என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

வெள்ளி, 23 மார்ச், 2012

தெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா?

          
    தமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசும் மக்களுக்கு எனது உகாதி தின வாழ்த்துக்கள். தமிழ் நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக தெலுங்கு பேசும் மக்கள்தான் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன். தெலுங்கு  மொழி பேசும் மக்கள்  தமிழ் பேசும் மக்களுடன் இணக்கத்தோடு வாழ்பவர்கள்  (அதற்காக மற்ற மொழி  பேசுபவர்கள் அப்படி இல்லைன்னு சொல்லக் கூடாது.) இதற்கு அடையாளமாக தமிழ்நாட்டில் தெலுங்கு வருடப் பிறப்பிற்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது.  
    இவர்கள் தமிழர்கள் என்ற உணர்வோடுதான் வாழுகிறார்கள். இவர்களது தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியையே அதிகம் விரும்புகிறார்கள். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழில் புலமை பெற்றிருக்கிறார்கள். வீட்டில் தெலுங்கு பேசினாலும் நிறையப் பேருக்கு தெலுங்கில் எழுதப் படிக்கத் தெரியாது. அதுவும் இவர்கள் பேசும் தெலுங்கில் தமிழே அதிகம் இடம் பெறும். பெரும்பாலும் தமிழ் படங்களையே விரும்பிப் பார்ப்பார்கள். பள்ளிகளிலும் தமிழையே முதற் பாடமாக எடுத்துப் படிப்பவர்களாக இருக்கிறார்கள்.இப்போது உள்ள இளந் தலைமுறையினர் தெலுங்கு அதிகமாகப் பேசுவதில்லை. சில குடும்பங்களில் குழந்தைகள் தாயிடம் தெலுங்கு பேசுவார்கள் ஆனால் தந்தையிடம் தமிழ்தான் பேசுவார்கள். இவர்கள் பேசும் தெலுங்கை தெலுங்கு அறியாத தமிழர்களும் புரிந்துகொள்ள முடியும்.
    தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தெலுங்கு பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆந்திரப் பகுதிகளில் இருந்து   குடிபெயர்ந்து வந்திருக்கலாம். கிருஷ்ண தேவராயர் காலத்தில் அதிகமாக தமிழகத்திற்கு வந்திருக்கக்  கூடும். இவர்களுக்கே இது நினைவில் இருக்குமா என்பது ஐயமே!
  இவர்கள் அனைவரும் தங்களை தமிழர்களாகத்தான் நினைக்கிறார்கள். பெரும்பாலும் தமிழின்மீது ஆர்வம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இவர்கள் தெலுங்கைவிட அதிகம் தமிழை நேசிப்பவர்களாக இருப்பதைக் காண முடியும். இங்குள்ள தமிழ் பேசும் மக்களும் இவர்களை வேற்று மொழியினர் என்ற மனோபாவத்துடம் பார்ப்பதில்லை.
        சர்வபள்ளி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆசிரியாக பணியைத் தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர்தான். தாய்மொழி தெலுங்காக இருப்பினும் தமிழகத்தில் வாழ்ந்து பெருமை சேர்த்தவர். 
    திரு கா.ம.வேங்கட ராமையா என்பவர் சிறந்த தமிழறிஞர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பட்டபோது கை எழுத்து  சுவடித் துறையின் முதல் தலைவராகப் பணியாற்றியவர். கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ் கலாநிதி, தமிழ் மாமணி முதலிய பட்டங்களைப் பெற்றவர். இவரது தாய் மொழி தெலுங்கு.
     இன்றுவரை தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்துவரும் ம.தி.மு.க. தலைவர் திரு வைகோ. தமிழில் புலமை பெற்றவர் என்பது நமக்குத் தெரியும். அவர் சிறந்த தமிழ் பேச்சாளர் என்பதையும் அறிவோம். இளையராஜா திருவாசகம் சிம்போனி வடிவில் வெளியிட்டபோது தமிழ் இசை பற்றி அவர் ஆற்றிய உரை கட்சி பேதமின்றி அனைவராலும் பாராட்டப்பட்டது. இவரும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
       நமது கேப்டன் விஜயகாந்தும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்தான். இவர்கள் யாவரையும் தமிழினத்துடன் இருந்து பிரித்துவிட முடியாது.
      சுந்தரத் தெலுங்கு வீட்டுக்குள் பேசினாலும் உணர்வால் தமிழர்களாக வாழ்ந்து  கொண்டிருக்கும் அனைவருக்கும் இன்றைய தெலுங்கு வருடப் பிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.          
 எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழின்மீதும் தமிழர் மீதும் பற்றுக்கொண்டவர் அனைவரும் தமிழர்களே.
*************************************************************
  இதையும் படித்தால் மகிழ்வேன்.  
  வெள்ளைத்தாள்    

30 கருத்துகள்:

விமலன் சொன்னது…

பதிவின் முடிவு வரிகளே கட்டுரைக்கு அழகூட்டுவதாய்.நன்றி. வணக்கம்.

