என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

அஞ்சிலே ஒன்றை வைத்தான்! அஞ்சிலே ஒன்றை விட்டான்!


தமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்
புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!நிறைவு பகுதி
*************************************************************************************************************************


       நான் பிளஸ் 2 படிக்கும்பொழுது நடந்த சம்பவம். எனது தமிழாசிரியர் கம்ப ராமாயணம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் ரொம்ப கண்டிப்பானவர். பாடப் பகுதியை நடத்துவதற்கு முன்பாக அனுமன் துதியாக கம்பர் எழுதிய செய்யுளை விளக்கினார்.

          அஞ்சிலே ஒன்று பெற்றான்;
              அஞ்சிலே ஒன்றைத் தாவி
          அஞ்சிலே ஒன்றா றாக
              ஆரியர்க் காக ஏகி  
          அஞ்சிலே ஒன்று பெற்ற
              அணங்கை கண்டயலார் ஊரில் 
          அஞ்சிலே ஒன்றை வைத்தான்;
              அவன்நம்மை அளித்துக் காப்பான்

-
இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.

      இந்தப் பாடலில் வரும் அஞ்சு என்பது பஞ்ச பூதங்களாகிய நீர்,நிலம்,காற்று, ஆகாயம், நெருப்பு   ஆகியவற்றை குறிக்கும்.
       ஐந்து பூதங்களில் ஒன்றாகிய வாயுவின் புத்திரன் ஐந்து பூதங்களில்  ஒன்றாகிய நீரை     ( கடலை) தாண்டி ஐந்து பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் வழியே இலங்கைக்குச் சென்று ஐந்து பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மகளாகிய சீதையைக் கண்டபின் அந்த ஊரிலே ஐந்து பூதங்களில் ஒன்றாகிய நெருப்பை வைத்த அனுமான் நம்மைக் காப்பான் என்பது இந்தப் பாடலின் பொருள்.

      இது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நான் சொல்லவந்தது இது இல்லை. இந்த செய்யுளை ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தபோது நான்  ஜன்னல்  வழியே ஒருவன் சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்
        
      இந்தப் பாடல் அமைப்பு எனக்குப் பிடித்து விட்டதால், நான் பார்த்ததை தொடர்பு படுத்தி  இதே போன்ற செய்யுள்(?) (தமிழாசிரியர்கள் மன்னிக்கவும்) ஒன்றை எழுதினேன். அதனால் வந்தது வினை.

       அஞ்சிலே ஒன்றை அருந்தி
           அச்சுகம் பெரிதென் றெண்ணி
       அஞ்சிலே ஒன்றை விற்ற
           அவதியை மறக்க ஒருவன்
       அஞ்சிலே ஒன்றில் மிதக்கும்
           அருஞ்சுகம் கிடைக்க சுருட்டில்
      அஞ்சிலே ஒன்றை வைத்தான்
            அஞ்சிலே ஒன்றை விட்டான்.

     இதை என் நண்பனிடம் காட்டினேன். முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னிடம் விளக்கம் கேட்க நான் சொன்னேன்.

      "அஞ்சில  ஒண்ணான தண்ணியடிச்சி, அதுக்கு அடிமை ஆகி அஞ்சில ஒன்னான தன்னுடைய நிலத்தை விற்று அதனால கஷ்டப் பட்டுக்கொண்டிருந்த ஒருத்தன் அந்த  துன்பத்தை மறந்து அஞ்சிலே ஒன்றான ஆகாயத்தில் மிதக்கிற மாதிரி இருக்கறதுக்காக வாயிலே சுருட்டை வைத்து அஞ்சில ஒண்ணான நெருப்பை வைத்து, அஞ்சில ஒண்ணான புகையை விட்டான்." என்றேன்

        என் விளக்கத்தைக் கேட்ட என் நண்பன் சிரித்ததோடு என்கையில் இருந்த காகித்தை பிடுங்கி அதை எல்லா மாணவர்களுக்கும் காட்டிய தோடு தமிழாசிரியாரிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டான்.

      அதைப் படித்தார் ஆசிரியர். நான் பயந்து கொண்டிருந்தேன்.  கடுமையான தண்டனைகளுக்கு பெயர் போன அவர் என் கவிதையை படித்ததும் சட்டென்று சிரித்துவிட்டார். அதை எல்லா மாணவர்களுக்கும் படித்துக்காட்டி விளக்கம் சொன்னதோடு  முயற்சி செஞ்சா நல்ல கவிஞனா வரலாம்னு வேறு  பாராட்டினார்.

      (அதை உண்மைன்னு அப்படியே நம்பி அப்பப்ப கவிதை எழுதி பயமுறுத்தறது வழக்கமாய்டிச்சி.)
     

     

15 கருத்துகள்:

  1. பிரமாதம் முரளி!! செய்யுளின் பொருள உள்வாங்கி...கண்ணுல பட்டத வச்சு சட்டுன்னு கவிதை எழுதினதுக்கு ஒரு சபாஷ்!!

    பதிலளிநீக்கு
  2. சமுத்ரா ,அனு இருவருக்கும் நன்றி.
    யாருமே வராத கடையில டீ ஆத்திக்கிட்டு இருக்கமோன்னு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
  3. அருமை..

    தங்கள் பக்கத்திற்கு வந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

    பதிலளிநீக்கு
  4. முன்னணிப் பதிவராகிய தாங்கள் என் வலைப்பூவிற்கு வருகை தந்ததோடு கருத்தும் தெரிவித்ததை பெருமையாகக் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. +2 வில் இந்த அளவு யோசித்து அதுவம்
    வாத்தியார் கற்பித்த பாட்டுக்கு எதிர்ப்பட்டு எழுதுவது
    பெரிய விசயம் முரளி.. வாழ்த்துக்கள் நல்ல முயற்சி..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    டி,என், முரளிதரன்(அண்ணா)

    அருமையான கவிதை வாழ்த்துக்கள் அண்ணா முதல் முறையாக இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன் இன்று 25,12,2012 இந்த ஆக்கம் வலைச்சரம் வலைப்பூவில் பதிவிடப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்
    நேரம் .மின்சாரம் இருக்கும் போது நம்ம பக்கமும் வாருங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. மாறுபட்ட சிந்தனையில் பள்ளியில் படிக்கும் போது நகைச்சுவையாகக் கவிதை எழுதியுள்ளதற்கும், அதை இங்கு பகிர்ந்துள்ளதற்கும் நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. கருத்தை உள் வாங்கி பிரசவித்த அழகான கவிதை வரிகள் முரளி சார் மின்சாரமிமையால் வலையுலகில் அதிகம் உலா வர முடியவில்லை ஆனாலும் உங்களை போன்ற நண்பர்களின் பதிவுகளை மொபைலில் படித்து விடுவேன் .எனது வலைப்பூவிற்கு அடிக்கடி வருகை தந்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . தாங்கள் எந்த மாவட்டத்தில் எந்த ஒன்றியத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றுகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் . உங்களின் கடுமையான பணிச்சுமைகளுக்கு இடையில் வலையுலகில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறீர்கள் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் சென்னையில் பணி புரிகிறேன்.

      நீக்கு
  10. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895