என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 26 மே, 2016

நீயா? நானா?காதல் திருமணம்-அடம்பிடிக்கும் பெண்கள்


  காதல்- பதின் பருவத்தினரின் காந்த வார்த்தை.முதின் பருவத்தினரை நொந்து போக செய்யும் வார்த்தை. காலம் காலமாய் காவியங்களும் காப்பியங்களும் காதலை போற்றி வருகின்றன என்றாலும் காதலுக்கு சமூகம் மனதார அங்கீகாரம் கொடுக்கவில்லை. திரைப்படங்கள் வந்த நாள் முதல் இந்த நாள் வரை காதலைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.  திரைப்படங்களில் கதைகளில் தொலைக் காட்சித் தொடர்களில் வயது வித்தியாசமின்றி காதலை ரசித்தாலும் நிஜ  வாழ்க்கையில் பெற்றோர் வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடிய வார்த்தையாகத்தான் காதல் இருக்கிறது. திரைப்படங்களில் காதலை எதிர்க்கும் வில்லத் தந்தைக்கு எதிரான  மனநிலையைக் கொண்டிருப்பார்கள்.. காதல் ஜெயிக்க விரும்பி காதல் ஜோடிகள் இணைத்தால் மன நிறைவு அடைவார்கள்.ஆனால் நிஜத்தில் காதலுக்கு எதிரான மனப்பான்மை கொண்டிருப்பதுதான் யதார்த்தம்.

       கடந்த வார நீயா நானா இன்னோர் வடிவத்தில்  காதலை விவாதப் பொருளாகக் கொண்டது. ஒரு பக்கம் காதல் செய்ய விரும்பும் பெண்கள் (காதலித்துக்  கொண்டிருக்கும் பெண்கள் அல்ல) இன்னொரு பக்கம் அவர்கள் பெற்றோர். பொதுவாக ஆண்களை விட பெண்கள் காதல் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பதாக நினைப்பதுண்டு. அதனால் சாதிப்பற்று ஆண்களை விட பெண்களுக்கு குறைவு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்கள் சொன்ன கருத்தை பார்க்கும்போது என் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகவே உணர்கிறேன். தனது சாதியில் உள்ள பெண்ணை தன் பெண் காதலித்தால்  பரிசீலிப்பதாக பெற்றோர், குறிப்பாக தாய்மார்கள்  கூறினர். இன்னொரு சாதிப் பையனை தன் மகள் காதலிப்பதை வந்திருந்த எந்தப் பெற்றோரும் விரும்பவில்லை. காதலே கூடாது என்ற எண்ணம் மாறி  இந்த அளவுக்காவது காதலை ஏற்றுக் கொள்கிறார்களே என்று மகிழ்சசி அடைய வேண்டியதுதான் போலிருக்கிறது. தன் மகளோ மகனோ எக்கணமும் காதல் வலையில் விழலாம் என்று பெற்றோர் எதிபார்த்துக் கொண்டேதான் இருக்கிரார்கள்
  ஆனால் இளம் பெண்கள் காதல் திருமணம் செய்வதையே விரும்புகிறார்கள் என்பது புரிகிறது. முன்பு போல பெற்றோரிடம் காதல் பற்றிப்பேச கூச்சப் படுவதில்லை. பெண்கள் தங்கள்  திருமணம் நிச்சயிக்கப் படும்வரை  வரை கூட தங்கள் காதலை பெற்றோரிடம் மறைத்துக் கொண்டு இருந்தது பழங்கதை.   இப்போது அப்படி அல்ல. பெற்றோரிடம் எவ்விதமாவது  காதலை அல்லது காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை  மறைமுகமாக உணர்த்தவே விரும்புகிறார்கள்  என்பதை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர் கலந்து கொண்ட பெண்கள். பெற்றோரை கொஞ்சம் கொஞ்சமாக தயார் படுத்தும் முயற்சியில் எப்படியெல்லாம் ஈடுபடுவோம் என்பதையும் சுட்டிக் காட்டினர். இது நகரங்களில் படித்த மத்திய தர குடும்பத்தினரிடையே   இத்தகைய சூழலைக் காண முடிகிறது 
     முந்தைய  தலைமுறையினர்  தன பிள்ளைகள் காதலிக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினார்கள். அப்படி ஏதேனும் நடந்து விட்டால் அதீத அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் சமூத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சினர்.

