என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 10 ஜனவரி, 2013

சுஜாதாவுக்கு கவிதை எழுதத் தெரியுமா?

   வலையுலகிற்கு வாரித் தரும் வள்ளல் சுஜாதா. அவர் எழுதியதை யாராவது ஒருவர் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.  நான் அவரது அனைத்து நூல்களையும் படித்தவன் அல்ல.என்றாலும் படித்ததை அவ்வப்போது பகிர்ந்து வந்திருக்கிறேன்.
  அவர் கவிதையில் ஆர்வம் உடையவர் என்பது தெரிந்ததே!அவருடைய எழுத்துலக வாழ்க்கையின் பிற்பகுதியில் திருக்குறள் சங்க இலக்கியங்கள்,ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றை அலசி ஆராய்ந்திருக்கிறார் என்பதும் சுஜாதா ரசிகர்கள் அறிந்ததுதான் .

 ஔவையார் (ஆத்திச் சூடி பாடிய  வேறு ஒருவராம்) பாடிய புறநானூற்றுப் பாடலையும் அதை சுஜாதா எளிமையான கவிதையாக மாற்றித் தந்திருக்கிறார் என்பதையும் பார்க்கலாம். 

  அரசன்  அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசு பெறச் செண்டிருந்தபோது அரசன் காலம் தாழ்த்த காவல் காரனைப் பார்த்து கோபத்துடன் பாடியதாக அமைந்துள்ளது பாட்டு.

                   ஒரிஜினல் புறநானூற்றுப் பாடல்

                   வாயிலோயே!வாயிலோயே!
                   வல்லியோர் செவிமுதல் வழங்குமொழி விந்தித்தாம் 
                   உள்ளிய பூ முடிக்கும் உரனடை உள்ளத்து 
                   வரிசைக்கு வருத்தும் இப்பரிசில் வாழ்க்கை 
                   பரிசிலர்க்கு அடையா வாயிலாயே 
                   கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி 
                   தன் அறியலன் கொள்?என்னறியலன் கொள்?
                   அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
                   வறந்தலை உலகமும் அன்றே அதனால் 
                   காலினெம் கலனே சுருக்கினெம் கலப்பை 
                   மரங்  கொல்  தச்சன் கைவல் சிறார் அர்
                   மழுவுடைக் காட்டகத்து அற்றே 
                   எத்திசைச் செலினும்  அத்திசைச் சோறே!

 இதை சுஜாதா எளிமைப் படுத்தி அளித்தது இதோ

                   காவல்காரனே!காவல்காரனே
                   பரிசு  கேட்டு வந்திருப்பதை
                   வள்ளல்கள் காதில் சொல்லி
                   விரும்பியதை அடைய முடியாத
                   வாசலின் காவல் காரனே!
                   நெடுமான் அஞ்சிக்கு தன்னைத் தெரியாதா?
                   இல்லை என்னைத் தெரியாதா?
                   அறிவும் புகழும் உள்ளவர்களை 
                   இந்த உலகம் சாகவிடாது 
                   அதனால் வாத்தியங்களையும் பெட்டிகளையும் 
                   எடுத்துக்கொண்டு புறப்படுகிறோம் 
                   தொழில் தெரிந்த தச்சனின் பிள்ளை
                   காட்டுக்குள் சென்றால் மரமா கிடைக்காது?
                   எந்த திசையில் சென்றாலும்
                   எமக்குச் சோறு கிடைக்கும்.?

  கவிஞர்களின்  நிலை அன்றைக்கும் அப்படித்தான் போல் இருக்கிறது. கவிஞர்களை அலட்சியப் படுத்துவதில் அரசனும் விதி விலக்கல்ல. புலவருக்காக வெண்சாமரம் வீசியதெல்லாம் மிகைப் படுத்தப் பட்டதாக இருக்குமோ என்ற எண்ணத்தை இந்தக் கவிதை ஏற்படுத்துகிறது.