வே.சுப்ரமணியன். சொன்னது…

தென்னிந்திய மொழிகள் திராவிட மொழிகள் என அழைக்கப்படுகிறது. திராவிட மொழிகளில் முதன்மையானதாக தமிழ் போற்றப்படுகிறது. தமிழிலிருந்து பிரிந்து சென்றதுதான் சக திராவிட மொழி ! என்பதையும் நாம் அறிவோம்! நல்லதொரு பதிவு. தொடரட்டும்!

வே.நடனசபாபதி சொன்னது…

நல்ல பதிவு. ‘தமிழின்மீதும் தமிழர் மீதும் பற்றுக்கொண்டவர் அனைவரும் தமிழர்களே.’ என்ற உங்கள் கருத்து ஏற்புடையதே. தந்தை பெரியாரின் தாய்மொழி கன்னடம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

தந்தை பெரியாரின் தாய் மொழியும் தெலுங்குதான் -- பெரியாரின் தாய் மொழி கன்னடம். நாயக்கர் என்பதால் நிறைய பேர் தெலுங்கு என்று தவறாக நினைத்துக்கொண்டுள்ளார்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல அலசல் ! தெரியாத பல தகவல்கள் ! நன்றி நண்பரே !

சார்வாகன் சொன்னது…

நல்ல பதிவு சகோ,

தமிழை நேசிக்கும் தமிழராக் வாழ்ந்து தமிழர் நலம் நாடுபவர் தமிழரே!!
உகாதி கன்னட சகோதரர்களுக்கும் அதே தினமே!
உகாதி வாழ்த்துக்கள்உகாதி கன்னட சகோதரர்களுக்கும் அதே தினமே!

உகாதி வாழ்த்துக்கள்

நன்றி

பரமசிவம் சொன்னது…

தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தும் தமிழ்ப் பற்று இல்லாத தமிழர்கள் இருக்கிறார்கள்.
பெரியார், வைகோ போன்றவர்களைப் பார்த்து அவர்கள் திருந்த வேண்டும்.

T.N.MURALIDHARAN சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல அலசல் ! தெரியாத பல தகவல்கள் ! நன்றி நண்பரே !
திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

T.N.MURALIDHARAN சொன்னது…

பரமசிவம் அய்யா அவர்களுக்கு கருத்து தெரிவித்ததற்கு நன்றி.

T.N.MURALIDHARAN சொன்னது…

முதன் முறையாக எனது பதிவைப் பார்வையிட்டு கருத்துக் கூறிய விமலன் அவர்களுக்கு நன்றி

T.N.MURALIDHARAN சொன்னது…

எனது பதிவுகளைப் பார்வையிட்டு தொடர்ந்து ஆக்கபூர்வமான கருத்துக்களைக் கூறிவரும் நண்பர் தண்ணீர்ப் பந்தல் சுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி.

T.N.MURALIDHARAN சொன்னது…

நடனசபாபதி அவர்களுக்கு நன்றி.

karutha சொன்னது…

இங்கு வாழும் தெலுங்கு பேசும் மக்கள் அனைவரும் தமிழர்களே! இவர்கள் இனி ஒருநாளும் தெலுங்கர்கள் அல்ல! ஏன் ஏன்றால் இவர்களுக்கும் ஆந்திராவிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆகவே நாம் அவர்களை தமிழர்களாக மட்டுமே பார்க்க வேண்டும் !உகாதி நல்வாழ்த்துக்கள் .

T.N.MURALIDHARAN சொன்னது…

உண்மைதான் இங்கு வாழும் தெலுங்கர்களுக்கு ஆந்திராவோடு எந்த தொடர்பும் இல்லை என்பது உண்மை.

ஹேமா சொன்னது…

புதிய செய்தி.அறியத்தந்தமைக்கு நன்றி முரளி !

பெயரில்லா சொன்னது…

இது இலங்கையில் இருந்து ஒரு பதிவு. சிங்களமும் தமிழிலிருந்து மருவி வ்ந்ததே. இன்று தமிழனை மிதிக்கும் இவர்களைப் பார்க்கும்போது தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டு தமிழை நேசிப்பவர்களை போற்ற வேண்டும்.

ஸாதிகா சொன்னது…

எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழின்மீதும் தமிழர் மீதும் பற்றுக்கொண்டவர் அனைவரும் தமிழர்களே.
///

மிகச்சரியாக சொல்லி இருக்கின்றீர்கள்.

பெயரில்லா சொன்னது…

நாங்கள் என்றும் எங்கள் தாய் மொழி மறந்ததும் இல்லை அது போல நாங்கள் என்றும் எங்களை வாழ வைக்கும் தமிழ் மொழியும் மறந்தது இல்லை இது எங்கள் உணர்வில் என்றும் இருக்கும் ஒன்று. உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கு நன்றி.

Selvan சொன்னது…

நல்ல பதிவு சகோ

சந்திரகௌரி சொன்னது…

நல்ல பதிவு தெலுங்கு மக்களாக இருந்தாலும் தமிழை மதிப்பவர்களை நாமும் மதிப்போம்.