      இக்காலப் பெற்றோரின் நிலை வேறு.   கல்வி அறிவு  சற்று முற்போக்காக சிந்திக்க வைத்ததாலும் அவர்களால் காதலை முழுமையாக எதிர்க்க முடிவதில்லை. ஆனாலும் ஏற்றுக் கொள்ளவும் முடியாத இரண்டும் கெட்டான் மன நிலையில் இருக்கிறார்கள். தன் மகள் காதல் பாடல்களை விரும்பிக் கேட்பதையும்  அறைக்குள் மணிக்கணக்கில் கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதையும்   கவனிக்கும்போதும் ஒரு கலவரம் வந்து மனதில் தொற்றிக் கொள்ள அதை தடுக்கும் முயற்சியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுகிறார்கள். காதல் , ப்ரேக் அப் என்னும் வார்த்தைகள் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களில் வரும் கல்லூரிக் காட்சிகளில் காதலைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை. மேலும் படங்களில் நாயகிகள் ரவுடிகளையும் பொறுக்கிகளையும்  உருகி உருகி காதலிப்பதைப் பார்த்து உண்மையிலும் இப்படிப்பட்டவனைத்  தன் மகள் தேர்ந்தெடுத்து விடுவாளோ என்று அஞ்சுகின்றனர். இளம் பெண்களும் ஆண்களும் காதல் ஒன்றே குறிக்கோளாகக் சுற்றுவதாகவே மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
     தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்களாய் இருந்தாலும் .தன் பிள்ளைகள் காதல் திருமணம் செய்வதை பெரும்பாலும் பெற்றோர் விரும்புவதில்லை. தன் பிள்ளைகளின் காதல் மீது முழுமையான நம்பிக்கை வைக்க அவர்களால் இயல்வதில்லை. தங்கள் காதலைப் போல இந்தக் காலக் காதல் உண்மையானதல்ல; உறுதியானதல்ல என்ற  எண்ணமும் அதற்குக் காரணம்

   ஆனால் இந்தக் காலப் பெண்பிள்ளைகள் சாமார்த்திய சாலிகள்..தன் பெற்றோரை எப்படியாவது சம்மதிக்க வைத்து  விட முடியும் என்று நம்பு கிறார்கள்..
     கடைசி  ஆயுதமாக காதலை ஏற்றுக்  கொள்ள வைப்பதற்கு ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவேன் என்று சொன்னபோது அந்த பெண்ணின் தாயார் பரவாயில்லை போகட்டும் என்று சொன்னது அதிர்ச்சி..ஆனால் அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை.
 பெற்றோர் இப்போது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களை எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமாக சம்மதிக்க வைத்து விட முடியும் என்றே நம்புவதாக பலரும் தெரிவித்தனர்.  பெற்றோரின் சம்மதம் பெற்றுவிடவேண்டும் என்பதில் பலரும் முனைப்பாக இருக்கின்றனர் என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது.
     பெற்றோரின் பிடிவாதத்தால்   ரெண்டு மூணு லவ் ப்ரபோசல் நழுவிப் போச்சு என்று ஒரு பெண் சொன்னது  யதார்த்த இளமை வருத்தம்