 இதைப் படித்ததும் பாரதியும் ,கவிஞர் விக்ரமாதித்யனும் ஏனோ என் நினைவுக்கு வந்து போனார்கள்.

இதுபோன்று  சங்கப் பாடல்களை எளிமைப் படுத்தி அளிக்கும் பணியை 'வேர்களைத் தேடி' வலைப்பூவில் முனைவர் குணசீலன் அவர்கள் அளித்து வருவது பாராட்டுக்குரியது.
**************************************************************************************

23 கருத்துகள்:

  1. சுஜாதா எளிமைப் படுத்தி அளித்தத கவிதை அருமை.
    உங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. முனைவர் குணசீலன் வலைப்பக்கம் இதுவரை சென்றது இல்லை.. அவரைப் பற்றி நீங்கள் தரும் ஒரு வரியே அங்கு செல்லும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது...

    வாத்தியாரின் தமிழ் இலக்கியங்கள் எளிய நடை நூல்களை இன்றுவரையிலும் படித்ததில்லை சார்

    பதிலளிநீக்கு
  3. அறிந்துகொண்டேன். இப்போதுதான் முதல்முறையாக படிக்கிறேன், அவருடைய கதைகள் என்றால் ரொம்ப பிரியமாக படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  4. // தொழில் தெரிந்த தச்சனின் பிள்ளை
    காட்டுக்குள் சென்றால் மரமா கிடைக்காது?
    எந்த திசையில் சென்றாலும்
    எமக்குச் சோறு கிடைக்கும்.?
    // சங்க பாடல்களை எளிமை படுத்தும் போது இனிமையாக ரசிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
  5. பகிர்வுக்கு நன்றி முரளிதரன். இனி இந்த மாதிரி எளிமைப்படுத்தப்பட்டு பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலொழிய தமிழ் மொழிப்பாடமாக கொள்வோர் குறைந்துவிடுவர். முனைவர் குணசீலன் அருமையாக எளிமைப்படுத்துகிறார். அப்படியாகினும் நம் வரலாறு அறிவோம்.

    பதிலளிநீக்கு
  6. இவ்வளவு எளிமையான வார்த்தையை
    அந்த காலத்தில் எப்படி போட்டு பயமுறுத்தி இருக்கிறார்கள்...!!

    சுஜாதா அவர்கள் பாடலை எளிமை படுத்திய விதம் அருமை.
    பகிர்விற்கு மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் அது புரிந்திருக்கலாம். இப்போது நமக்கு புரியவில்லை

      நீக்கு
  7. பகிர்விற்கு மிக்க நன்றி முரளிதரன்

    அருமை! இனிய நல் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

  8. வணக்கம்!

    மரபின் மன்னன் பாரதியை
    மறவா துரைக்கும் நன்னெஞ்சா்!
    முரளி தரனார் தமிழ்ப்பற்றை
    முழுதும் அறிந்து மகிழ்கின்றேன்!
    குரலில் இனிமை பெற்றவா்கள்
    கொடுக்கும் தேன்தான் இவா்பதிவு!
    உரலில் கட்டுண்டு இருந்தவனே!
    ஒளிரும் கண்ணா! காத்திடுக!!

    பதிலளிநீக்கு
  9. I know this if off topic but I'm looking into starting my own weblog and was curious what all is required to get set up? I'm assuming having a blog like yours would cost a pretty penny?

    I'm not very web savvy so I'm not 100% sure. Any recommendations or advice would be greatly appreciated. Thank you
    Feel free to visit my web page ray ban sunglasses cheap

    பதிலளிநீக்கு

  10. புலவர்களுக்குப் பொசுக் பொசுக்கென்று கோபம் வரும் முரளி... பல்வேறு சமயங்களில் முன்பு புலவர்களை நன்றாகவே மதித்திருக்கிறார்களே...! :)))

    பதிலளிநீக்கு
  11. திருவானவர்.சுஜாதா அவர்கள் எதையும் தனித்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளது உண்மை

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895