பெயரில்லா சொன்னது…

சிங்களம் என்னதான் அதிக திராவிட பழக்கங்களை உள்ள்வாங்கி இருந்தாலும்,தாம் அரியர் என்றே பெருமித படுகிறர்கள்,ஆனால் உண்மையில் சிங்களவர்களில்
திராவிட கலப்பே அதிகம்.என்னதான் தெலுங்கு அதிக தமிழில் இருந்து அதிக வேறுபட்டு இருந்தாலும், தமிழர்களுடன் சுமூகமாக அதிகம் தெலுங்கு மக்களே உள்ளனர்.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

Kousalya சொன்னது…

நல்லதொரு சிந்தனை...

தெலுங்கை தாய் மொழியாக கொண்டிருப்பினும் தமிழில் இலக்கிய தரத்துடன் கவிதைகள், கட்டுரைகள் படைக்கும் பலரை அறிந்திருக்கிறேன்...

இறுதியில் நீங்கள் கூறியபடி தமிழ் மீது உண்மையான பற்று கொண்ட அனைவரும் தமிழர்களே !

வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

GOOD

I'm Ram சொன்னது…

வணக்கம் நண்பரே! நல்ல பதிவு.

தென் தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் ஓர் தெலுங்குக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் பெற்றோர், உறவினர்கள் அனைவரும் தெலுங்கு பேசுபவர்கள். வீட்டிற்குள்ளும்,
சுற்றுப்புறத்திலும் தெலுங்கு பேசுபவர்களே என்பதால் நான் பள்ளிக்குச் செல்லும் வரையில் என் பால்யம் முழுதும் தெலுங்கு பேசும், பேசிய சூழலிலேயே வளர்ந்தவன். தமிழ் எனக்கு என் வீட்டில் வேலை செய்த பணியாட்கள், மற்றும் பள்ளி வாயிலாகவே அறிமுகமானது (பின்னர் வீட்டிலிருந்த புத்தகங்கள்). எங்கள் ஊரின் பெரும்பாலான மக்கள் தெலுங்கு பேசுபவர்கலேயாததால் பள்ளியிலும் பல மாணவர்கள் தெலுங்கிலேயே பேசிக்கொள்வோம். ஏதாவது சாமான்கள் வாங்க கடை வீதிக்குச் சென்றால் அங்கும் தெலுங்கே.

நம்முடைய உணர்வு மற்றும் சிந்தனைகளை எந்த மொழியில் எண்ணுகிறோமோ, நம் கற்பனைகளை எந்த மொழியில் காண்கிறோமோ அதுவே நம் தாய்மொழி என்பது பொதுவான கருத்து.

"ஆங்கிலேயர்களுடன் கூடிப் பிறந்தவர்கள் தங்களை ஆங்கிலோ-இந்தியர் என்று கூறிக் கொண்டார்களே அதைப் போலவா?" என்று நண்பர் கேட்டிருந்தார்.

ஆங்கிலோ-இந்தியர்களுக்கு இந்திய மொழி தெரிந்திருக்கும். ஆனால் அவர்களால் ஆங்கிலத்தில் மட்டுமே சிந்தனை செய்ய இயலும். இதை நீங்கள் சந்திக்கும் இயலும் எந்த ஒரு ஆங்கிலோ-இந்தியரிடம் வேண்டுமானாலும் தெரிவு செய்து கொள்ளலாம்.

பிறப்பால், நான் ஓர் தெலுங்கன் என்றாலும் என்னால் தெலுங்கில் சிந்திக்க இயலாது. என் சிந்தனையால், உணர்வால் நான் தமிழனாகவே உணர்கிறேன். என் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தாய் மொழி தமிழ் என்றே பதிவு செய்துள்ளேன்.

-ராம்.

T.N.MURALIDHARAN சொன்னது…

நன்றி நண்பரே! உங்களைப்போலவே நிறைய பேர் உள்ளனர். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

துளசி கோபால் சொன்னது…

என்னை கள்ளத்தமிழர் என்று ஒரு இலங்கைத் தோழி சொல்லிட்டாங்க!
அண்ணன் மகளின் திருமண ஃபோட்டோ ஆல்பம் பார்த்துக்கிட்டு இருந்தவங்க சொன்னதுதான்.

எங்க வீட்டில் தெலுங்கு பேசும் பழக்கம்.

பெயரில்லா சொன்னது…

well said!...thanx!!

ttpian சொன்னது…

But onething is sure:when 1,50,000 tamil people were burned in ashes in tamileelam,the so called tamil community in TN was silent!
whereas telegu person likes me,still worrying about the growth of tamil community in tamil nadu:
TASK: Eradicate congress+BJP&(those who carry chariot for these rogues)

viyasan சொன்னது…


அப்படியானால். ஆங்கிலத்தின் மீதும், ஆங்கிலேயர் மீதும் பற்றுக் கொண்ட தமிழர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களே? :)