  முன்பின் தெரியாத ஒருவனை ஏற்றுக்கொள்ளச் சொல்லி பெற்றோர் வற்புறுத்துகிறார்கள்  என்று குற்றம் சாட்டும் இப்பெண்கள். நண்பர்களின் தூண்டுதல் காரணமாகவோ  தொடர் அணுகுதல் காரணமாகவோ முன்பின் அதிகம் அறியாத ஒருவனைத்தான் காதலிக்கிறார்கள். அவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் பிடிவாதம் பிடிக்கிறார்கள். ஆறு மாதமோ ஒருவருடமாகவோ காதலிக்கும் பெண்ணுக்கு   காதலனின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தாலும் காதலை துறக்க விருபுவதில்லை. குறைகள் இருப்பினும் அவனையே திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். பின்னால் தனக்கு ஏற்றவனாக மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகின்றனர். அல்லது அவனுக்கேற்ற மாறிவிடவும் தயாராக உள்ளனர். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும் இதே நிலைதானே?. என்ன பழகுனர் காலம் இல்லை.?  அவ்வளவுதானே!. ஏன் தங்கள்   விருப்பத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுபெற்றோரின் வாதம்  
 காதலின் போது பரஸ்பரம்  குறைகள் கண்ணுக்கு புலப்படுவதில்லை. திருமணத்திற்குப் பிறகுதான் குறைகள் தென்பட ஆரம்பிக்கும் என்கின்றனர் பெற்றோர்.
    இந்த நிகழ்ச்சியில் பேசிய பெண்கள் சொல்வதில் இருந்து இன்னொன்றும்  புரிந்தது. காதலன் காதலியிடம் தன் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துப் போக வேண்டும் என்று விரும்புகிறான். அவ்வப்போது தன் வீட்டாரின் குணங்களை  காதலியிடம் சொல்கிறான். அதற்கேற்றபடி தன் காதலி நடந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறான்   
  இவர்கள் காதலித்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல ஆனால் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் என்று சொன்னாலும் உண்மையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரும்பாலான பெண்களின் பேச்சை வைத்துப் பார்க்கும்போது  ஏற்கனவே காதலித்துக் கொண்டிருப்பதாகத்தான் தெரிந்தது. தன் பெற்றோருக்கு  குறிப்புணர்த்தவே நிகழ்ச்சியில் பெற்றோரை அழைத்து வந்ததாகத் தோன்றுகிறது. இவை எல்லாம் பெரும்பாலும் நகரப்புறங்களில் மட்டுமே  ஆனால் கிராமங்களின் காதலின் நிலை வேறு .
   இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பெற்றோரின் அச்சம் மேலும் அதிகரிக்கலாம்.  பெரும்பாலும் இது பெண்களைப் பெற்றவர்களின் அச்சமாகத் தான் இருக்கிறது. ஏனெனில் காதலால் பாதிக்கப் படுவது பெண்கள்தான் என்ற எண்ணமே அதற்குக் காரணம்  .
     பொதுவாக கோபிநாத் தன்னை இளைய தலைமுறையினரின் ஆதரவாளாராகவே காட்டிக் கொள்வார். இந்நிகழ்ச்சியிலும் அப்படியே!. எனக்கு ஒரு சந்தேகம்! உண்மையில் இந்த நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில்  யார் விண்ணப்பித்திருப்பார்கள் பெற்றோரா  அல்லது இந்தப் பெண்களா?  சாதியைப் பற்றிக் கவலைப்படும் பெற்றோர் இந்த நிகழ்ச்சிக்கு வர எப்படி ஒப்புக் கொண்டார்கள்? அல்லது விஜய் டிவியின் திட்டமிடப்பட்ட  ஏற்பாடா?
  அது எப்படியோ! காதலுக்காக பெற்றோரின் சம்மதம் பெறப் போராடும் இந்தப் பெண்களுக்கு வாழ்த்துகள் 

****************************************************


14 கருத்துகள்:

 1. சாதி மாறி காதலித்தாலும் வேறு வழியின்றி ஆதரிக்கும் பெற்றோர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது என்பதே உண்மை !

  பதிலளிநீக்கு
 2. நானும் காதல் திருமணம் செய்து கொண்டவன்தான். நிகழ்ச்சியில் அல்லது நீங்கள் சொல்லி இருப்பது போல என் மகன்கள் காதல் திருமணம் செய்து விடுவார்களோ என்கிற அச்சம் முன்னால் கொஞ்சம் இருந்தது. ஆனால் இப்போது அதே நிகழ்ச்சியில் சொல்லப் பட்டிருப்பது போல ஒரே ஜாதியாய் இருந்தால் வரவேற்கலாம் என்று தோன்றுகிறது. இல்லை என்றால்தான் என்ன செய்ய முடியும்? மணமகன்களுக்கு மணமகள்களே கிடைக்காத இன்றைய சூழலில் இதைக் கூட வரவேற்கவே தோன்றும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட புதிய செய்தியாக இருக்கிறதே!பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.எதிர்காலத்தில் பெண் கிடைத்தால் போதும் என்ற நிலை வரலாம்.அப்போது சாதிகள் புறந்தள்ளப் தன் சாதியின் ஒரே பிரிவுதான் வேண்டும் என்று அடம் பிடித்த காலம் போய் பிற உட்பிரிவுகளை ஏற்றுக் கொள்வது சகஜமாக உள்ளது. சமரசம் செய்து வைக்கும் சக்தி காலத்திற்கு உண்டு

   நீக்கு
 3. ...பெற்றோரின் பிடிவாதத்தால் ரெண்டு மூணு லவ் ப்ரபோசல் நழுவிப் போச்சு என்று ஒரு பெண் சொன்னது யதார்த்த இளமை வருத்தம்,,,,
  இதுதான் இன்றைய காதல்

  பதிலளிநீக்கு
 4. இன்றைய காதல் பெரும்பாலும் பொழுது போக்குக்காக மட்டுமே இருக்கின்றது நண்பரே
  தம்ழ் மணம் 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயல்பான பால் ஈர்ப்பை காதல் என்று நினைஹ்ஹ்டு விடுகிறார்கள்

   நீக்கு
 5. இங்கு பெரும்பாலான காதல்கள், கல்யாணம் என்ற ஒன்றை யோசிக்கவே யோசிக்காத டைம்பாஸ் என்று அண்மையில் ஒரு நண்பர் சொன்னபோது பயமாக இருந்தது.

