என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 8 ஜூலை, 2013

நான் சொல்றதுதான் சட்டம் -சொன்னது யார்?



   ஞாயிற்றுக் கிழமையன்று எதையோ  தேடியபோது பழைய தமிழ் பாட புத்தகம் ஒன்று கிடைத்தது. கொஞ்சம் புரட்டிப் பார்த்தேன் கவியரசு கண்ணதாசனின் காலக் கணிதம்  என்ற கவிதை கண்ணில் பட்டது. 
 இதைபலமுறை படித்திருக்கிறேன், இப்போதும் எனக்கு அது மறக்காமல் இருந்தது
   கண்ணதாசனை திரைப்படப் பாடல் ஆசிரியராக மட்டும் அறிந்திருந்த நான் இந்தக் கவிதையை படித்து கண்ணதாசன் பால் ஈர்க்கப் பட்டேன்.

   கவிஞனுக்கே உரிய  அகங்காரம்,சொல்வதை ஆணித்தரமாக சொல்லும் உறுதி, பிறர் சொல்லும் கருத்துக்களைப் பற்றி கவலைப் படாத கர்வம், போகிறபோக்கில் மனதில் பட்டதை சொல்லும் தைரியம் அப்பப்பா! இந்தக் கவிதையில் அனைத்தும் உண்டு.இதில்  சொல்வது போல கவிதை,சினிமா,கலை அரசியல் பத்திரிகை என அனைத்திலும் நுழைந்து பார்த்து பல் துறையிலும் பரிமளித்தார். அவரால் விமர்சிக்கப் பட்டவர்கள் கூட அவரை வெறுக்க முடியாமல் போயினர். அவை அத்தனையும் அவருக்குக் கிடைத்த மரியாதையாக கொள்ள முடியாது என்றாலும் அது கவிதை அவருக்கு தந்த பரிசு. அவர் நிலையற்ற மனம் கொண்டவராக இருந்த போதிலும் அவரது பாடல்களும் கவிதைகளும் நிலையான இடத்தை பிடித்தது. படைப்பாளியின்  தனிப்பட்ட குணங்கள் , அவரது படைப்புகள் ரசிக்கப் படுவதற்கு தடையாக  இருக்க வாய்ப்பு உண்டு, ஆனால் அதற்கு விலக்காகத் திகழ்ந்தவர் கண்ணதாசன்.
இதோ கவிதை! உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

காலக் கணிதம்

                   கவிஞன் யானோர் காலக் கணிதம்
                   கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
                   புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
                   பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்!
                   இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
                   இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
                   ஆக்கல் அளித்தல் அழித்தலிம் மூன்றும்
                   அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
                   செல்வர்தம் கையில் சிறைப்பட மாட்டேன்;
                   பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!
                   பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்;
                   ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்!
                   உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
                   இல்லா யின்எம ரில்லந் தட்டுவேன்!
                   வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
                   வாய்ப்புறந் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
                   பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
                   சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!
                   புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
                   இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது!
                   வளமார் கவிகள் வாக்கு மூலங்கள்
                   இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!
                   கல்லாய் மரமாய் காடுமே டாக
                   மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!
                   மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
                   மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
                   எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
                   என்ப தறிந்து ஏகுமென் சாலை!
                   தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
                   தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
                   கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
                   உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
                   நானே தொடக்கம்; நானே முடிவு;
                   நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!


**********************************************************************************************

 இதைப் படித்து விட்டீர்களா?

காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?

23 கருத்துகள்:

  1. நானும் படித்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
  2. ஆக்கல் அளித்தல் அழித்தலிம் மூன்றும் கவிங்ஞர்களின் சிறப்பு

    பதிலளிநீக்கு
  3. பிரமாதம். கண்ணதாசனுக்கு நிகரில்லை.
    இதுவரை படிக்காத கவிதை. நன்றி முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  4. இந்தக் கவிதையின் பின்புலம் தெரியுமா?

    பதிலளிநீக்கு
  5. அறியாத தகவல்..கவிதை அருமை.. கண்ணதாசன் கிரேட்...

    பதிலளிநீக்கு
  6. எப்போதோ படித்த நினைவு இருக்கிறது. அருமை.

    @அப்பாதுரை..... இந்தக் கவிதையின் பின்புலம் என்ன?

    பதிலளிநீக்கு
  7. ரசிக்கவைத்த அருமையான
    கவியரசரின் கவிதைப் பகிர்வுக்குப் பராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
    மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

    காலத்தை வென்ற வரிகள்..!

    பதிலளிநீக்கு
  9. கவிஞரின் கவிதை பிடிக்காதிருக்குமா? பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. நல்ல கவிதை ! எப்போதோ படித்தது! நினைவு படுதினீர் நன்றி! அருள கூர்ந்து உடன்

    தொலைபேசி வழி தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  11. அருமையான கவிதை
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  12. கண்ணதாசனை திரைக் கவிஞராக மட்டும் அறிந்திருந்தீர்களா? அடடா...! எத்தனையெத்தனை அற்புதக் கவிதைகள் இயற்றிய பெருங்கவிஞர் அவர். இதுபோல இன்னும் சில கவிதைகள் தொகுத்துத் தர எனக்கும் எண்ணமுண்டு. அதை இந்தப் பதிவு தூண்டி விட்டது. மிக்க நன்றி முரளி!

    பதிலளிநீக்கு
  13. படைப்பாளிகளுக்கே உண்டான செருக்கு இது!!

    பதிலளிநீக்கு
  14. அரிய கவிதையை அறிய வைத்துள்ளீர். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. எத்தனை ஒரு நம்பிக்கை தன் மேல் கவிஞருக்கு! சிறப்பான கவிதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி முரளி.

    பதிலளிநீக்கு
  16. காலத்தை வென்ற கவிஞனின் வரிகள் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. நல்லதொரு கவிதையை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!
    அவரது தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது.
    சட்டி சுட்டதடா கைவிட்டதடா, போனால் போகட்டும் போடா போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் கவியரசரின் தமிழ் ஆளுமை ஆச்சரியம் கொடுக்கும்.
    அவருக்கு நிகர் அவரே!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895