியினைச் செய்து என்றும் உழைத்திடுவேன்.
    அடுத்தபிறவி எடுத்து வந்தாவது என் பணி முடித்திடுவேன். //

    அருமையான காலத்துக்கு ஏற்ற கவிதை வரிகள்.நீங்கள் சொல்லியது போல் நன்முறை மட்டும் நாடும் இளைஞ்ர்கள் நிறைந்து பெருகட்டும்.
    உங்கள் சிறந்த ஆசிரியர் பணிக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. //எத்தனை ஆண்டுகள் எத்தனை பிறவிகள் எடுத்து வந்தாலும்
    அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை ஏற்றிட விரும்புகின்றேன்.//
    அருமையான வரிகள். வாழ்த்துக்கள்!

    இந்த வரிகளைப் படிக்கும்போது என்னை ஏணியில் ஏற்றிவிட்ட ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.

    ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. ஆசிரியரின் தன்னலமற்ற சேவைப்பணியை
    இதனை விட சிறப்பாகச் சொல்வது அரிது
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. அற்புதமாக இருக்கிறது நண்பா.. செம்ம கவிதை.. ஒரு காலத்தில் ஆசிரியராய் இருந்த என் நினைவுகள் வருடிச் சென்றது..

    பதிலளிநீக்கு
  15. ஒரு ஆசிரியரின் மனச் சிந்தனைகளை கண்முன்னே கவிதைகளில் ஓட விட்டமைக்கு நன்றி அய்யா. வரிகள் அனைத்தும் ரசிக்கும் படியாக அமைந்தது. மாணவர்கள் அளிக்கும் விருதுக்கு இணை ஏது இவ்வுலகில். அது போதும் அய்யா ஆயுள் முழுதும் ஆசான் பணியாற்ற. //ஆதியில் வாழ்ந்த மனிதர்களிடத்தில் சாதிகள் இருந்ததில்லை
    பாதியில் வந்து பாதகம் செய்தது இதுபோல் எதுவுமில்லை// வரிகளுக்கிடையில் சமுதாய சிந்தனை அருமை, பகிவுக்கு நன்றி,

    பதிலளிநீக்கு
  16. இனிய ஆசிரியர்தின வாழ்த்துகள்..
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  17. ஆசிரியர்கள் தன்னலம் பாராமல் மாணவர்களின் நலத்தை முக்கியமாகக் கருத வேண்டும். அதே சமயம், போற்றுவார் போற்றலையும், தூற்றுவார் தூற்றலையும் சமமாய் தூர வைத்து ஆற்றும் பணியில் ஆர்வம் கொண்டு அயராது உழைக்க வேண்டும் என்று மிகச் சிறப்பாகக் கூறியுள்ளீர்கள்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  18. அன்பின் முரளிதரன் - ஆசிரியப் பணீயே அறப்பணி - அதற்கே உனை அர்ப்பணி - என்ற வாக்கினை வேத வாக்காக எடுத்துக் கொண்டு ஆசிரியப் பணீயினை செம்மையாகச் செய்து வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் -
    /
    /எத்தனை ஆண்டுகள் எத்தனை பிறவிகள் எடுத்து வந்தாலும்
    அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை ஏற்றிட விரும்புகின்றேன்.//

    கவிதை நன்று 0 அருமையிலும் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  19. "ஈன்ற குழந்தை 'அம்மா" என்றால் அன்னை மகிழ்ந்திடுவாள்
    சான்றோனாகி சரித்திரம் படைத்தால் தந்தையும் மகிழ்ந்திடுவார்
    சான்றோன் ஆனதன் காரணம் எந்தன் ஆசான் என்றுரைத்தால்
    ஈன்றாள், தந்தை இருவரை விடவும் ஆசான் மகிழ்ந்திடுவார்" என்பது
    உண்மையிலும் உண்மையே!

    பதிலளிநீக்கு
  20. அன்பு நண்பர் முரளி அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்களின்
    ”ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட விரும்புகிறேன்
    அத்தனை பிறப்பிலும் ஆசான்பணியை செய்திட விரும்புகின்றேன்” என்பது என்னுடைய நெஞ்சிலும் உள்ள நினைவு. நெகிழ வைத்து விட்டீர்கள். என் மாணவர்களிடம் சொல்வேன். எதையும் கஷ்டப் பட்டுப் படிக்காதீர்கள், இஷ்டப்பட்டுப் படியுங்கள் என்று. நீங்களும் நம்ம ஜாதிதான் என்று இப்போதுதான் புரிகிறது. எனவே எனது வலைப்பக்க நட்புவலைப் பட்டியலில் உங்களை இணைத்திருக்கிறேன். நட்பு வலை விரியட்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. எத்துணை பற்று ஆசிரியப் பணியில். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அதை எத்தனைபேர் நேசிக்கிரர்கள்.என்பது வருத்தமே. தங்கள் எண்ணமும் கவிதையும் மன மகிழ்ச்சியை தந்தன. அருமையான கவிதை தங்கள் விருப்பம் நிறைவேற என் வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  22. வணக்கம்
    ஒரு முத்திரைக் கவிதை..
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. ஆசிரியர் இல்லையேல் அகிலம் இல்லை

    நல்லகவிதை

    S. Syed ibrahim
    Bangalore

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895