  காதலித்து மணம் புரிந்து கொண்டோரைப் புரிந்து கொண்டு ஆதரவு தரத்தான் வேண்டும். ஜாதியென்ன மதமென்ன?
  இரு குடும்பங்களின் பழக்க வழக்கமும், உணவு முறைகளும், வழிபாட்டு முறைகள் கூட திருமணத்துக்குப் பின் சங்கடங்கள் விளைவிக்கும். உண்மையான காதல் இளமையின் கவர்ச்சி தாண்டி, இந்த சங்கடங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும்.

  பதிலளிநீக்கு
 6. இளம் தலைமுறையினர் நம்மை விட விரிந்த மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள் நாம் இவ்வளவு சிந்தித்தோமா?

  பதிலளிநீக்கு
 7. காதல் என்பது ஒரு அனுபவம் . தானாக வருவது. சாதி பார்த்தோ மதம் பார்த்தோ வருவதல்ல. ஒரே சாதிக்காரரைக் காதலிப்பது என்பது திட்ட மிட முடியாதது. காதலில் ஜெயிக்க ஒருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும் சமநிலையில் காதலில் வெற்றி என்பது அரிதாகும் ஐ பி எல் ஆட்டங்கள் பார்ப்பதால் நீயா நானா நிகழ்ச்சிகள் தறி விட்டன

  பதிலளிநீக்கு
 8. பொதுவாக பெண்களுக்கு சாதி வெறி ரொம்பக் குறைவு, ஏன் இல்லைனே சொல்லலாம். அதுவும் இளம் பெண்களுக்கு கிடையவே கிடையாது. சாதி என்பது அர்த்தமற்றது என்றும் அதில் உயர்வு தாழ்வு என்பதெல்லாம் பெண்களால் உணரமுடிவதில்லை (அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதலால்). ஆனால் பெண்ணை "ஆட்டிப் படைப்பவன்" அவள் அப்பன், அண்ணன், தம்பி, மாமனார், மாமியார், ஆம்படையான், அத்திம்பேர்னு இந்த சுத்தியுள்ள ஆம்பளைங்கதான். இவணுக அவர்களை சுய சிந்ந்தனையுடன் வாழவிடுவதில்லை. இந்த அடிமுட்டாள்கள் பெண்களையும் முட்டாளாக்கி, அவர்களை ஏதோ ஒரு வழியில் "ஃபோர்ஸ்" பண்ணி அவர்கள் மனநிலையையும் நாசமாக்கி விட்டுடுவானுக. பெண் சுயசிந்தனையை இந்த நாய்களால் இழந்து அவளும் இதுபோல் (இந்தத் தாய்மார்கள்போல்) ஒளற ஆரம்பித்து இந்நிலையை அடைகிறது!

  பதிலளிநீக்கு
 9. வருணின் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. பெரும்பான்மை பெண்களின் சிந்தனையே ஆண்கள் வழியாகத்தான்....

  பதிலளிநீக்கு
 10. காதல் என்பது உறுதியாக, எதிர்பார்ப்பற்றதாக, நல்ல புரிதலுடன் இருந்தால் வரவேற்கவேண்டும். காதல் மணம் புரிவதில் தவறில்லை. ஏனென்றால் உண்மையான காதல் பணம், சாதி மதம் பார்த்தெல்லாம் வருவதில்லை. குணம் பார்த்து மனதிற்குப் பிடித்தால். மற்றவை காதல் அல்ல. ஜஸ்ட் இன்ஃபேச்சுவேஷன். நிலையற்றது.

  இப்போதெல்லாம் நீயா நானா விவாதங்கள் கொஞ்சம் தரம் குறைந்து போயிருக்கின்றது. அந்த விவாதத்தில் கலந்து கொள்ள தெரிந்தவர்கள் மூலமாக ஆள் சேர்க்கப்படுகிறது என்றுதான் நான் கேள்விப்பட்டேன். எனக்கும் கூட கல்வி பற்றிய விவாதங்கள் நடை பெற்ற போது என் உறவினர் அவருக்குத் தெரிந்தவர் யார் மூலமாகவோ அழைப்பு விடுத்தார். நான் கலந்து கொள்ளவில்லை. நம் கருத்துகளை முழுமையாக முன் வைக்க முடியாது. கருத்துகள் எடிட் செய்யப்படும். அப்புறம் இரவு வெகு நேரமாகும் ஷூட் முடிய என்று பல இருந்ததால் கலந்து கொள்ளவில்லை.

  எழுத்தாளர் ஞானி கூட அவரை நடுவராக அழைக்கப்பட்டது, இது பற்றி எழுதியிருந்தார் என்ற நினைவு. எழுத்தாளர் சாருலதாவும் கூட எழுதியிருந்தார்...

  கீதா

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895